Saturday, July 18, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #57: வேட்ட அடியார்...

வேட்ட அடியார் விளக்கும் சிவஞான
நாட்டம் பொழிபேர்ஆ னந்தநீர் - ஆட்டக்
குளிக்குமலை நாளும் குறைவுஇலாச் செல்வம்
அளிக்குமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #57

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸 #வேட்ட #அடியார் - குளிக்குமலை

பாரம்பரிய பொருள்: வேள்வி செய்யும் அடியார் விளக்கிக் காட்டும் உள்ளபொருளை மெய்யன்பர்கள் உணர்ந்தவுடன், அவர்களிடமிருந்து பெருகிப் பொழியும் பெருமகிழ்ச்சி கண்ணீரால் அவர்கள் இறைவனைக் குளிப்பாட்ட, இறைவனும் மகிழ்ச்சியுடன் குளிப்பார்.

"வேள்வி செய்யும் அடியார்" என்றவுடன் ஆரியப் பூசாரிகளைக் கற்பனை செய்துகொள்வோம். இது தவறு. குண்ட நெருப்பில் சுள்ளிகளைப் போடுவது மட்டும் வேள்வியல்ல. நாம் செய்யும் எல்லா செயல்களுமே வேள்விதான். இவ்வுலகில் வாழ்வதே ஒரு வேள்விதான்.

🔹அடிப்படை செயலளவில், #வேள்வி என்பது குண்டத்திலுள்ள நெருப்பில் உயிரற்றப் பொருட்களைப் போடுவது. அதாவது, உடலென்னும் குண்டத்திலுள்ள தன்மையுணர்வு என்னும் நெருப்பில் நம்முள் தோன்றும் எண்ணங்களைப் போடுவது!

(எண்ணங்கள் உயிரற்றவை. இவற்றைப் போடுவது என்பது இவற்றைக் கவனியாதிருப்பது.
இச்செயலை "காமனை எரிப்பது" என்றாலும் தகும்.)

🔹அடுத்தது, #அடியார். தன்மையுணர்வே இறைவனடி. இவ்வுணர்வை விடாதிருப்பவரே இறைவனடியை இறுகப் பிடித்திருப்பவர். அடியார் - தன்மையுணர்வில் இருப்பவர்.

ஆக, வேட்ட அடியார் = உள்ளபொருளை உணர்ந்தவர். மிக உயர்ந்த பக்குவ நிலையில் இருப்பவர். இவர் அடுத்து அடைய வேண்டிய நிலை - நிலைபேறு.

இப்படிப்பட்டவர்கள் தம்மை நாடிவரும் அன்பர்களுக்கு காட்டும் பாதையே "#சிவஞான #நாட்டம்". மெய்யறிவு கண்ணோக்கம். புறமுகமாகவே செல்ல பழக்கப்பட்டிருக்கும் நமது கவன ஆற்றலை நம் மீது - தன்மையுணர்வின் மீது - திருப்புவதே மெய்யறிவுக் கண்ணோக்கம். தன்மையுணர்வின் மீது திருப்புவது என்பது தானாய் இருப்பது.

நல்ல பக்குவ நிலையை அடைந்த ஒரு அன்பர், இத்தகைய கண்ணோக்கத்தை மேற்கண்ட வேட்ட அடியாரிடமிருந்து பெறும்போது, தன்னிலை - சிவநிலை - அடைந்து, பிறவியின் நோக்கம் முடிவடைந்துவிட்ட பெருமகிழ்ச்சியில் அவரது கண்களிலிருந்து நீர் பெருகிப் பொழிய வாய்ப்புள்ளது. சிவமாய் அவர் சமைந்து நிற்கும் வரை அவரது உடல் லிங்கத்திருமேனி எனப்படும். இப்போது அவரது கண்களிலிருந்து பொழியும் நீர் அவரது லிங்கத்திருமேனியை நனைக்கும். இவ்வாறு நனைப்பதே "பேரானந்த நீராட்டு" ஆகும்.

(சிவநிலையை அடைந்து, விதிவசத்தால் அதை இழந்து, பல காலம் போராடி, மீண்டும் அந்நிலையை அடையும் அடியார்களிடமும் மேற்கண்ட விளைவு ஏற்பட வாய்ப்புள்ளது.)

🔸நாளும் #குறைவு #இலாச் #செல்வம் அளிக்குமலை

உலகிலுள்ள எல்லா செல்வங்களும் மாறக்கூடியவை & அழியக்கூடியவை. மாறாத, அழியாத, என்றும் குறையாத ஒரே செல்வம் மெய்யறிவு - நம்மைப் பற்றிய அறிவு - நான் எனும் தன்மையுணர்வு. இவ்வுணர்வு என்றுமே கூடாது, குறையாது, மறையாது & அழியாது. கனவு, நனவு, தூக்கம் என்று மாறிக்கொண்டேயிருக்கும் மூன்று நிலைகளிலும் மாறாமல் இருப்பது இவ்வுணர்வு மட்டுமே. இறப்பின் போதும் உடல் தான் இறக்கிறது. இவ்வுணர்வு இறப்பதில்லை.

"இறக்கும் தருவாயில் நமது கடைசி எண்ணம் எதுவோ அதுவாக அடுத்த பிறவி அமைகிறது என்று பகவத்கீதையின் 8ஆம் படலத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, அக்கணம் நமது தன்மையுணர்வை இறுகப் பற்றிக்கொள்வதற்கு, இப்போதே அது என்ன என்று தேடிப் பிடித்துக்கொள்ளுங்கள்." என்று அறிவுருத்தியுள்ளார் பகவான் 🌺🙏🏽 (வசனாம்ருதம் #621).

தன்மையுணர்வே நாளும் குறைவு இலாச் செல்வம்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment