🪔 நம் உடலே நரகம். நாம் இவ்வுடல் என்ற தவறான எண்ணமே நரகாசுரன். இத்தவறான எண்ணத்தை விட்டொழித்தலே தீபாவளி - கொண்டாட்டம் - பெருமகிழ்ச்சி - மரணமில்லாப் பெருவாழ்வு!
🪔 நரகாசூரன் பன்றிப் பெருமாளுக்கும் நிலமகளுக்கும் பிறந்தவர் - நிலமகள் என்பது நமது உடல். பன்றிப்பெருமாள் என்பது மெய்யறிவு பெறாத நாமே.
(பன்றித்திருவிறக்க கதையில் பன்றிப்பெருமாள் கடலுக்குள் சென்று பூமாதேவியை மீட்டு வருவார். இவ்வுருவகக் கதையில் வரும் பூமாதேவி மெய்யறிவைக் குறிக்கும். பூமா எனில் முழுமை. ஆனால், பூமி என்று தவறாகப் பொருள் கொண்டுவிட்டனர். இக்கதையில் வரும் கடல் என்பது நமது உடல். கடலுக்குள் செல்லும் பெருமாள் என்பது மெய்யறிவுக்காக வடக்கிருக்கும் நாம். பூமாதேவியுடன் திரும்ப வரும் பெருமாள் என்பது மெய்யறிவு பெற்று உலக வாழ்க்கைக்கு திரும்பும் நாம். கடலுக்குள் செல்லும் போதும், பூமாதேவியுடன் வெளிப்படும் போதும் பெருமாள் பெருமாள் தான். வேறுபாடு பூமாதேவி மட்டுமே. இவ்வாறே, மெய்யறிவு பெறுவதற்கு முன்னும், பெற்ற பின்னும் நாம் நாம் தான். வேறுபாடு நம்மைப் பற்றிய மெய்யறிவு மட்டும் தான்.)
நம்மைப் பற்றிய தெளிவு இல்லாததால் அழிவற்ற நம்மை (பெருமாள்) அழியும் உடலுடன் (நிலமகள்) இணைத்துக் கொள்கிறோம். விளைவு... "நாம் இவ்வுடல்" என்ற நரகாசூரன்!!
🪔 நரகாசூரனின் இறப்பு. தனது இறப்பு தன் தாயின் மூலமாக மட்டுமே நிகழ வேண்டும் என்ற பேறுபெற்று வந்தவன் நரகாசூரன். இதன்படி, கண்ணபிரான் திருவிறக்கத்தில் கண்ணபிரான் (தந்தை) போராடி அயர்ந்த பின்னர், சத்யபாமா (தாய்) போராடி நரகாசூரனைக் கொல்லுவார்.
இக்கதையில் வரும் கண்ணபிரான் நாமே. எவ்வளவு முட்டிமோதினாலும் "நாம் இவ்வுடல்" என்ற பொய்யறிவு நம்மைவிட்டு விலகாது. இது விலக 2 வழிகள் உண்டு: 1. பல காலம் வடக்கிருந்து, மிகவும் முதிர்ந்த (பக்குவமடைந்த) பின்னர் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 போன்ற மெய்யாசிரியர்களின் அறிவுரைகளால் நமதுண்மையை உணர்தல், 2. மொத்த அண்டமும் நமக்குள் இருந்தாலும், நாம் அதற்குள் இருப்பது போல் கண்கட்டு வித்தைக் காட்டிக்கொண்டிருக்கும் அன்னை மாயை (சத்யபாமா) சில கணங்கள் காட்சிகளைத் தவிர்த்து நமதுண்மையை நாம் உணர வழிவிடுதல்.
இரண்டாவது வழியில் அன்னையால்தான் "நாம் இவ்வுடல்" என்ற எண்ணம் (நரகாசூரன்) அழிகிறது என்றால் ஏற்றுக் கொள்வோம். முதலாவது வழியிலும் அன்னை தான் கொல்கிறார். அறிவுரையை வெளிவிட்ட மெய்யாசிரியர் சிவப்பரம்பொருளில் நிலைபெற்றவராய் இருந்தாலும், அவரிடமிருந்து வெளிப்பட்ட அறிவுரை உயிரற்ற பொருளாகிறது - அன்னையின் கூறாகிவிடுகிறது (அம்சமாகிவிடுகிறது).
ஆக, இரு வழிகளிலும் அன்னை தான் "நாம் இவ்வுடல்" என்ற தவறான எண்ணத்தை அழிக்கிறார். இதையே அன்னை சத்யபாமாவால் நரகாசூரன் இறப்பதாக உருவகப்படுத்தியுள்ளனர்.
🪔 "கங்கை நீரில் குளித்தீரா?" - தீபாவளியன்று கேட்கப்படும் பாரம்பரிய கேள்வி. நலம் விசாரிப்பது போல.
மெய்யறிவில் நிலைபெறும்போது நம் உச்சந்தலையிலுள்ள பிடியுட்டரி சுரப்பி நன்கு சுரக்கும். அதன் வெள்ளை நீர் (கங்கை நீர்; கங்கை - வெள்ளை) உடலெங்கும் பரவி, மற்ற சுரப்பிகளைத் தூண்டி உடலை சீராக்கி, மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதை, சிவபெருமானின் ஓவியத்தில் அவரது தலையிலிருந்து கங்கை நீர் வெளிப்படுவது போல் வரைந்திருப்பார்கள்.
"கங்கை நீரில் குளித்தீரா?" என்ற கேள்வியின் உட்பொருள்:
- மெய்யறிவு பெற்றீரா?
- உமதுண்மையை உணர்ந்தீரா?
- சிவப்பரம்பொருளாய் சமைந்தீரா?
- தன்மையுணர்வில் நிலைபெற்றீரா?
🪔 இவ்வளவு பொருள் பொதிந்த திருவிழாவாக இருந்தாலும், வடக்கத்திய தீபாவளி நம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் திருமலை நாயக்கர் காலத்தில்தான். இந்நாளன்று வடகத்தியர் தீபங்களை ஏற்றுவதற்கு அடிப்படை நமது கார்த்திகை திருநாள்! இடைக்காட்டுச் சித்தர் உணர்ந்து உணர்த்திய "ஏகன் அநேகன்" என்ற பேருண்மையைக் கொண்டாடும் கார்த்திகை திருநாள் திருவிழா அவ்வளவு தாக்கத்தை ஆரியர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
oOOo
ஒரு தீபாவளி திருநாளுக்காக பகவான் எழுதிய பாடல்:
நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே
பொருள்: அழியும் இவ்வுடலா நான்? இவ்வுடலை ஆளும் நரகாசூரன் எங்கு உள்ளான்? என்று ஆராய்ந்து, தானே உள்ளபொருள் என்று தெளிந்து, அந்த மெய்யறிவினால் (ஞானத்திகிரி - பெருமாளின் கையிலுள்ள சக்கிராயுதம்) தான் இவ்வுடல் என்ற தவறான எண்ணத்தை (நரகாசூரனை) விட்டொழித்தவனே (கொன்றவனே) நாராயணன். அப்படி விட்டொழித்த நாளே நரகசதுர்த்தசி எனும் தீபாவளி நன்னாளாம்.
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
oOOo
பி.கு.: வைணவத்திற்கும் கண்ணபிரானுக்கும் எந்த தொடர்புமில்லை. வைணவம் தோன்றியது பொது ஆண்டு 700களில். நிலைபெற்றதோ 1500களில் (விஜயநகர & நாயக்க மன்னர்களின் காலத்தில்). ஆனால், கண்ணபிரான் வாழ்ந்ததோ சுமார் 5,100 ஆண்டுகளுக்கு முன்னர்!