Thursday, August 1, 2024

திருக்குறள் #20: நீர்இன்று அமையாது உலகெனின்...


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு


-- திருக்குறள் #20 (வான் சிறப்பு)


பொதுவான பொருள்: நீர் இல்லாமல், நாம் வாழும் இவ்வையகம் இயங்காது. மழை பெய்யாவிட்டால், ஒருவரிடமும் ஒழுக்கமிருக்காது (மழையின்மை -> பஞ்சம் -> ஒழுக்கமின்மை -> மனிதமின்மை -> அனைத்தும் கோவிந்தா!).


இனி, வேறொரு பொருளை பார்ப்போம்.


🌷 மெய்யியலில், நீர் என்பது அசைவை (நிலையற்றதை) குறிக்கும். படைப்பில், அசையாதது, மாறாதது, என்றும் நிலைத்திருப்பது என்று ஏதேனுமிருக்கிறதா? இல்லை. தோற்றமும், மாற்றமும் & அழிவும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றன. எனவே, அசையும் பொருட்களில்லாமல் வையகமில்லை.


நீர்இன்று அமையாது உலகு = அசைவின்றி அமையாது வையகம்.


🌷 அடுத்தது, வான்இன்று அமையாது ஒழுக்கு.


மெய்யியலில், வான் என்பது மனதை குறிக்கும். வான் - விண் - விண்டு (விஷ்ணு) - மாயோன் - மாயை - மனம்.


ஒழுக்கு என்பது, இங்கு, பொருந்துகையை குறிக்கும். எதனோடு பொருந்தவேண்டும்? உள்ளபொருளோடு.


வெறுமனே பொருந்தி விடுவோமா? 😏 "தரும" அடி வாங்கினால்தானே "போதுமடா, சாமி" என்ற எண்ணமே வரும்! 😀 


அப்படி "தரும" அடி வாங்குவதற்கு என்னவேண்டும்? பற்றுகள் வேண்டும்.


பற்றுகள் எதன் வழியாக தோன்றும்? மனதின் வழியாக.


மனமின்றி பற்றுகள் கிடையாது. பற்றுகளின்றி தரும அடி கிடையாது. தரும அடியின்றி ஒழுக்கு கிடையாது.


வான்இன்று அமையாது ஒழுக்கு = மனமின்றி அமையாது உள்ளபொருளோடு பொருந்துகை.


இனி, இரண்டையும் சேர்ப்போம்:


அசைவின்றி அமையாது வையகம். இது போன்று, அசையும் மனமின்றி கிட்டாது வீடுபேறு.


oOo


🌷 கடவுள் வாழ்த்து = அசைவற்ற உள்ளபொருளை பற்றியது


🌷 வான் சிறப்பு = அசையும் மனதைப் பற்றியது


oOOo


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment