Tuesday, September 1, 2020

உமையன்னை ஒரு ஆடிப்பூரத்தன்று பருவமடைந்ததாக தொன்நம்பிக்கையாம்!!

"நம் சமயத்தை முதலில் யாரிடமிருந்து காப்பாற்ற வேண்டும்?" என்ற கேள்வியெழுந்தால், "இப்படி புருடா விடுபவர்களிடமிருந்துதான்!" என்று பதில் வரும். உருவகப்படுத்துவதற்கு வேறு வழியே இல்லையா?

ஒரு பெண் பருவமடைந்துவிட்டாள் எனில் அவளது உடல் கருத்தரிக்கத் தயாராகிவிட்டது என்று பொருள். உமையன்னை நமது உடல், உலகம் என எல்லாவற்றையும் குறித்தாலும், இங்கு மண்ணைக் குறிக்கிறார். ஆடி மாதத்தில் வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கியிருக்கும். தென்மேற்குப் பருவமழையால் நீர் வளமும் சற்று உயர்ந்திருக்கும். அடுத்த பருவத்திற்கான உழவுப்பணிகளை தொடங்க ஏற்ற மாதம். அதாவது, ஆடி மாதத்தில், மண்ணானது (உமையன்னை) விதைகளைப் பயிர்செய்ய (கருவுற) ஏற்றதாகிறது!

"ஆடிப்பட்டம் தேடி விதை" என்ற பழமொழியின் மூலம், நம் பெரியவர்கள் அழகாகச் சொன்னதைத்தான் இவர்கள் "உமையன்னை பருவமடைந்தார்" என்று திரித்திருக்கிறார்கள்.

oOOo

அருகிலுள்ள கேரளத்தில் கொண்டாடப்படும் திருவோணமும் அடுத்தப் பருவத்தை கோலாகலத்துடன் வரவேற்கும் திருவிழா தான். வாமனர்-மகாபலி கதை மெய்யறிவு பெறுவது பற்றியதாக இருந்தாலும், கீழ் உலகத்திலிருந்து பேரரசர் மகாபலி வருகை தருவது என்பது அன்றைய கேரளப் பொருளாதாரத்தின் மறுதொடக்கத்தைக் குறிக்கும்.

தென்மேற்கு பருவமழையால் பெரும் இழப்புகளைக் கண்டு, "இந்த மழை ஓய்ந்தால் போதும். வேறு ஒன்றும் வேண்டாம்." என்றளவிற்கு மனம் வெறுத்துப் போயிருப்பர். ஆனால், மழை ஓய்ந்ததும், மீண்டும் ஆசைகளை வளர்த்துக்கொள்வர். நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பதும், வளர்ப்பதும் மனிதர்களின் நல்லாசைகள் தாம் என்பதால், ஆசைகள் முளைவிடுவதை "மகாபலி வருகை தருவதாக" சித்தரித்து, மக்களை ஊக்குவித்துள்ளனர்.

இந்த உருவகம் எப்படியிருக்கிறது? மேற்சொன்ன "பூப்பு" உருவகம் எப்படியிருக்கிறது?

நம் சமயத்தின் மீது சேற்றை வீசத் துடிக்கும் இந்து சமய, சமூக & பாரத எதிரிகளுக்கு நாமே சேற்றை தூக்கி கொடுத்தது போலிருக்கிறது!!

No comments:

Post a Comment