Tuesday, July 28, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #58 - குன்றம் குனிக்குமலை - சிறு விளக்கம்

நீலமலை தேடரிதாய் நின்றமலை நின்றதழல்
கோலமலை குன்றம் குனிக்குமலை - மூலமலை
அந்தமலை சுந்தரற்கா அன்றுஇரவில் தூதுபோய்
வந்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #58

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸நீலமலை தேடரிதாய் நின்றமலை

நீலமலை - பெருமாள். நான்முகனும் பெருமாளும் பெருமானின் முடி-அடியைத் தேடிய கதையில் வரும் பெருமாள். இங்கு பெருமாள் அகந்தையைக் குறிக்கிறார். அகந்தையால் மெய்யறிவை அடையமுடியாது என்று பாடுகிறார் ஆசிரியர்.

🔸நின்றதழல் கோலமலை

மேற்சொன்ன "அடிமுடி காணா அண்ணாமலை" கதையில் பெருமான் நெருப்புத் தூணாக நின்ற கோலம்.

🔸#குன்றம் #குனிக்குமலை

முப்புரம் எரித்த கதையில் பெருமான் மேருமலையை வளைத்ததைப் பாடுகிறார்.

#முப்புரம் #எரித்த கதை: புவியைத் தேராக்கி, மேருமலையை வில்லாக வளைத்து, வாசுகிப் பாம்பை நாணாக்கி, பெருமாள் கொடுத்த "தீர்ந்து போகாத அம்பாரத்துணியுடன்", மூன்று பறக்கும் கோட்டைகளில் சுற்றி வந்த மூன்று அரக்கர்களுடன் பல காலம் பெருமான் போரிடுகிறார். ஒரு சமயத்தில், "தாங்கள் கொடுத்த பொருட்களால்தான் பெருமானால் போரிடமுடிகிறது" என்று தேவர்கள் அகந்தை கொள்கின்றனர். இதையுணர்ந்த பெருமான், போரிடுவதை நிறுத்திவிட்டு, புன்முறுவல் பூக்கிறார். முப்புரமும் எரிந்து சாம்பலாகிவிடுகிறது!

இது மிகப்பழமையான கதை. பெருமான் புரிந்த "#அட்டவீரட்ட" செயல்களுள் (8 வீரச்செயல்களுள்) ஒன்று. பல திருத்தலங்களின் தலவரலாறாக உள்ளது. பல வடிவுகளில் உள்ளது. நான் மேற்கண்ட வடிவை எடுத்துக் கொண்டேன்.

🔹3 பறக்கும் கோட்டைகள் - முப்புரம் - கனவு, நனவு & தூக்கம்
🔹தேரான புவி - நம் உடல்
🔹நாணான வாசுகி - மூச்சுக்காற்று
🔹வில்லான மேருமலை - சீவன் / மனம்
🔹பெருமாள் வழங்கிய தீராத அம்பாரத்துணி - #பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽 போன்ற மெய்யறிவாளர்கள் வழங்கிய அறிவுரைகள். பெருமாள் உயிரற்றதைக் குறிக்கிறார். உயிரற்றது என்பது ஐம்பூதங்களின் கலவை. உள்ளபொருளேயான பகவானிடமிருந்து ஒர் அறிவுரை வெளிப்பட்டிருந்தாலும், வெளிப்பட்ட பின் அது உயிரற்றதாகிவிடுகிறது. எனவே, எல்லா அறிவுரைகளும் பெருமாளின் கூறுகளாகின்றன. பெருமாள் வழங்கியவையாகின்றன.

எல்லாவற்றிற்கும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது: இங்கு போரிடும் சிவபெருமான் யார்?

நாமே அது! நாமே உள்ளபொருள்!! இதை நாம் உணர்வதில்லை. பல காலம், வடக்கிருக்கிறேன் பேர்வழியென்று, பல சர்க்கஸ் வேலைகளை செய்துகொண்டு, உடலைக் கெடுத்துக்கொள்வோம். ஒரு சமயத்தில், "தானாய் இருத்தலே தன்னையறிதலாம்" என்பதை உணர்ந்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு தானாய் இருப்போம் - தன்மையுணர்வில் நிற்போம். இத்தோடு எல்லாம் முடிந்தது. இதைத்தான் "பெருமான் புன்முறுவல் பூத்து முப்புரம் எரித்தார்" என்று மேலே உருவகப்படுத்தியுள்ளனர்!

முப்புரம் எரிப்பு என்பது வடக்கிருந்து மெய்யறிவு பெறுதல். குன்றம் குனித்தது என்பது மனதை அழிப்பது.

🔸மூலமலை அந்தமலை

உள்ளபொருளான பரம்பொருள் எல்லாவற்றிற்கும் முன்னரும் இருக்கும். எல்லாம் அழிந்த பின்னரும் இருக்கும். என்றும் இருக்கும்.

🔸சுந்தரற்கா அன்றுஇரவில் தூதுபோய் வந்தமலை

#குரு #நமச்சிவாயர் 🌺🙏🏽 தனது மெய்யாசிரியரான குகை நமச்சிவாயருக்கு 🌺🙏🏽 அடுத்தபடியாக அதிகம் குறிப்பிடுவது திரு சுந்தரமூர்த்தி நாயனாரைத்தான் 🌺🙏🏽!!

நாயனாருக்காக, அவர்தம் முதல் மனைவியான பரவை நாச்சியாரிடம் தூது சென்று அவரது கோபத்தை தணித்த பகவான் போன்ற ஒரு மெய்யறிவாளரைக் 🌺🙏🏽 குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment