பிள்ளையார் வழிபாட்டின் முகமைச் சடங்குகளில் ஒன்றான சிதறு தேங்காய் பற்றி சற்று பார்ப்போம்.
தேங்காய் என்பது நமது தலைக்கு சமமாகும். நமது தலையென்பது "நான் இன்னார்" என்ற எண்ணம் முதற்கொண்டு நாம் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து பற்றுகளுக்கு சமமாகும். தேங்காயை சிதற விடுவதென்பது எல்லா பற்றுகளையும் உடனடியாக, இப்பொழுதே விட்டொழிப்பதற்கு சமமாகும்.
எவ்வாறு "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்ற வரியை படித்ததும், திரு பட்டினத்து அடிகள் அனைத்தையும் விட்டுவிட்டாரோ (அதாவது, அவரது தேங்காயை உடைத்துவிட்டாரோ), அவ்வாறு யாவற்றையும் விட்டுவிடுவதுதான் [சிதறு] தேங்காய் உடைப்பதின் உட்பொருளாகும். இதுவேதான் "தேங்காய் சிதறுவதுபோன்று ஒருவரது துன்பங்களும் சிதறிப்போகும்" என்ற நம்பிக்கையின் உட்பொருளுமாகும்.
ஒன்று நமதென்ற எண்ணம் இருக்கும்வரை அதனால் விளையும் இன்பமும் துன்பமும் நம்மை சாரும். எதுவும் நமதல்ல என்ற உண்மையை புரிந்துகொண்டு, பற்றுகளை விட்டுவிட்டால் (தேங்காயை உடைத்துவிட்டால்), விளைவுகளும் நமதல்ல என்றாகிவிடும் (விளைவுகளால் பாதிப்படையமாட்டோம்).
oOo
சிதறு தேங்காயை சூரத் தேங்காயென்றும் அழைப்பர்.
சூரன் என்ற சொல்லுக்கு, இங்கு, ஆரியத்தில் பொருள் காணவேண்டும்.
சூ + ர -> தந்தை + பற்று -> பற்றுகளின் தந்தை -> எல்லா பற்றுகளும் எங்கிருந்து தோன்றுகின்றனவோ அது -> பற்றுகளின் ஆணிவேர்!!
எது பற்றுகளின் ஆணிவேர்?
"நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம்தான் எல்லாவற்றிற்கும் தொடக்கமாகும். இதை விட்டொழித்தலே சூரத்தேங்காய் உடைத்தலாகும்.
oOo
பற்றுகளை விடுவதென்பது ஒரு முறைதான் நடக்கும் (ஒரு தேங்காய் உடைப்பதற்கு சமம்). பிறகு, ஏன் 11, 18, 108 என்று பல தேங்காய்களை உடைக்கிறார்கள்? உட்பொருளை உணராததால்!
பொருள் புரியாமல் சடங்குகளை செய்வது பொருளாதாரத்திற்கு நல்லதாகும்! பொருளை புரிந்துகொண்டு செய்வது அன்பர்களுக்கு நல்லதாகும்!! ☺️
oOOo
கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻
No comments:
Post a Comment