நேற்று (08/08/2021) ஆடி அமாவாசை.
அப்பர் பெருமானுக்கு திருவையாற்றில் திருக்கயிலாயக் காட்சியை இறைவன் காட்டியருளிய திருநாள்!!
🌺🙏🏽🙇🏽♂️
திருக்கயிலாயக் காட்சி என்றால் என்ன?
"நாயைக் கண்டால் கல்லைக் காணோம். கல்லைக் கண்டால் நாயைக் காணோம்." என்பது எல்லோரும் அறிந்த பழமொழி. சிலர், இத்துடன் இன்னொரு வரியையும் சேர்ப்பர்: இரண்டையும் கண்டால் அடிப்பவனைக் காணோம்.
☀️ நாயைக் கண்டால் கல்லைக் காணோம் - நாம் காணும் உலக காட்சி. உலகை காண்கிறோம். ஆனால், அதற்கு பற்றுக்கோடு நாம்தான் என்பதை நாம் உணர்வதில்லை. நம்முள்ளிருந்துதான் உலகம் வெளிப்படுகிறது என்பதையும் உணர முடிவதில்லை. உலகினுள் நாமிருப்பது போன்று காண்கிறோம்.
☀️ கல்லைக் கண்டால் நாயைக் காணோம் - மெய்யறிவாளர்கள் காணும் காட்சி. எக்கணமும் தமது தன்மையுணர்வில் இருப்பவர்கள். காணப்படும் யாவும் இருப்பற்றவை என்பதை உணர்ந்தவர்கள். உலகை "எரிந்து முடிந்து, உருக்கலையாத சாம்பல்" போன்று காண்பவர்கள். இதனால் தான் மெய்யறிவாளர்களை - சிவனை - சுடுகாட்டில் வசிப்பவர் (காடுடைய சுடலை) என்றழைத்தனர்.
☀️ இரண்டையும் கண்டால் அடிப்பவனைக் காணோம் - திருக்கயிலாயக் காட்சி! காண்பானும் உண்டு (கல்). காணப்படும் காட்சியுமுண்டு (நாய்). காணப்படுவது காட்சி மாத்திரமே என்ற அறிவுமுண்டு! இவ்வறிவுக்கு காரணம் காட்சி தோன்றும் வகை. காட்சியின் பொய்த்தன்மை உணரப்பட்டதும் "நான் இன்னார்" என்ற மனம் (அடிப்பவன் - எல்லா வினைகளுக்கும் காரணமானது) மறைந்துவிடும்.
சில பழமையான சிவத்தலங்களில் மூலவருக்கு பின்னே அம்மையப்பரை புடைப்புச் சிற்பமாக செதுக்கி வைத்திருப்பதைக் காணலாம். "அகத்தியருக்கு சிவபெருமான் தனது திருமணக்காட்சியை இங்கே காட்டியருளினார்" என்று தலவரலாற்றில் பதிவு செய்திருப்பர். இதன் பொருள்: அத்தலத்தின் மூலவருக்கு கீழ் சமாதியாகி இருக்கும் பெருமான், உடல் தாங்கியிருந்த காலத்தில், மேற்கண்டவாறு திருக்கயிலாயக் காட்சியைக் காணும் பேறு பெற்றவர். (இங்கு அகத்தியர் எனில் மெய்யறிவாளர் என்று பொருள். நாமறிந்த குள்ள மாமுனிவரைக் 🌺🙏🏽🙇🏽♂️ குறிக்காது.)
oOOo
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮
No comments:
Post a Comment