10 நாட்களுக்கு முன்பு, பாலியில் (Bali, Indonesia), ஒரு விடுதியில் தங்கியிருந்த நம் நாட்டுக் குடும்பம் ஒன்று, தங்களது அறையிலிருந்து பல பொருட்களை திருட முயற்சித்ததைப் பற்றி படித்திருப்பீர்கள். இச்செய்தியும், காணொளியும் வைரலானது (வைரலாக்கப்பட்டது)! இதை வைத்து உலகளவில் ("மேற்கத்திய" உலகளவில்) நமக்கு தலைகுனிவு ஏற்படுத்தப்பட்டது!!
பல இடங்களில் தினந்தோறும் நிகழும் ஒரு சராசரி நிகழ்வு தானிது. கேபிள் டிவிக்காரன் சந்தாவை ஏற்றிவிட்டான் என்பதற்காக, பக்கத்து வீட்டிலிருந்து (அவர்களுக்குத் தெரியாமல்) T இணைப்புப் போட்டுக் கொண்ட ஒரு அமெரிக்கனை எனக்குத் தெரியும். திமிர் பிடித்த ஆங்கிலேயர்கள் எப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்கள் என்பதை அக்கால இறக்குமதி-ஏற்றுமதி தொழிலில் இருந்தவர்களைக் கேட்டால் தெரியும். பல நாட்டுப் பணியாளர்களுடன் சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்த ஒருவர், "உலகளவில் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்களும், பாரத அளவில் பீகாரிகளும் மோசமானவர்கள்" என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஒரு குடும்பம் தப்பு செய்ததை வைத்து மொத்த நாட்டிற்கும் அவப்பெயர் ஏற்படுத்தக் காரணம்?
சந்திராயன் 2 & அடுத்து மனிதர்களைக் கொண்டு செல்லும் நம் ISROவின் திட்டம்!!
சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்பட்ட பின், மீம்ஸ் போர்வையில் நம்மை கிண்டலடித்தனர். எந்தவிதத்திலும் நம்மைப் பற்றி நாம் உயர்வாக நினைத்து விடக்கூடாது என்பதே குறிக்கோள். இந்நிலையில் பாலியில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கவும், அவர்களது பணி சுலபமாகிவிட்டது.
இந்த சோரம் போன ஊடக ஆராய்ச்சி ஒரு புறம் இருக்கட்டும். எவ்வளவு பணமிருந்தாலும், படித்திருந்தாலும், பட்டறிவு இருந்தாலும் நம்மவர்களில் பெரும்பாலானோர் ஏன் குறுகிய / சிறு புத்தியுடையவர்களாகவே இருக்கின்றனர்?
எனக்கு 2 காரணங்கள் தோன்றுகின்றன.
திருவண்ணாமலை மலைவலம் செல்லும் போது கவனித்திருப்பீர்கள். செங்கம் பாதை பிரிவிலிருந்து, சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு, நடைபாதையோரம் சில நூறு பிச்சைக்காரர்கள் அமர்ந்து/வாழ்ந்து கொண்டிருப்பார்கள் (இவர்கள் அனைவரையும் சிவனடியார்கள் என்றழைப்பது சரியல்ல). சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் கூட, யார் எந்த உணவைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வர். அடுத்த வேளை வரை அவ்வுணவு நன்றாக இருக்குமா? தமக்கு தேவைப்படுமா? வேறு யாரும் உணவு தருவரா? போன்ற எந்த சிந்தனையும் இல்லாமல் வருவதை, கிடைப்பதை வாங்கி வைத்துக்கொள்வர். ஏனெனில், அதற்கு முன்னர், பல காலம், விழா நாட்கள் தவிர ஏனைய நாட்களில் யாரும் வரமாட்டார்கள், எதுவும் கிடைக்காது என்ற பட்டறிவு அவர்களிடம் இருந்ததால். இன்று, நிலைமையே வேறு! குறைந்தது மதிய உணவாவது கிடைத்துவிடுகிறது. சில அன்பர்கள், சில முதியவர்களுக்கு வருடம் முழுக்க உணவு கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். விளைவு? தள்ளுமுள்ளு இல்லை. தேவையில்லாமல் வாங்கிப் பதுக்குவதில்லை. சிலர், சுமாரான உணவு என்று தெரிந்ததால் பெற்றுக் கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள். அதாவது, #பிச்சைக்காரத்தனம் என்ற சொல் எதை வைத்து உருவானதோ அது இவர்களிடம் இன்று இல்லை!!
இதே போன்று, நாளை என்பது உறுதியாக வேண்டும். இதற்கு, நிலையான, வலுவான, நியாயமான & நேர்மையான அரசுகள் தொடர்ந்து அமையவேண்டும். அப்படி அமைந்தால், நம்மவர்களிடமுள்ள பிச்சைக்காரத்தனம் காணாமல் போகும். தேவையில்லாமல் பொருள் சேர்க்கமாட்டார்கள். இருந்தும் இல்லாதவர் போல் வாழமாட்டார்கள். தேவையானதை சம்பாதித்து, தாராளமாக செலவும் செய்வார்கள்.
அடுத்து, #ஒட்டுண்ணிகள்.
உடல் பிடிக்காத சிறு குழந்தைகளை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றால். அவர்கள் முதலில் கொடுக்கும் மருந்து வயிற்றிலுள்ள ஒட்டுண்ணி குடற்புழுக்களை அழிப்பதற்காகத் தானிருக்கும். அந்த புழுக்கள் வயிற்றில் இருக்கும் வரை குழந்தை பெருகாது. இது போன்றது தான் நமது நிலையும். சொந்த குடும்பத்திலிருநது ஆரம்பித்து சமூகம், மாநிலம், நாடு, பரங்கியர்கள் என பல நிலைகளில் ஒட்டுண்ணிகள் நம்மால் செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. நமக்காக மட்டும் சம்பாதிக்காமல் பலருக்கும் சேர்த்து சம்பாதிப்பதால், நமக்கு வருவதும், நம்மிடம் தங்குவதும் குறைந்துவிடுகிறது. அடையாள நாணய (டோக்கன் கரன்சி) முறை, அதிலும் இப்போதுள்ள மின்னனு முறை, உள்ள வரை மற்றும் கல்லெண்ணை (பெட்ரோல்) கிடைக்கும் வரை ஒட்டுண்ணிகள் பெருகிக் கொண்டேதானிருப்பர்!!
இயற்கை சார்ந்த, தற்சார்பு வாழ்க்கை ஒன்று தான் ஒட்டுண்ணிகளை ஒழிக்கும்!! (இந்த வரியை மட்டும் விரித்து ஒரு புத்தகமே எழுதலாம்)
☀️🌧️🌴🌳🌾
ஏரும் இரண்டுளதாய் இல்லத்தே வித்துளதாய்
நீரறுகே சேர்ந்த நிலமுமாய் - ஊருக்குச்
சென்று வரஅணித்தாய்ச் செய்வாரும் சொற்கேட்டால்
என்றும் உழவே இனிது.
-- ஒளவையார் 🌺🙏🏼 (தனிப்பாடல்கள்)
பொருள்: இரண்டு ஏர்களாவது இருக்க வேண்டும். வீட்டிலேயே விதைகள் இருக்க வேண்டும். அருகிலேயே நீர்வளமுள்ள நிலமாக இருக்க வேண்டும். அந்நிலமும், சென்று வருவதற்கு ஏற்றவாறு ஊருக்கருகில் இருக்க வேண்டும். இத்துணையும் அமைந்து, சொற்படி நடக்கும் பண்ணையாட்களும் அமைந்தனரானால், என்றும் உழவே இனிய தொழிலாகும்.
(இன்றுள்ள அனைத்துத் தொல்லைகளும் அன்றும் இருந்தன போலும்!! 😏)
No comments:
Post a Comment