Monday, May 24, 2021

ஒண்டர் வுமன் 1984, ப்ளேட் ரன்னர் 2049 & ஃபோர்ட் x ஃபெர்ராரி

கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த 3 ஹாலிவுட் படங்களில் இடம்பெற்றுள்ள உயர்தரமான உரையாடல் பகுதிகளிலிருந்து சிற்சில பகுதிகளை இந்த இடுகையில் பார்ப்போம்.

(நம் செய்தி ஊடகங்கள் செய்வது போல், கூகுள் மொழிபெயர்ப்பானை பயன்படுத்தாமல், நேரடியாக மொழிபெயர்த்துள்ளேன். ஆகையால், சிற்சில வேறுபாடுகளைக் காணலாம்.)

oOOo


2020ஆம் ஆண்டு வெளிவந்த "ஒண்டர் வுமன் 1984 (Wonder Woman 1984)" என்ற படத்தின் இறுதிக்காட்சிகளில், கொடியவன் (வில்லன்) வழியாக உலக மக்களிடம் கதாநாயகி பேசும் உரையாடலின் ஒரு பகுதி:

நாம் வாழும் இவ்வுலகம், அது ஏற்கனவே உள்ளபடி, அழகானதாகும். ஆனால், இவ்வுலகில் உள்ள யாவற்றையும் உங்களால் துய்க்கமுடியாது. உங்களால் துய்க்க முடிந்ததெல்லாம் உண்மையை மட்டும்தான். அந்த துய்ப்பு போதும். உண்மை தான் உண்மையில் சுகமானதாகும்.

(ஆங்கில மூலம்: This world was a beautiful place just as it was, and you cannot have it all. You can only have the truth. And the truth is enough. The truth is beautiful.)

இதில் "உண்மை" என்ற சொல் குறிப்பது உள்ளபொருளை! "உங்களால் துய்க்க முடிந்ததெல்லாம் உண்மையை மட்டும்தான்" என்ற வரி குறிப்பது நனவு, கனவு நிலைகளை நாம் துய்க்கும் விதத்தை!! ("[உலக] விசயங்களைப் பார்க்கும் அஞ்ஞானி கூட ஆன்மாவையே பார்க்கிறான்" என்பது பகவான் திரு ரமண மாமுனிவரது 🌺🙏🏽🙇🏽‍♂️ வாக்கு. அதாவது, எப்போதும் எல்லோரும் துய்ப்பது தங்களையே - உள்ளபொருளையே - உண்மையையே!)

oOOo


2017ஆம் ஆண்டு வெளிவந்த "ப்ளேட் ரன்னர் 2049 (Blade Runner 2049)" என்ற படத்தில் ஒரு காட்சியில், அப்போது "தயாரிக்கப்பட்டு" வெளிவந்து விழுந்து, எழுந்து நின்று, சற்று பயத்துடனும், நடுக்கத்துடனும் நின்று கொண்டிருக்கும் ஒரு "மனிதப்பிரதியியைக்" (Replicant) கருத்தில் கொண்டு, அதன் முதலாளி நியாண்டர் வாலஸ் பேசும் உரையாடலின் ஒரு பகுதி:

பிறந்து கண்விழித்தவுடன் தோன்றும் முதல் உணர்வு: உடலைப் பற்றிய பயம்! சிறு பூச்சி முதல் மனிதன் வரை, தன்னைப் பற்றி ஆராய்ந்து தெளிவதற்கு முன், தனக்கு வாய்த்திருக்கும் களிமண்ணைப் பாதுகாக்க முயற்சிப்பது ... விந்தை! வினோதம்!! வியப்பு!!! ... பிறந்தநாள் வாழ்த்துகள்!!

(ஆங்கில மூலம்: The first thought one tends to fear, to preserve the clay. It's fascinating. Before we even know what we are, we fear to lose it. Happy Birthday.)

மண், கோணிப்பை, புற்று என்று பலவாறு நமது அருளாளர்களால் "பூசை" செய்யப்பட்ட நமதுடலை, இந்த கதாசிரியர்கள் "களிமண்" என்று அழைத்திருக்கிறார்கள். "காட்சிகள் யாவும் பொய். காண்பவனே மெய்." என்று பகவானும், ஏனைய மெய்யறிவாளர்களும் திரும்ப திரும்ப வலுயுறுத்திய கருத்துத்தான் "தன்னைப் பற்றி ஆராய்ந்து..." என்ற சொற்றொடர் குறிக்கிறது.

oOOo


2019ஆம் ஆண்டு வெளிவந்த "ஃபோர்ட் x ஃபெர்ராரி (Ford vs Ferrari)" என்ற படத்தின் இறுதியில் கென் மிலெஸ் இறப்பதற்கு சற்றுமுன், திரைமறைவிலிருந்து கரோல் ஷெல்பை பேசும் உரையிலிருந்து ஒரு பகுதி:

சிற்றுந்து இயந்திரத்தின் வேகம் நிமிடத்திற்கு 7,000 சுற்றுகளைத் தாண்டியதும் அது நடக்கிறது... எல்லாம் மறையத் தொடங்குகிறது. சிற்றுந்து எடையற்றதாகிறது. மறைந்தும் போகிறது. இருப்பதெல்லாம், இடம் மற்றும் காலம் என்னும் இரு பரிமாணங்களினுடே பயணிக்கும் நமது உடல் மட்டும்தான். 7,000 ஆர்.பி.எம்.!! அப்போது தான் அந்த உணர்வு தோன்றுகிறது. உடலின் கீழிருந்து மேலாக பயணிக்கிறது. உடலும் மறைந்துபோகிறது. இப்போது எழும் கேள்வி: நாம் யார்?

(ஆங்கில மூலம்: There's a point at 7,000 RPM... where everything fades. The machine becomes weightless. Just disappears. And all that's left is a body moving through space and time. 7,000 RPM. That's where you meet it. You feel it coming. It creeps up on you, close in your ear. Asks you a question. The only question that matters. Who are you?)

(இந்த மொழிபெயர்ப்பில் நிறைய மாற்றங்களை செய்துள்ளேன். "மூலத்திற்கு ஏற்றாற்போல" என்பதை விட அது உணர்த்தும் "கருத்திற்கு ஏற்றாற்போல்" என்ற வகையில் மொழிபெயர்த்துள்ளேன்.)

நாம் என்றுமே உள்ளபொருள் தான். ஆனால், இதை நாம் உணர்வதில்லை. காரணம் - காணும் காட்சிகளின் தரம்! அன்னை மாயையின் திறம்!! "காண்பவனே மெய்" என்பதை நாம் உணர ஒவ்வொரு மெய்யறிவாளரும் ஒவ்வொரு வழியை சுட்டிக்காட்டினர்:

🌷 பகவான் காட்டிய வழிகள்: நான் யார்? (நமது தன்மையுணர்வின் மீது கவனத்தை வைத்தல்), நிறைமாதமாக இருக்கும் பேரரசி நடைபயில்வது போல அண்ணாமலையாரை வலம் வருதல் (ஒரு சமயத்தில் உடல் மறத்துப்போகும். மீதமிருக்கும் தன்மையுணர்வை இறுகப் பற்றிக் கொள்ளவேண்டும்).

🌷 திரு நந்திதேவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ காட்டிய வழி: கங்கையில் மூழ்குவது (நீரின் குளிர்ச்சியால் உடலுணர்வு ஒரு சில கணங்கள் அற்றுப்போகும். அச்சமயம், மீதமிருக்கும் தன்மையுணர்வை இறுகப் பற்றிக் கொள்ளவேண்டும்.)

இந்த உத்திகளைப் போன்றொரு உத்திதான் வண்டியை வெகு வேகமாக ஓட்டுவதென்பது. ஆனால், ஆபத்தானது. பந்தய சிற்றுந்துகளைப் பற்றிய திரைப்படத்தில் மெய்யறிவு பற்றிய உரை இடம் பெறக் காரணம்: உடலுணர்வு அற்ற நிலையில் கென் மிலெஸ் இறந்ததால் அவர் மெய்யறிவு பெற்றிருப்பார்; பிறவி சுழற்சியிலிருந்து விடுபட்டிருப்பார் என்று அவரை உயர்த்திக் காட்டுவதற்காக!

oOOo

மேற்கண்ட 3 திரைப்படங்களின் உரைகளை 8 பேர் எழுதியுள்ளனர். ஒரு படத்தின் குழுவிற்கும் இன்னொரு படத்தின் குழுவிற்கும் தொடர்பில்லை. ஆனால், அனைவரும் ஆன்மிக அடிப்படைகளை சரியாக தெரிந்துகொண்டு உரை எழுதியுள்ளனர். ஆழ்ந்து ஆராய்ந்தோமானால், இவர்களது ஆன்ம அறிவிற்கு அடிப்படை நமது இந்து சமயம் அல்லது பௌத்த மதமாகத்தானிருக்கும். பெரும்பாலும், பகவான் தான் இருப்பர்!!

சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் கூட, வீட்டிலுள்ள அனைவரும் ஒரே பாத்திரத் தண்ணீரில் முகம் கழுவி, வாய் சுத்தம் செய்து கொண்ட "சுத்தமானவர்கள்", 500 ஆண்டுகளுக்கு முன்னர் கூட, நம்முடன் மீண்டும் தொடர்பு ஏற்படும் வரையில், "பூமி தட்டையானது", "பூமியைத் தான் கதிரவன் சுற்றி வருகிறது" என்று நம்பிக் கொண்டிருந்த "அறிவாளிகள்", சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் கூட மரங்களும் உயிருள்ளவைதாம் என்பது கூட அறிந்திராத "தருக்க புத்தியுள்ளவர்கள்" இன்று உள்ளபொருளை உள்ளபடி உணர்ந்து, எல்லோருக்கும் புரியும்படி எளிமையான நடையில் உரையாடல் எழுதுமளவுக்கு உயர்ந்துள்ளனர்! 👍🏽

ஆனால், உலகிலுள்ள அனைத்து கலாச்சாரங்களுக்கும். மதங்களுக்கும், மொழிகளுக்கும், உணவு & மருத்துவ முறைகளுக்கும் முன்னோடியான நாம் ... 1960களில் கூட நன்னீர் ஆறாக இருந்த கூவத்தை சாக்கடையாக்கி பகுத்தறிவின் உச்சம் கண்டுள்ளோம்! சமூக நீதி காத்துள்ளோம்!! 😔🤬

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment