அண்ணாமலை வெண்பா பாடல் #68ல் வரும் திருக்கடவூர் தலவரலாறு உணர்த்தும் #நிர்விகற்ப #சமாதி (*) நிலையைப் பற்றி சிறிது எழுதியுள்ளேன். ஒரு ரமண அன்பருக்காக எழுதியது. சற்று மேம்படுத்தி இந்த இடுகையாக்கியுள்ளேன். சமயவியலில் ஈடுபாடு உள்ளவர்கள் எளிதில் பரிந்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு விட்டலாச்சாரியா படம் போல் தோன்றும்! 😛
oOOo
நாமே உள்ளபொருள்!
ஆனால், பகவான் திரு ரமணர் போன்ற ஒப்பற்ற மெய்யறிவாளர்கள் 🌺🙏🏽 எத்தனை முறை விளக்கினாலும், எவ்வளவு எளிதாக விளக்கினாலும் பெரும்பாலானோருக்குப் புரிவதில்லை. நுண்ணறிவும், நல்ல முதிர்ச்சியும் கொண்ட ஒரு சில அன்பர்கள் மட்டுமே உடனே புரிந்துகொள்வர். மற்றவர்களுக்கு திருவருள் துணைபுரிகிறது.
தகுந்த சமயம் வரும் போது நம்முள் ஒர் ஆற்றல் திரண்டு வெளிப்படுகிறது (முதலில் திரண்டு, பின்னர் வெளிப்படும்). இந்த ஆற்றல் திரண்டு வெளிவருவதற்குள் நாம் நம்மை உணர்ந்துவிடுவோம். அது வெளிவந்தவுடன் நாம் காணும் யாவும் விலகிவிடும். காட்சிகள் விலகுவது, நாம் அணிந்திருக்கும் ஆபரணங்கள் கழட்டப்படுவது போலிருக்கும். இப்போது எங்கும் இருள் மற்றும் பேரமைதி நிலவும். உலகக் காட்சிகளைக் காணும் போது "இருளைக் காண்கிறோம்", "அமைதியாக உணர்கிறோம்" என்ற உணர்வுகள் இருக்கும். ஆனால், இப்போது, எல்லாம் நமக்குள் இருப்பதை உணர்வோம். "காண்கிறோம்", "உணர்கிறோம்" என்பது போய் "இருக்கிறோம்" என்ற உணர்வுமாத்திரமாக இருப்போம் ("இருளாய் இருக்கிறோம்", "அமைதியாய் இருக்கிறோம்").
இத்தனையும் ஓரிரு நொடிகளில் நடந்துவிடும். இவை நடந்து கொண்டிருக்கையில் நம்முள் பின்வரும் வரிசையில் உணர்வுகள் தோன்றும்:
- முதலில், சிறு வியப்பு
- பின்னர், பெரும் மகிழ்ச்சி
- இறுதியில், பேரமைதி!!
நாம் இது நாள் வரை தேடிய பல கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடும். பகவான் அருளிய பல அறிவுரைகளின் உட்பொருள் புரிந்துவிடும். இந்நிலையைத்தான் "நிர்விகற்ப சமாதி" என்று எனது இடுகைகளில் குறிப்பிடுகிறேன்.
நமது வினைத்தொகுதி தீர்ந்து போயிருந்தால் இப்படியே இருந்துவிடுவோம். இல்லையெனில், அன்னை மாயை மீண்டும் தனது வேலையைத் தொடங்குவார். இன்னதென்று புரியாத கொடுமையான உருவங்கள் தோன்றும். அச்சப்படாமல் இருந்தோமானால், அடுத்து காமத்தைப் பயன்படுத்துவார்.
எடுத்துக்காட்டு: தாங்கள் பகவானது தீவிர அன்பர் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், வேறொரு பெருமானது அறிவுரையைப் படித்துக்கொண்டிருக்கும் போது மேற்கண்ட நிலையை அடைந்துவிடுகிறீர். தங்களை வெளிக்கொணர அன்னை இப்படியொரு எண்ணத்தை தோற்றுவிப்பார்: இந்நிலையை பகவானது அறிவுரையால் அல்லவா அடைந்திருக்க வேண்டும்? வேறொருவரால் அல்லவா அடைந்திருக்கிறோம்! இது பகவானது புகழுக்கு இழுக்கல்லவா?
இப்போது, தாங்களும் சிரித்துக்கொண்டே (சிரிப்பதற்கு உடல் இல்லை. சிரிப்பு என்ற உணர்வுடன்.) அன்னையுடன் உடன்பட்டு வெளிவருவீர். (சிரிப்பதற்கு காரணம் - சிறு பிள்ளைத்தனமான அன்னையின் நோக்கத்தை (லீலையை) தாங்கள் புரிந்துகொண்டதால்)
வெளிவந்த பின்.... உலகத்திற்குள் நாமிருப்போம்!! பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிடுவோம்.
இந்த துய்ப்பின் மூலம்:
- நாம் யாரென்று உணர்ந்து கொண்டோம்
- மனம், மாயை என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டோம்
- இதுவரை புரியாமலிருந்த எத்தனையோ செய்திகள் புரிந்துவிடும். இனி எழும் கேள்விகளுக்கும் விடை காணமுடியும்.
மேற்கொண்டு பயணிக்க, சகஜ நிலையை அடைய, இவை பெரும் உதவியாக இருக்கும். திருவருளும் பகவானது அறிவுரைகள் வழியாக துணைபுரியும்.
oOOo
இனி, புகழ்பெற்ற சில உருவகங்களையும், உருவகக்கதைகளையும் மேற்கண்ட துய்ப்பை வைத்துப் பார்ப்போம்.
🌷 திருக்கடவூர் தலவரலாறு - நம்முள்ளிருந்து ஆற்றல் வெளிப்பட்டதை சிவஅடையாளத்திலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டதாகவும், இதன் விளைவாக மரணபயம் (எமபயம்) நீங்குவதை எமனை உதைத்ததாகவும் உருவகப்படுத்தி இருக்கிறார்கள்.
🌷 சிங்கப்பெருமாள் திருவிறக்கம் - திருக்கடவூர் தலவரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டக் கதை. சிவஅடையாளத்தை தூணாகவும், சிவபெருமானை சிங்கப்பெருமாளாகவும் மாற்றியிருப்பர். அங்கு "மரணபயம் நீங்கியது" என்பதை இங்கு "ஆணவம் நீங்கியது" (இரண்யகசிபுவின் இறப்பு) என்று மாற்றியிருப்பர்.
🌷 முருகப்பெருமான் பிறப்பு - நம்முள் திரண்ட ஆற்றலே கந்தன் (திரண்டவன்) எனப்படும். இந்த ஆற்றல் திரளும்போதுதான் நம்மை நாம் உணர்கிறோம். எனவேதான் இவர் சுவாமிநாதன், சிவகுருநாதன், தந்தைக்கு மந்திரம் சொன்னவர் என்று போற்றப்படுகிறார். இவர் முழுவதும் வெளிவருவதற்குள்ளேயே இவரது பணி முடிந்துவிடுவதால் இவர் சிவக்குமாரன் - அன்னையின் தொடர்பில்லாமல் பிறந்தவர் - என்றழைக்கப்படுகிறார்.
🌷 ஆற்றல் வெளிப்பட்டு உலகக்காட்சி நீங்குவது என்பது ஆபரணங்கள் கழட்டப்படுவது போலிருக்கும். இதை வைத்தே "பெருமாள் அலங்காரப்பிரியர்" என்று அருளியிருக்கிறார் திரு சட்டைமுனி சித்தர் 🌺🙏🏽 (திருவரங்கப் பெருமாள்).
🌷 சமாதியை விட்டு நம்மை வெளிக்கொணர இன்னதென்று சொல்லமுடியாத கொடுமையான உருவங்களைத் தோற்றுவித்த மாயை தான் காளியன்னை, கொற்றவை (துர்கை - கோட்டையைக் காப்பவர்) எனப்படுகிறார். (அழிக்கவே முடியாத பரம்பொருளையும் எதிர்ப்பவர் என்பதால் தான் சோழர்கள் இவரை தமது காவல் தெய்வமாக, போர் தெய்வமாகக் கொண்டிருந்தனர்)
🌷 காளியன்னையிடம் தப்பித்த பின், காமத்தைக் கொடுத்து நம்மை கவிழ்த்த மாயையே சிவகாமி எனப்படுகிறார். வைணவத்தில் இவர் வெண்ணெய் திருடிய கண்ணனாகிறார்.
oOOo
உலகக் காட்சிகளைத் தோற்றுவிக்கும் அன்னைக்கு உலகையும் நடத்த முடியாதா? ஏன் சிவபரம்பொருளை வெளிக்கொணர முயற்சிக்கிறார்? இதனால் தான் சிவமே உயர்ந்தது எனப்படுகிறது. பெண்தெய்வ வழிபாடும், அதிலிருந்து தோன்றிய வைணவமும் அடிப்பட்டுப் போவது இங்கு தான்.
oOOo
இணைப்புப்படம்: பாதாள லிங்கம், அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை. இந்த சிவஅடையாளத்தின் பின்னே பகவான் சில காலம் அசைவற்று அமர்ந்திருந்தார். இதை திரு சேஷாத்திரி சுவாமிகள் 🌺🙏🏽 உணர்ந்து வெளியே சொன்னதால் பகவான் நமக்கு கிடைத்தார். இல்லையெனில், பகவானது உடல் பூச்சிகளுக்கு இரையாகியிருக்கும்.
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
oOOo
* - மோட்சம், சமாதி போன்ற ஆரியச் சொற்களுக்கு தமிழில் வீடுபேறு, நிலைபேறு என்ற அருமையான சொற்கள் உள்ளன. ஆனால், நிர்விகற்ப, சவிகற்ப, சகஜ சமாதிகளை நம் நிறைமொழியில் எவ்வாறு வழங்குவது என்று எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவு செய்து இவ்விடுகையின் கருத்துப்பகுதியில் பதிவிடவேண்டுகிறேன்.
உலகிலுள்ள அனைத்து மதங்களுக்கும் தாயாகிய சைவத்தை சமயமாகவும், உலகிலுள்ள மொழிகளின் தந்தையாகிய தமிழை மொழியாகவும் (வள்ளற்பெருமானின் 🌺🙏🏽 வாக்கு) கொண்ட நமக்கு நமது சொற்கள் தெரியவில்லை!! 😔 நம் இனத்தை நம் இனமே இன்று வரை ஆண்டிருந்தால், பராமரித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
No comments:
Post a Comment