Sunday, August 30, 2020

"பசுவின் பின்புறத்தில் மலர்மகள் வசிக்கிறார்" என்பதின் பொருள்...

"பசுவின் பின்புறத்தில் மலர்மகள் வசிக்கிறார்" என்பதின் பொருள்:

🔸பசுவின் பின்புறம் சாணம் வெளிவரும்
🔸 இந்த சாணத்தை மக்க வைத்து நிலத்திற்கு உரமாக இட்டால் விளைச்சல் பெருகும்
🔸 விளைச்சல் பெருகினால் வருமானம் - செல்வம் - பெருகும்
🔸 செல்வம் என்பது மலர்மகள்
🔸 பின்னே சென்றால்: மலர்மகள் <- செல்வம் <- விளைச்சல் <- சாண உரம் <- பசுமாடு

எனவே, பசுமாட்டின் பின் பகுதி மலர்மகள் வசிக்குமிடம் என்றார்கள்!!

oOOo

"மலர்மகள் இப்பிறவியில் செல்வவளமும், பிறவி முடிந்த பின் விடுதலையும் தருபவர்" என்பதின் பொருள்:

முதலில், மலர்மகளின் தோற்றத்தைப் பார்ப்போம். பாற்கடலைக் கடையும் போது இறுதியாக வெளிவந்தவர் மலர்மகள் என்று படித்திருப்போம்.

🔸 பாற்கடல் - நமது உடல்
🔸 கடைதல் - கடும் வடக்கிருப்பு

வடக்கிருப்பின் தொடக்கத்தில் பல குப்பைகள் நம்முள்ளிருந்து வெளிவரும். சில புதிய ஆற்றல்கள் கூட நமக்கு கிடைக்கும். இவையனைத்தும் மூத்தவள் - மூத்தாயி - மூதேவி (ஆரியத்தில், ஜேஷ்டாதேவி) எனப்படும். இவற்றை ஒதுக்கி, மேலும் தொடர்ந்தால், இறுதியில் மெய்யறிவு கிடைக்கும். இம்மெய்யறிவே இளையவள் - சின்னாயி - நப்பின்னை (பின்னே வந்தவர் - நல்ல பின்னை) - மலர்மகள் (ஆரியத்தில், ஸ்ரீதேவி) - செல்வமகள் (ஆரியத்தில், லட்சுமி) எனப்படும்.

இந்த மெய்யறிவை விடாப்பிடியாக இறுகப் பற்றிக்கொண்டால் நிலைபேற்றில் முடியும். இடையில் படைப்பின் பல புதிர்கள் திறக்கப்படலாம். இவற்றைத்தான் "இப்பிறவியில் செல்வவளமும்" என்ற சொற்றொடர் குறிக்கிறது.

மெய்யறிவில் நிலைபெற்ற ஒருவர் பிறவிகளைப் பற்றி சிந்திக்கப்போவதில்லை. அவர் ஏற்கனவே விடுதலை அடைந்தவர் தான். இருந்தாலும், தற்போதைய பிறவி முடிந்த பின், இறுதித் தளையான உடலும் விலகுவதையே விடுதலை (ஆரியத்தில், மோட்சம்) என்றழைக்கின்றனர். இறப்பின் போது எல்லோருக்கும் தான் உடல் விலகுகிறது. மெய்யறிவில் நிலை பெறாதவர் அடுத்த பிறவியில் சிக்கிக் கொள்கிறார். நிலைபெற்றவர் விடுதலையடைகிறார். இதனால் தான் மெய்யறிவை (மலர்மகளை) "பிறவி முடிந்த பின் விடுதலையும் தருபவர்" என்று போற்றுகின்றனர்.

இறுதியாக, மெய்யறிவு என்றால் என்ன? நம்மைப் பற்றிய அறிவு. நாமே உள்ளபொருள் என்ற அறிவு. இதுவரை நாம் தேடியது நம்மையே என்ற அறிவு.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment