ஆதிமலை ஆதி அநாதிமலை அம்மைஒரு
பாதிமலை ஓதிமறை பாடுமலை - நீதிமலை
தந்த்ரமலை யந்த்ரமலை சாற்றியபஞ் சாக்கரமாம்
மந்த்ரமலை அண்ணா மலை
-- அண்ணாமலை வெண்பா - #66
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
🔸ஆதிமலை - திருவண்ணாமலையின் பழமையைப் பற்றி பாடுகிறார் ஆசிரியர். புவிப்பந்தின் வயதில் மூன்றில் ஒரு பங்கு வயதுடையது. இம்மலையோடு ஒப்பிடுகையில் இமயமலை கை குழந்தையாகும்!!
🔸ஆதி அநாதிமலை - உள்ளபொருளைப் பற்றி பாடுகிறார். எல்லாம் தோன்றுவதற்கு முன்னும், எல்லாம் அழிந்த பின்னும் இருப்பது உள்ளபொருளாகிய இறைவன் மட்டுமே.
🔸அம்மை ஒரு பாதிமலை - அசைவற்றது இறைவன். அசைவது அன்னை. இரண்டும் சேர்ந்ததே உலகம். இது பற்றிய ஆராய்வுகள் காஞ்சியில் தொடங்கி, திருவருணையில் நிறைவு பெற்றிருக்கிறது. அசைவற்றதிற்கு வலது, அசைவதற்கு இடது என்று முடிவும் இங்கு எய்தப்பட்டிருக்கிறது. எனவே தான் "அன்னை இடப்பாகம் பெற்ற திருத்தலம்" என்று போற்றுகின்றனர்.
🔸ஓதிமறை பாடுமலை - எனில், இறைவன் ஆரிய நூல்களை ஓதிக் கொண்டிருக்கிறார் என்று பொருளல்ல!
"தன்மையின் உண்மையை தான் ஆய தன்மை அறும்" என்பது பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 கண்டுணர்ந்து உலகுக்கு தெரிவித்த ஒரு தலைசிறந்த மெய்யறிவியல் உத்தி. இது போன்று பல மெய்யறிவாளர்கள் கண்டுணர்ந்து தெரிவித்த பேருண்மைகள் மற்றும் உத்திகளின் தொகுப்பே திருமறைகள். தோன்றும் ஒவ்வொரு மெய்யறிவாளரும் புதிதாக ஒன்றை உணர்ந்து சொல்வார். அல்லது, ஏற்கனவே இருப்பனவற்றிற்கு உரம் சேர்ப்பார். எனவே தான் "பாடும் மலை" என்று நிகழ்காலத்தில் பாடியுள்ளார் ஆசிரியர்.
🔸நீதிமலை - நீதி என்ற சொல்லுக்கு நெறி, முறை, மெய், நியதி என பல பொருள்கள் இருந்தாலும் இதன் அடிப்படை பொருள் கட்டுபடுத்துவதாகும். நிதி எனில் பொங்குவது, பெருகுவது, வெளிவருவது. குறிலுக்கு எதிரான பொருளை நெடில் தரவேண்டும். ஆகையால், நீதி என்பது அடக்குவது, கட்டுப்படுத்துவது, வெளிவராமல் இருப்பது என்று விரியும். எதை அடக்குவது...? மனதை அடக்குவது, கட்டுப்படுத்துவது, வெளிவராமல் தடுப்பது. அதாவது, பற்றற்றிருப்பது. பற்றற்ற மலை. பற்றற்ற இறைவன். இறைவன் பற்றற்றவர்.
🔸தந்த்ரமலை, யந்த்ரமலை & மந்த்ரமலை
🔹த்ர எனும் ஆரிய எழுத்துக்களின் பொருள் விடுவிப்பது.
🔹மந்த்ர எனில் மனதை தளைகளிலிருந்து, பற்றுகளிலிருந்து விடுவிப்பது. ஒரு சொல்லையோ, சொற்றொடரையோ திரும்ப திரும்ப "உருட்டிக்" கொண்டிருப்பதால் இது நடக்காது. அச்சொல்லின் / சொற்றொடரின் உட்பொருளை உணரவேண்டும். உணர்ந்ததை எக்கணமும் நினைவில் நிறுத்தவேண்டும். இப்பாடலில் வரும் "பஞ்சாக்கரம்" என்னும் திருவைந்தெழுத்தான "நமசிவாய" என்பது மிகச்சிறந்த மந்திரம் - பொருள் உணர்ந்து, அதன்படி நின்றால்!
🔹யந்த்ர எனில் உடலை விடுவிப்பது. இன்று இயந்திரம் எனில் நமது பணிச்சுமையைக் குறைப்பது என்று பொருள் கொண்டுவிட்டோம். ஆனால், இதன் உண்மையான பொருள், "உடல் எனும் தளையிலிருந்து நம்மை பிரித்துக்கொள்ள உதவுவது" என்பதாகும்.
🔹தந்த்ர எனில் மூச்சிலிருந்து / அசைவுகளிலிருந்து விடுவிப்பது. மூச்சு என்பது மனதின் தூல வடிவம் என்று அருளியிருக்கிறார் பகவான். மூச்சிலிருந்து விடுபடுவது என்பது மனதிலிருந்து விடுபடுவதாகும். அசைவுகளிலிருந்து விடுபடுவது என்பது அசைவற்ற நிலைக்கு செல்வதாகும். அசைவற்ற நிலை என்பது நிலைபேறு.
ஆக, மந்த்ர தந்த்ர யந்த்ர என்பவை நாம் மெய்யறிவில் நிலைபெற உதவும் கருவிகள் / உத்திகள்.
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮
No comments:
Post a Comment