Saturday, June 18, 2016

🌼 வீர வாஞ்சிநாதன் உயிர்தியாகம் செய்த நாள் (1911 - ஜூன் 17) 🌼


(தினமலர் - சென்னை - 17/06/2016)

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் சென்னைக்கு ஒருமுறை வந்த போது தனது உதவியாளரிடம் இரண்டு நல்ல ரக புடவைகள் வாங்கி வரச் சொல்லி உத்தரவிட்டார்.

உதவியாளருக்கு குழப்பம்.

தேவர் பிரம்மச்சாரி. அவர் எதற்கு புடவை வாங்க - அதுவும் சென்னையில்.

குழப்பத்தோடு புடவை வாங்கி வர, கூடவே கொஞ்சம் பழங்கள் வாங்கி வந்தார்.

தேவர் உதவியாளரோடு காரில் ஏறி சென்னை மயிலாப்பூரில் ஒரு சந்துக்கு முன் காரை நிறுத்தச் சொல்லி - உதவியாளர் புடவை மற்றும் பழ தட்டுடன் பின் தொடர சந்தில் இருக்கும் ஒரு வீட்டுக்குள் நொடிப் பொழுதில் நுழைகிறார்.

அங்கே அமர்ந்திருந்த பெண்மணியின் காலில் தேவர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்.
உதவியாளரிடமிருந்து புடவை/பழ தட்டை வாங்கி தன் பையிலிருந்து ரூபாய் நோட்டுக்களை புடவையின் ஊடே நுழைத்து அந்த பெண்மணியின் முன்னே சமர்பித்து சற்று தள்ளி அமர்ந்து நலம் விசாரித்து

"எந்த உதவி எப்போது தேவை பட்டாலும் தன்னை அணுகலாம்" என தேவர் சொல்ல

"அந்த மாதரசி ,'செய்திருக்கும் உதவிகளே போதுமானது - அதிகமும்' " என சொல்கிறார்.

சில நிமிடங்கள் கழிய - தேவர் மீண்டும் எழுந்து பெண்மணியின் கால்களில் விழுந்து வணங்கி விடை பெறுகிறார்.

தேவரின் உதவியாளருக்கு மண்டையே வெடித்து விடும் நிலை!

ஓரிரு நிமிட மெளனமான வாகனப் பயணம். பின்னர்,

"ஐய்யா, அந்த பெண்மணி யார்?" - உதவியாளர்

"என்தாய்" - தேவர்

"பார்த்தால் ஐய்யர் பெண்மணியாக" - உதவியாளர்

"ஆம். என் தாய். வீர வாஞ்சிநாதன் மனைவி" - என்று தேவர் உணர்ச்சியுடன் கண்கலங்கி சுதந்திர போராட்ட சிந்தனைக்குள் மூழ்கினார்...

"தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்" என வெறும் வார்த்தைகளால் கூறாமல் அதன்படி வாழ்ந்து காட்டியவர் தேவர் அவர்கள்.

"தென்னகத்து பகத்சிங்" என்று போற்றப்பட்ட வீர வாஞ்சிநாதன் மனைவிக்கு சுதந்திரத்துக்குப்பின் நேரு அரசால் குறைந்த பட்ச கெளரவம் கூட கிடைக்கவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட போது அது இனி தேவையில்லை என தன்மானத்துடன் ஏற்க மறுத்தவர் திருமதி. வாஞ்சி.

தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு அப்போதே திராவிட இயக்கங்களால் நன்கு விதைக்கப்பட்டு இருந்தது. அதனால் தமிழகத்திலும் அவர்களின் தியாகம் மறைக்கப்பட்டது.

லண்டனில் இந்தியா ஹவுஸ் மாளிகையில் வீரசாவர்கரின் ஆயுதப் போராளி இயக்கத்தில் (Free India Society) தளபதியாக விளங்கிய வ.வே.சு. ஐயர் பாண்டிச்சேரியில் சுதந்திரப் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தார்.

(இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில் உதவிகள் கிடைத்தன)

அவரிடம் ஆயுதப்பயிற்சி பெற்றவரே வீர வாஞ்சிநாதன்.

கப்பலோட்டிய தமிழன் வ.வு.சி-யை செக்கிழுக்க வைத்த திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் என்பவனை மணியாச்சி ரயில் நிலையத்தில் 1911 ஜூன் 17 காலை 6:30 மணிக்கு சுட்டுக் கொன்றுவிட்டு, தன் இயக்கத்தினரை பாதுகாக்க தானும் தன் வாய்க்குள் துப்பாக்கியை செலுத்தி சுட்டு வீரமரணம் அடைந்தார். 💐

அவரது உடலில் சட்டைப்பையில் ஒரு கடிதம் அவரால் எழுதி வைக்கப்பட்டிருந்தது. 📰 அக்கடிதத்தை படித்துப்பாருங்கள்......

"ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள்.

"ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.

"எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில்,

"கேவலம் ஒரு அன்னியனாகிய ஐந்தாம் ஜார்ஜ் (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது.

"அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம்.

"அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன்.

"இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.

- இப்படிக்கு, R. வாஞ்சி அய்யர்"


தேசத்தை நேசிப்பவர்கள் அனைவரும் வீர வாஞ்சிநாதன் தியாகத்தை நினைவு கொள்ளுங்கள்! 🙏

(மூலம்: திரு. ஆகாஷ் ரெட்டி பகிர்ந்த ஒர் இடுகையினை சிறிது மாற்றி மீண்டும் பகிர்ந்துள்ளேன்)

posted from Bloggeroid

2 comments:

  1. முத்துராமலிங்கம் பிறந்தநாள்: 30.10.1908
    வாஞ்சிநாதன் தற்கொலை 17.6.1911

    பொய் சொல்லலாம் அதுக்குன்னு இப்படியா.....

    ReplyDelete
  2. சரியாகப் படித்திருந்தால் புரிந்திக்கும் "தவறு செய்திருக்கிறார்கள். பொய் சொல்லவில்லை." என்று. இணைக்கப்பட்ட படத்தில் தேதி சரியாகத் தான் உள்ளது. தலைப்பில் தான் தவறு செய்திருக்கிறேன்.

    ReplyDelete