Monday, April 4, 2022

🌚🌝 மறைமதி & நிறைமதி முழுக்குப் பூசைகள்!!


(எனக்கு தெரிந்த நபரொருவர், திருத்தலத்திற்கு செல்வதே பூஜா, அபிஷேகா, அலங்காரா, அர்ச்சனா, நாராயண சேவா போன்ற ஆ-க்களில் ஒன்றை செய்வதற்காகவோ அல்லது பார்ப்பதற்காகவோ தானென்றார்! அவருக்கு நான் கொடுத்த விளக்கத்திலிருந்து ஒரு பகுதியை இந்த இடுகையாக்கி உள்ளேன். 🙏🏽)

🌷 பகலவன்: உள்ளபொருள்

🌷 திங்கள்: மனம்

🌷 மறைமதி (அமாவாசை): பகலவனும் திங்களும் நேர்கோட்டில் அமைவது. பகலவனை திங்கள் மறைப்பது. உள்ளபொருளை மனம் மறைப்பது / மறப்பது.

🌷 நிறைமதி (பெளர்ணமி): பகலவனுக்கு நேரெதிராக திங்கள் அமைவது. பகலவனின் ஒளியை முழுவதுமாக திங்கள் பெறுவது. உள்ளபொருளை மனம் தெளிவாக காண்பது / உணர்வது.

🌷 முழுக்கு (அபிடேகம்): குளியல். தூய்மைப்படுத்துதல் / குளிர்வித்தல். மறைமதி முழுக்கை குளிர்வித்தல் கணக்கில் சேர்க்கலாம். நிறைமதி முழுக்கு குளிர்வித்தலாகாது. ஆனால், இரண்டையும் தூய்மைப்படுத்துதல் என்ற கணக்கில் சேர்க்கலாம்.

🌷 உள்ளபொருளை முழுவதுமாக மனம் மறந்தால் என்னவாகும்? பொருளாதாரம் மட்டுமே குறிக்கோளாகும். எல்லா நீதிகளும் கடமைகளும் அழிந்து / நீர்த்துப் போகும். இயற்கை அழியும். இப்போது உலகமிருக்கும் நிலை / செல்லும் பாதை.

இதற்கு தீர்வு? பொருளாதார வெறி குறையவேண்டும் (குளிர்வித்தல்). அடிப்படை தேவைகள் தவிர மற்றவற்றை ஒதுக்கவேண்டும் (தூய்மைப்படுத்துதல்). இறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

🌷 உள்ளபொருளை மட்டுமே மனம் தேடிக் கொண்டிருந்தால் என்னவாகும்? பொருளாதாரம் கோவிந்தாவாகும். எல்லாம் பறிபோகும். சோமநாதபுர படையெடுப்பு மீண்டும் நிகழும்.

இதற்கு தீர்வு? மெய்யறிவில் நிலைபெறும்வரை, பொருளாதார கண்ணோட்டமும் ஓரளவு வேண்டும். ஒரு நாளின் ஒரு பகுதியை மெய்யறிவு தேடலுக்கும் (தூய்மைப்படுத்துதல்), ஒரு பகுதியை பொருள் தேடலுக்கும் ஒதுக்கிக்கொள்ளவேண்டும்.

💦 மறைமதி முழுக்கு - பொருளாதார தாகம் குறைத்தல்

💦 நிறைமதி முழுக்கு - மெய்யறிவு தாகம் குறைத்தல்

oOo

நமது பழமையான திருத்தலங்கள் யாவும் சிவமாய் (உள்ளபொருளாய்) சமைந்த பெருமான்களின் சமாதிகளாகும். சமாதி நிலையிலுள்ள பெருமான்கள் மொத்த படைப்பிற்கு (அண்டத்திற்கு) சமம். எனவே, அவர்களது சமாதி அடையாளங்களுக்கு செய்யப்படும் முழுக்குகள் மொத்த படைப்பையும் சென்றடையும் என்பது கணக்கு.

oOo

இந்த நுட்பங்கள் தெரியாமல் முழுக்குகளை செய்வதால் எந்த மெய்யியல் பயனும் கிட்டாது. இவற்றை தெரிந்துகொண்ட பின் எந்த முழுக்கையும் செய்ய மனம் வராது! ☺️

ஒரு திருத்தலத்தில் செய்யவேண்டியது வடக்கிருத்தல் (தவமியற்றுதல்) மட்டுமே!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment