கதித்தமுனி பாலகன்மார்க் கண்டனையே சீறிப்
பதைத்துவரும் காலன் படவே - உதைத்தஒரு
வீரமலை சற்குருவாய் மேவிஎனை ஆண்டபட்ச
வாரமலை அண்ணா மலை
-- #அண்ணாமலை #வெண்பா - #68
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
🔸கதித்தமுனி ... வீரமலை
சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றான திருக்கடவூர் தலவரலாற்றைப் பாடுகிறார் ஆசிரியர். அதாவது, திரு மார்க்கண்டேய மாமுனிவரைக் 🌺🙏🏽 கவர வந்த காலனை, இறைவன் தனது காலால் உதைத்த வரலாறு.
வீரட்டத்தலங்கள் - இத்தலங்களில் சமாதியடைந்திருக்கும் பெருமான்கள் கண்டுணர்ந்து தெரிவித்த பேருண்மைகள் / உத்திகள், ஆன்மிக உலகில் பெரும் தாக்கத்தை / மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். எனவேதான் "வீரட்டானம்" என்ற சிறப்பு பெயரால் அழைக்கின்றனர்.
திருக்கடவூர் - மார்க்கண்டேய மாமுனிவரின் சமாதி திருத்தலம். இவரது சமாதியின் மேல் வைக்கப்பட்ட அடையாளம்தான் மூலவர் அமுதுடல் கொண்ட அண்ணல் (அமிர்தகடேசுவரர்). இவர் மெய்யறிவு பெறும் போது இவருக்குள் நடந்தவைதான் திருக்கடவூர் தலவரலாறாகியிருக்கிறது. இவர் கண்டுணர்ந்து தெரிவித்தவை தான் திரு சிங்கப்பெருமாள் திருவிறக்கம் மற்றும் திரு முருகப்பெருமான் பிறப்புக் கதைகளுக்கு அடிப்படையாகும்.
நாம் காணும் யாவையும் நம்முள்ளிருந்து உதிப்பவை. வெறும் தோற்றமாத்திரம் தான். நாமே உள்ளபொருள். இதை நாம் உணரமுடிவதில்லை. பல காலம் வடக்கிருந்து பக்குவமடைந்த பின், ஒரு சமயம், நம்முள்ளிருந்து ஒரு ஆற்றல் வெளிப்பட்டு நாம் காணும் காட்சிகளை நீக்கிவிடும். அது வெளிப்படும் போதே நாம் யாரென்று உணரத் தொடங்கிவிடுவோம். காட்சிகள் நீங்கிய பிறகு இன்னமும் தெளிவாக உணர்ந்துவிடுவோம். இந்நிகழ்வே மெய்யறிவு பெறுதல் எனப்படும். இதனால் ஏற்படும் உடனடி விளைவு: சாவைப் பற்றிய அச்சம் நீங்குதல்!
பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 தனது 16 வயதில், மதுரையிலுள்ள தனது சித்தப்பபாவின் வீட்டில் மெய்யறிவு பெற்றார். "இதன் பின்னர் என்ன நடந்தது?" என்று ஒரு அன்பர் பின்னொரு நாள் கேட்டபோது பகவான் கொடுத்த பதில்: அத்தோடு மரணபயம் என்னைவிட்டு விலகிற்று!!
நம்முள்ளிருந்து ஒரு ஆற்றல் வெளிப்பட்டு, காட்சிகளை நீக்கி, நாம் யாரென்று நமக்கு உணர்த்தி, சாவைப் பற்றிய அச்சத்தை போக்குவதைத்தான் "சிவலிங்கத்திலிருந்து பெருமான் வெளிப்பட்டு காலனை உதைத்து மார்க்கண்டேயருக்கு அருளினார்" என்று உருவகப்படுத்தியுள்ளனர்.
காலனை உதைத்தல் = சாவைப் பற்றிய அச்சம் நீங்குதல் = மெய்யறிவு பெறுதல்!!
மரணபயம் மிக்கு உள அம் மக்கள் அரணாக
மரண பவம் இல்லா மகேசன் -- சரணமே
சார்வர்; தம் சார்வொடு தாம் சாவு உற்றார்; சாவெண்ணம்
சார்வரோ சாவாதவர் நித்தர்
-- உள்ளது நாற்பது
🔸சற்குருவாய் மேவிஎனை ஆண்டபட்ச வாரமலை
இறைவன், தனது மெய்யாசிரியர் குகைநமச்சிவாயர் 🌺🙏🏽 வடிவில் வந்து, தன்னை அன்பாக ஆட்கொண்டதைப் பற்றி பாடுகிறார் ஆசிரியர்.
(பட்சம் - அன்பு. "ஒரு பக்கமாக" என்றும் பொருளுண்டு. எனில், "இறைவன் தன் மீது மட்டும் அதிக கருணைக் கொண்டதாகப்" பாடுகிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.)
வாரமலை - சரிவான மலை.
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮
No comments:
Post a Comment