Thursday, July 2, 2020

திருவாசகம் - மாணிக்கவாசகப் பெருமான் 🌺🙏🏽 சொல்ல, திருச்சிற்றம்பலமுடையான் 🌺🙏🏽 எழுதியது!!

மேலுள்ள படத்தைப் பார்த்ததும் இவ்விடுகையின் தலைப்பு தான் நினைவுக்கு வரும்! உடனே, பெரும்பாலானோர், கூத்தபிரானே மனித உரு தாங்கி வந்து, மணிவாசகர் பாடியதை சுவடிகளில் பதிவு செய்தார் என்று கற்பனை செய்துகொள்வார்கள். 😊 இது தவறு.

இங்கு கூத்தபிரான் எனில் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 போன்று தன்னையுணர்ந்த மாமுனிவர் என்று பொருள். மணிவாசகர் தில்லையில் சமாதியடைந்ததால் அம்பலவாணர் என்று குறிப்பிட்டுள்ளனர். பெருமான் வேறெங்காவது சமாதி அடைந்திருந்தால் அத்தலத்து இறைவனைக் குறிப்பிட்டிருப்பர்.

உண்மையில் நாம் எல்லோருமே அம்பலவாணர்கள் தான்! அம்பலத்தை ஆளும் வாணர்கள்!! இதை நாம் உணர்வதில்லை. நம் கண் முன்னே பரந்து விரியும் இந்த உலகமாகிய அம்பலம் நம்முள்ளிருந்து தான் உதிக்கிறது. இந்த அம்பலத்தில் தோன்றும் காட்சிகளோ பல பிறவிகளாக நாம் ஆடிய, ஆடிக் கொண்டிருக்கின்ற கூத்துகளின் விளைவுகள்.

எப்படி இந்த கூத்தை நிறுத்துவது? இதற்கான விடையை திருவாலங்காட்டில் கூத்தாடும் திரு இரத்தினசபாபதி பெருமானின் திருவுருவத்தில் காணலாம்.

(இரத்தினசபாபதி பெருமானுடன் இருக்கும் அம்மையின் பெயர் "அருகிலிருந்து வியந்த அம்மை"! பெயரே எவ்வளவு அழகு!! 😍)

பல காலமாக காளியன்னையுடன் போட்டி நடனமாடும் பெருமான், ஒரு சமயத்தில் தான் அணிந்திருக்கும் காதணியைத் தானே தன் காலால் கழற்றுகிறார். பெருமான் வென்றுவிடுகிறார். நடனம் முடிந்துவிடுகிறது.

🔹காளியன்னை - மாயை. பெருமான் - நாமே!!

🔹அன்னையுடன் பெருமான் ஆடும் நடனம் - ஒரு விதத்தில், உலக வாழ்க்கை. இன்னொரு விதத்தில், தன்னாட்டம் தவிர்த்து மீதமுள்ள அனைத்து ஆன்ம பயிற்சிகள்.

🔹காதணியைக் கழட்டுவது - புறமுகப் பார்வையை தன் மீது திருப்புவது. தன்னை நாடுவது. தன்னாட்டம். "தன்மையின் உண்மையைத் தான் ஆய தன்மை அறும்" என்பது பகவானது வாக்கு. இச்சொற்றொடரின் உருவ வடிவம் தான் இரத்தினசபாபதி பெருமான்!! 🌺🙏🏽😍

ஆக, நாம் விரும்பினால், முயன்றால் மட்டுமே நாம் ஆடும் கூத்தை நிறுத்த முடியும்.

நம் ஒவ்வொருவரது ஆன்ம பயணமும் ஒரு திருவாசகம் தான்! அதை எழுதும் சிற்றம்பலமுடையவர்களும் நாம் தான்!!

oOOo

திருவாசகத்தின் இறுதிப்பாடல்:

செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையுமோர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மை எனக்கருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

(சிதடரொடு - குருடரோடு - மெய்ப்பொருள் பற்றி அறியாதோர். நாய் சிவிகை - நாயுருவி சிவிகை - ஆணவமற்ற பேறு - நிலைபேறு. நாயுருவி உடல் வீக்கம் போக்க வல்லது. இங்கு வீக்கம் என்பது ஆணவம்.)

பொருள்: திருநெறியைப் பற்றி அறியாத அறிவிலிகளோடு கூடித் திரிகின்ற என்னை, யாவற்றிற்கும் முதல்வனாகிய எம்பெருமான் மும்மலங்களையும் அறும்படி செய்து, என்னையும் ஓர் பொருளாக்கி, நாயுருவிச் சிவிகையில் ஏற்றுவித்த அழகன் (அல்லது, தாய் போன்றவர்) எனக்கருளிய வழியினை/விதத்தை பெறவல்லார்/ஏற்றுக்கொள்பவர் வேறு யார்?

(நால்வர் துதியில் மணிவாசகப் பெருமானைக் குறிக்கும் அடைமொழி - ஊழிமலி!! "செத்து செத்துப் பிழைத்தவர்" என்பது பொருள். எனவே தான் "எனக்கருளிய ஆறு ஆர் பெறுவார்" என்று பாடியிருக்கிறார்! இப்பெருமானும் அப்பர் பெருமானும் 🌺🙏🏽 பட்ட துன்பங்கள் எண்ணிலடங்கா!!)

oOOo

ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி 🌺🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment