Thursday, November 7, 2019

🐷 #பன்றி #திருவிறக்கம் (#வராக #அவதாரம்)




(ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தின் கார்த்திகை 2019 இதழின் பின்பக்க அட்டைப்படம்)

🌸🏵️🌼🌻💮

✳️ ஒவ்வொரு திருவிறக்கக் கதையையும் தனித்தனியே அணுக வேண்டும். மற்றவற்றோடு ஒப்பிட்டால் குழப்பம் தான் மிஞ்சும். 

✳️ இக்கதைகள் யாவும் மெய்யறிவு பெறுவதற்காக நமக்குள் நடக்கும் போராட்டங்களையும், நிகழ்வுகளையும் உருவகப்படுத்திக் காட்டுகின்றன என்பதை நினைவில் கொண்டு தொடரவும்.

🌸🏵️🌼🌻💮

பாரம்பரிய கதை: இரணியகசிபு என்ற அசுரனின் இளைய சகோதரனான இரணியாட்சன் படைப்புக் கடவுளான பிரம்மாவை நோக்கி வடக்கிருந்து பல பேறுகளைப் பெறுகிறான். அவை கொடுத்த மனத்துணிவால் தலைக்கனம் பிடித்து ஆடுகிறான். அனைவரையும் துன்புறுத்திகிறான். ஒரு சமயத்தில், புவியை கடலுக்குள் ஒளித்து வைத்துவிடுகிறான். பிரம்மா முதற்கொண்டு அனைத்து கடவுளர்களும் பெருமாளை வேண்டுகின்றனர். பெருமாள், கட்டை விரல் அளவேயான ஒரு சிறு பன்றியாக பிரம்மாவின் மூக்கிலிருந்து வெளிப்படுகிறார். மிக விரைவில், மிக பெரிதாக வளர்கிறார். இரணியாட்சனுடன் பல்லாயிரம் ஆண்டுகள் போரிடுகிறார். இறுதியில் அவனைக் கொன்று விட்டு, கடலுக்குள் மூழ்கியிருந்த புவியை, தனது கோரைப் பற்களால் தூக்கி வெளிப்படுத்தி, அதனுடைய பழைய இடத்தில் நிலை நிறுத்துகிறார்.

இந்த கதை எழுதப்பட்ட காலத்தில் எழுதியவர் மட்டுமில்லாமல், கேட்டவர்களும் ரசித்திருப்பர். ஏனெனில், அனைவருக்கும் பொருள் தெரிந்திருக்கும். பின்னர், பல காரணங்களால் மூடர்களாகிப் போனோம்; மூடர்களாக்கப்பட்டோம். சிந்திக்காமல் பயபக்தியுடன் கேட்டோம். இப்போது பயமும் இல்லை. பக்தியுமில்லை. பகுத்தறிவு வேறு வளர்ந்துவிட்டது. எள்ளி நகையாடுகிறோம். "அறிவைப் போற்றுவோம். அறிவைப் போற்றுவோம்." என்று உரு போடுவதோடு நில்லாமல், எக்காலமும் எல்லோரையும் உண்மையாகவே அறிவைப் போற்ற வைத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? 😔

🏵️🌼🌻

☀️ #இரணியகசிபு - நம் உடல்

☀️ #இரணியாட்சன் -  நமது கண்ணோட்டம் அல்லது நமது பார்வை. உடலின்றி பார்வையில்லை. ஆகவே, பார்வையை உடலின் சகோதரனாக சித்தரித்துள்ளனர். நமது பார்வை என்றும் வெளிமுகமாகவே இருக்கும். அனைத்திற்கும் ஆதாரமான திரை போன்ற நம்மைக் காணாது, திரையில் தோன்றும் காட்சிகள் போன்ற உலகையே காண விழையும். உலகிலுள்ள அனைத்து படைப்புகளுக்கும் அடிப்படை இந்த வெளிமுகப் பார்வை தான். இது மட்டும் இல்லை எனில், உலகில் ஒன்றும் நடக்காது, உருவாகாது. நமது உண்மையை / இயல்பை நாம் உணர முடியாமல் போவதற்கும், இதனால் விளையும் அனைத்து இன்னல்களுக்கும் நமது வெளிமுகப் பார்வையே காரணம்!! எனவேதான் "இரண்யாட்சன் படைப்பு கடவுளிடமிருந்து பேறுகளைப் பெற்று, தேவர்களைக் கொடுமைப்படுத்தினான்" என்று சொன்னார்கள். 

☀️ #பூமா #தேவி - மெய்யறிவு. இதுவே முழுமையான, நிறைவான & குறைவற்ற அறிவு. எனவேதான், ஒரு கோளமாக சித்தரித்துள்ளனர். அதென்ன மெய்யறிவு? தன்னைப் பற்றிய அறிவு! தானே என்றும் உள்ளபொருள் என்ற அறிவு!!

☀️ #கடல் - ஒரு விதத்தில், நம் உடல். இன்னொரு விதத்தில், அறியாமை எனும் இருள். இரணியாட்சன் பூமாதேவியை கடலுக்குள் ஒளித்து வைத்தான் என்பதன் பொருள்: பிறந்ததிலிருந்து நமது கண்ணோட்டம் வெளிமுகமாகவே - உலகை நோக்கியே - இருப்பதால், உலகறிவு பெருக பெருக, "நாமே உள்ளபொருள்" என்ற மெய்யறிவு நமக்குள் புதைந்துவிடுகிறது.

☀️ #பிரம்மாவின் #மூக்கிலிருந்து #வெளிப்பட்ட #சிறு #பன்றி - பிரம்மா இங்கு மெய்யாசிரியரைக் குறிக்கும். சிறு பன்றி என்பது அவரிடமிருந்து வெளிப்பட்ட, நமது அறியாமையை நீக்க வல்ல, ஒரு அறிவுரை! பகவான் ரமணரின் 🌺🙏🏼, "தன்மையின் உண்மையை, தான் ஆய தன்மை அறும்" என்ற அறிவுரை ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு!! முதலில் இது வெறும் 6 சொற்கள் கொண்ட ஒரு சொற்றொடராகத் தோன்றும். ஆனால், போகப் போக, இதைப் பற்றி சிந்திக்க சிந்திக்க, நம் மனம் முழுவதையும் நிறைத்து விடும். இதையே, "பன்றி மிகப் பெரிதாக, வானளாவ வளர்ந்தது" என்று சித்தரித்துள்ளனர்!! மனம் எதை நினைக்கிறதோ அதுவாக மாறிவிடும். இப்போது நாம் பன்றியாகி விட்டோம்! 😛

ஏன் பன்றியைத் தேர்ந்தெடுத்தார்கள்? பன்றிக்கு மோப்பத் திறனும், மண்ணில் புதைந்து கிடப்பதைக் கிளறி வெளிக்கொணரும் திறனும் உள்ளது. இங்கு, மெய்யாசிரியர் சுட்டிக்காட்டிய மெய்ப்பொருளை மோப்பம் பிடித்து, நம்முள் ஆழ்ந்து, அறியாமை இருளைக் கிளறி, மெய்யறிவுடன் வெளிப்படுகிறோம். இது அவ்வளவு சுலபமான செயலல்ல. காலகாலமாக உடல், உலகு எல்லாம் மெய் என்று நம்பி, நமது இயல்பாகவே மாறிவிட்டதை, பொய்யென்று அவ்வளவு சுலபமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இதைத்தான் பன்றியும் இரணியாட்சனும் பல்லாயிரம் ஆண்டுகள் போர் புரிந்தனர் என்று சித்தரித்துள்ளனர்!! இறுதியில், உடல், உலகு எல்லாம் இருப்பற்றவை, நிலையற்றவை, பொய் என்று உணர்கிறோம். அதாவது, இரணியாட்சனைக் கொல்கிறோம். பொய்யறிவு நீங்குகிறது - அறியாமை இருள் விலகுகிறது - மெய்யறிவு வெளிப்படுகிறது. உள்ளாழ்ந்த போதும் சரி, மீண்டும் வெளிவரும் போதும் சரி, பன்றி பன்றியாகத்தான் இருக்கிறது. நாம் நாமாகத் தான் இருக்கிறோம். வேறுபாடு பூமாதேவி மட்டுமே. மெய்யறிவு மட்டுமே. முன்னர் நம்மை பற்றிய தெளிவில்லை. இப்போது, நம்மை நாம் சரியாக, தெளிவாக உணர்ந்துள்ளோம். இதுவே சீவன் சிவனாகியது எனப்படும்!!

இருக்கும் இயற்கையால் ஈச ஜீவர்கள் ஒரு பொருளேயாவர் உந்தீபற
உபாதி உணர்வே வேறு உந்தீபற

-- பகவான் திரு ரமணர், உபதேச உந்தியார்

மொத்த திருவிறக்க கதையையும் ஒரு வரியில் சுருக்கிச் சொல்ல வேண்டுமானால்: புறமுகமாகவே செல்லும் நமது கவன ஆற்றலை அகமுகமாக திருப்பி, நான் எனும் தன்மையுணர்வின் மீது தொடர்ந்து வைத்திருப்பின், ஒரு சமயத்தில் நாமே என்றும் உள்ளபொருள் என்ற மெய்யறிவு கிட்டும்!!

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

🌸🏵️🌼🌻💮

✳️ இந்த திருவிறக்க கதையில் ஒரு புவியியல் நிகழ்வும் பதிவாகியுள்ளது. பூமாதேவியை வெளிக்கொணரும் போது, பன்றியின் பல் பட்ட இடம் #பிராக்ஜோதிஸ்பூர் - இன்றைய கவுகாத்தி, அஸ்ஸாம் - என்று பதிவு செய்திருக்கிறார்கள். இது ஒரு புவியியல் நிகழ்வைக் குறிக்கும். நம் பாரத துணைக்கண்டம், ஆசிய கண்டத்தோடு மோதியதன் விளைவாக இமயமலை உருவானது. அப்படி முதன்முதலாக மோதி உயர்ந்த பகுதியே இந்த பிராக்ஜோதிஸ்பூர். எத்தனையோ கோடி வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்வை, இந்த கதையில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். 

✳️ பூமா என்ற ஆரிய சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு. மெய்யறிவு என்ற பொருளைக் கொண்டு இந்த இடுகையை எழுதியுள்ளேன். பெரும்பாலானோர், "நாம் வாழும் புவிப்பந்து" என்று பொருள் கொள்வர். அதற்கேற்றவாறு ஓவியங்களை, சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். குப்தர்கள் காலத்திய சிலையே மிகப்பழமையானது என கணக்கிட்டுள்ளனர். உலகக் கொள்ளையர்களான பரங்கிகள் உலகம் உருண்டை என்று "கண்டுபிடிப்பதற்கு" 1,000 ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் இவ்வுண்மையை சிலையாக்கி உள்ளனர். எனில், அவர்கள் உணர்ந்தது எத்தனை ஆயிரமாண்டுகளுக்கு முன்னரோ?

இவை யாவும் நமக்கு மலைப்புத் தராது. 😏 ஏனெனில், யார் தலையிலும் ஆப்பிள் விழவில்லை. 😀 யாரும் பிறந்த மேனியாக குளியல் தொட்டியிலிருந்து எழுந்து "யுரேகா! யுரேகா!!" என்று கத்திக் கொண்டு ஓடவில்லை. 😁 யாரையும் "ஆண்டுக்கு USD150+B வருமானம் பார்க்கும்" ஒரு பன்னாட்டு நிறுவனம் வீட்டுக்காவலில் வைக்கவில்லை. 😝 ஆகையால், இவை நமக்கு ஒரு பொருட்டேயில்லை. ஆமென்!! 😂 (இதுவும், "ஆமாம் ஆமாம்" என்ற சொற்களின் மருவு என்கிறது சொல்லாராய்ச்சி! 😎)

🌸🏵️🌼🌻💮

பின் குறிப்புகள்:

✳️ வழக்கம் போல இக்கதையிலும், திராவிட உடலமைப்பு கொண்டவர் அசுரன். ஆரிய உடலமைப்பு கொண்டவர் கடவுள். உண்மையில் திராவிட உடலமைப்பு கொண்டவர் தான் கடவுளாக சித்தரிக்கப் படவேண்டும்.

✳️ இக்கதையின் முதல் பதிப்பில் (தைத்திரீய உபநிடதம் என்று நினைக்கிறேன்) படைப்புக் கடவுளான பிரம்மா தான் பன்றியாக உருவெடுத்து புவியை காப்பதாக எழுதியிருக்கிறார்கள். பின்னர் வந்த பதிப்புகளில் (புராணங்களில்) பெருமாளாக மாற்றியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment