Showing posts with label ஞானம். Show all posts
Showing posts with label ஞானம். Show all posts

Monday, October 22, 2018

மகரிஷி வாய்மொழி: வேலை தடையல்ல. அந்த வேலையைச் "செய்கிறவன் நான்" என்ற எண்ணமே தடை!!



🔥 வேலை தடையல்ல. அந்த வேலையைச் "செய்கிறவன் நான்" என்ற எண்ணமே தடை.

🔥 எந்த வேலையும் உனதல்ல என்ற எண்ணம் எப்போதும் உன் கவனத்திலிருந்தால் அதுவே போதும். இதை நினைவுப்படுத்திக் கொள்ள முதலில் முயற்சி தேவை. பின்னர், இது இயல்பாகவும் இடைவிடாதுமிருக்கும். வேலையும் நடந்து கொண்டிக்கும். உனது மன அமைதிக்கும் குறைவிருக்காது.

🔥 "வேலை செய்வது யார்?" என்று ஆராய்ந்து உன் உண்மை இயல்பை நினைவிற் கொள்; #வேலை தானே நடக்கும்; உன்னைக் கட்டுப்படுத்தாது. வேலை செய்யவோ துறக்கவோ முயலவேண்டாம். உன் முயற்சியே தளை.

🔥 ஆத்மாவைக் கவனிப்பதே வேலையை கவனிப்பதாகும்.

-- பகவான் ஸ்ரீரமணர், #மகரிஷி #வாய்மொழி 🌸🙏

எங்கேயோ, எப்போதோ, யாரோ என்று குழப்பாமல் இங்கேயே, இப்போதே, நீயே என்று தெளிவு தருபவை தான் #உபதேசங்கள் (உப - அருகில்). இன்றைய காலத்தில் (இனி வரும் காலங்களிலும்), இதற்குப் பொருத்தமானவை பகவானின் அறிவுரைகள் மட்டுமே.

அகம், புறம் என இரண்டு படகுகளில் ஒரே நேரத்தில் பயணம் செய்ய வேண்டியக் கட்டாயத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கு (அதாவது, நம்மைப் போன்று நிலைபேற்றை "அடைய" முயலுபவர்களுக்கு 😀), பகவானின் இந்த அறிவுரைகள் படிக்கும் போதே மன ஆறுதல், நிம்மதி மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 😍 தெளிவையும் கொடுக்கும். இவற்றைப் பற்றி சிந்திக்கும் முன்னர், நமக்குத் தேவையான அடிப்படை அறிவு: நம்முடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் முதல் அண்டவெளியில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் வரை அனைத்தையும் நடத்துவது இறைவனின் ஆற்றலே (இறைவனும் இறைவனின் ஆற்றலும் வேறுவேறல்ல).

இந்த அடிப்படை உண்மையை நாம் மறந்து விடுவதாலேயே அனைத்து துன்பங்களுக்கும் உள்ளாகிறோம். நம் மனதில் எண்ணங்களைத் தோற்றுவித்து, அதற்கு செயல் வடிவம் கொடுக்க வைத்து, தேவையான மாற்றங்களை நிகழ்த்திக் கொள்வது வரை அனைத்தையும் நடத்துவது இறைவனே. எனில்,

▶ அனைத்து வேலைகளும் யாருடையவை? இறைவனுடையது. நமதல்ல.
▶ அனைத்து வேலைகளைச் செய்வது யார்? இறைவனே. நாமல்ல.
▶ எல்லாம் அவர் செயல் எனில், நம் பணி என்ன? ஆத்மாவைக் கவனிப்பதே. நம் கவன ஆற்றலை (மனதை) நமது தன்மையுணர்வின் (ஆன்மாவின்) மீது வைத்திருப்பதே.

மனதை ஒன்றின் மீது செலுத்திக் கொண்டு, இன்னொரு வேலையை எப்படி செய்ய முடியும் என்ற கேள்வி எழலாம். இதற்கு பகவான் கொடுத்த பதில், "ஒரு நடிகனைப் போல". எந்த வேடம் போட்டுக் கொண்டு நடித்தாலும், தான் ஒரு நடிகன் என்பதை ஒரு நடிகன் மறந்து விடுவதில்லை. இவ்வாறே, எதில் ஈடுபட்டாலும், நமது உண்மையை நாம் மறக்காமல் இருக்க முடியும். மறக்காமல் இருந்தாலே போதும். இது மட்டுமே நமக்கு சாத்தியமும் கூட.

அடுத்து, நாம் செய்யும் வேலைகள் எதிர்வினைகளை உருவாக்காதா? பற்றில் முடியாதா? என பல கேள்விகள் எழலாம். பிறவியிலிருந்தே மெய்யறிவில் திளைத்த #சுக #மகரிஷி 🙏 பிற்காலத்தில் குழந்தைப் பெற்றுக்கொண்டார். இஸ்ரவேலிலிருந்து தப்பி, காஷ்மீரம் வந்து, சாலிவாகன மன்னரின் சபையில் அங்கம் வகித்த #ஞானி #யேசு -வும் 🙏, மன்னரின் அறிவுறுத்தலின் படி, தனது பணிப்பெண் மூலம் குழந்தைப் பெற்றுக்கொண்டார். மகரிஷி #அஷ்டாவக்கிரரின்🙏 வழிகாட்டுதலின் படி மெய்யறிவு பெற்ற மன்னர் #ஜனகர் 🙏 ஆட்சிக்கட்டிலிலே தொடர்ந்து வீற்றிருந்தார். #கொங்கணவச் #சித்தரின் 🙏 (#திருமலைப் #பெருமாள்) வாழ்வில் வரும் #வாசுகி #அம்மையாரும் 🙏, இறைச்சி வியாபாரியும் 🙏 மெய்யறிவு பெற்றிருந்தாலும் இல்லறத்தில் இருந்தவர்கள். இறைச்சித் தொழில், இல்லறம், அரச பதவி, உடலுறவு - பற்றை பெருகச் செய்ய இவற்றை விட வேறென்ன வேண்டும்? எதையும் "நான் செய்கிறேன்" என்ற எண்ணத்துடன் செய்தால் தான் பற்று ஏற்படும். தன்மையுணர்வில் நிற்கும் போது நாம் சாட்சி மாத்திரமே. விளைவுகள் நம்மை பாதிக்காது. இங்ஙனமே இந்த மகான்கள் வாழ்ந்தார்கள்.


இறுதியாக, வேலை என்ற சொல்லைப் பற்றி சற்று பார்ப்போம்.

வேலை ஒலியை விழுங்கியெழ விளங்கி ஓங்கும் வியப்பினதால் (பெரிய புராணம்)

வேலை உலகில் பிறக்கும் வேலை ஒழிந்தோமில்லை (திருவரங்கக்கலம்பகம்)

மேலுள்ள 2 பாடல் வரிகளிலும் வரும் வேலை என்னும் சொல் கடலைக் குறிக்கிறது ("கடல் எழுப்பும் ஒலியை", "கடல் சூழ்ந்த உலகில்"). தேவார மூவர் இச்சொல்லை கடல் என்ற பொருளிலேயே பயன்படுத்தியுள்ளனர். இது தவிர இச்சொல்லுக்கு கானல்நீர், கடற்கரை மற்றும் சில பொருள்களும் உண்டு (இங்கு கடல், கடற்கரை & கானல் நீர் ஆகிய மூன்றை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளேன்). இந்த மூன்று பொருள்களுக்கும் இடையே ஒரு ஒற்றுமை உண்டு - நிலையற்ற தன்மை. கடலின் மேற்பரப்பு சலித்துக் கொண்டேயிருக்கும். கானல் நீர் காட்சி தெளிவாக இல்லாமல் ஆடிக் கொண்டே இருக்கும். கடற்கரையின் மேற்பரப்பு மாறிக்கொண்டே இருக்கும். இவற்றிற்கெல்லாம் காரணம் காற்றாகும் (கடற்கரை காற்றாலும் அலைகளாலும் மாறுகின்றது. அலைகள் உருவாவதற்கு காரணமும் காற்றே). இது போன்றே இவ்வுலகிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன (உருவாக்குவது, உருமாற்றுவது & அழிப்பது என அனைத்தும் மாற்றங்களே). இதற்குக் காரணம் காற்று பூதத்தை அடிப்படையாகக் கொண்ட உயிரிகளின் மனமாகும். ஆக, வேலை எனில் மாற்றம், மாற்றுவது, மாறுவது என்று பொருள் கொள்ளலாம்.

என்ன மாறுகிறது? ஆற்றல் மாறுகிறது. வே என்ற எழுத்தின் பொருள் வெப்பம் / எரி. இன்று, பரங்கி அழிவியலின் (நமது அறிவியலே அறிவியல். உலகக் கொள்ளையர்களான பரங்கியரது அறிவியல் அழிவியலாகும். ✊👊👊💪) கோட்பாடுகளில் ஒன்று: ஆற்றல் அழியாதது. ஒன்றிலிருந்து இன்னொன்றாக உருமாற்றம் மட்டுமே ஆகும். இது எங்கிருந்து அந்த திருடர்களுக்கு கிடைத்திருக்கும்? நம்மிடமிருந்து தான். இதை அன்றே உணர்ந்ததால் தான், வெப்பத்தை அடிப்படையாகக் கொண்ட வேலை என்ற சொல்லை உருவாக்கினார்கள் நம் முன்னோர்கள். 💪

🌺🌻🏵

நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன் 
தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான் 
தன் கடன் அடியேனையுந் தாங்குதல் 
என் கடன் பணி செய்து கிடப்பதே.    

-- அப்பர் பெருமான், தேவாரம் 5.19.9 🌸🙏


ஓர் உயிரி இவ்வுலகில் எங்ஙனம் வாழவேண்டும் என்பதை நம் திருத்தலங்களில் கருவறை முன் நிறுவப்பட்டிருக்கும் #சிவன்காளை வடிவில் வடித்திருப்பர் நம் மூதாதையர். அதை நம் உள்ளம் கவரும் பாடலாக வடித்திருக்கிறார் நாவின் அரசர். 😍

🌺🌻🏵

posted from Bloggeroid

Thursday, October 11, 2018

மஹரிஷி வாய்மொழி: உழைப்பும், தன்னை அறிதலும்



ஒருவன் உழைக்கவேண்டியிருக்கற வரையில் தன்னை அறியும் முயற்சியையும் கைவிடக் கூடாது.

-- பகவான் ஸ்ரீரமணர், #மகரிஷி #வாய்மொழி 🌸🙏

இந்த அறிவுரையும், உலக வாழ்க்கையை விட்டு ஒதுங்க முடியாமலும், ஆன்ம வாழ்க்கையில் முழு மூச்சாக ஈடுபடமுடியாமலும், மெய்யறிவைப் பற்றியத் தெளிவு கிடைக்காமலும் போராடும் அன்பர்களுக்காக பகவான் அருளியது.

🌼🏵🌹🌻🌷🌺🌼

அவர் குறிப்பிடும் "தன்னை அறிதல்" என்பது நான் எனும் நமது தன்மையுணர்வை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொள்வதே (நமது கவன ஆற்றலை அத்தன்மையுணர்வில் கொண்டு போய் மீண்டும் மீண்டும் நிறுத்துவது என்றாலும் இதே பொருள் தான்).

"உழைக்கவேண்டியிருக்கற" என்ற சொற்களின் மூலம் பகவான் குறிப்பிடுவது என்னவெனில் "நாம் உழைக்கின்றோம்" என்ற எண்ணம் (தனியிருப்பு) இருக்கும் வரை என்பதையே. (1) தனியிருப்பு அழிந்த பிறகு உழைப்பு என்று எதுவும் கிடையாது. எல்லாம்...

🙏 அரவனின் முடிவில்லாப் பெருமகிழ்ச்சி கூத்துத்தான் (எல்லாம் இறைவனே)

🙏 பிணக்காட்டில் பேயோடு கூத்தன் தெவிட்டாமல் ஆடும் கூத்துத்தான் (இறைவனும் இறைவியும் ஆடும் கூத்து)

🙏 பெருமானின் பேய்த்தொழிலாட்டி நடத்தும் தொழில் தான் (இறைவன் எனும் அரங்கில் இறைவி ஆடும் ஆட்டம்)

(நம் அருளாளர்கள் 🙏 இவ்வண்டத்தின் இயக்கத்தை உணர்ந்த விதங்கள் 😊)

🌸 தானாம் ரமணேசன் அடி போற்றி 🌸

🌼🏵🌹🌻🌷🌺🌼

குறிப்பு:

1. #உழை என்ற சொல் உழு என்ற சொல்லில் இருந்து வருகிறது. உழு எனில் உட்செலுத்து. இன்று, ஏரை நிலத்தினுள் செலுத்துவது என்ற பொருள் கொண்டுள்ளோம். புழு என்பது உட்புகுந்து செல்லும் உயிரியாகும். முழுகு என்பது நீரினுள் உட்புகுதலாகும். நுழை என்பது ஒன்றினுள் செலுத்துவதாகும். மழை என்பது வளிமண்டலம் புகுந்து வரும் நீராகும்.

இவ்வரிசையில், உழை என்பதும் ஒன்றை மற்றொன்றினுள் செலுத்துவதாகவோ, ஒன்று மற்றொன்றினுள் நுழைவதாகவோ இருக்கலாம். ஆனால், சென்னை பல்கலையின் சொல்லகராதி கொடுக்கும் பொருள் "உட்படுத்து". உட்படுத்துதலோ, உட்புகுதலோ, உட்செலுத்துவதோ எதுவாக இருந்தாலும் இரண்டு பொருட்கள் சம்பந்தப்படுகின்றன. ஒன்று நாம். இன்னொன்று உலகம்.

நாம் என்பது நமது மனதை, நமது தனியிருப்பை, குறிக்கும். மனம் முடிவு செய்ததை உடல் செய்வதால், உடலைக் கருவியாக மட்டுமே கருதியுள்ளனர் நம் முன்னோர்கள். அடுத்தது, உலகம். நம் சமயத்தின் சில பிரிவுகளைத் தவிர மற்றவை உலகைக் கொடியது என்றே உருவகப்படுத்துகின்றன. அன்றே இந்நிலை எனில், இன்று? இப்படிப்பட்ட உலகினுள் புகும் போது தகுந்த எச்சரிக்கையுடன் புக வேண்டுமல்லவா? எனவே தான் பகவானின் அறிவுரை முக்கியத்துவம் பெறுகிறது! 👍

உழை எனில் நமது மனதை உலகின் பால் செலுத்துவது அல்லது உலகினுள் புகுத்துவது / நுழைப்பது அல்லது மாய உலகின் விதிகளுக்கு உட்படுத்துவது என்று எடுத்துக் கொள்ளலாம். எனில், உழைப்பு இல்லாத நேரத்தை நம் முன்னோர்கள் என்னவென்று அழைத்தார்கள்? ஓய்வு. ஒய்வு - ஒழிவு - அழிவு - அமைதி. மனமழிந்து கிடைக்கும் அமைதி.

(இவையெல்லாம், நம் அன்னைத் தமிழ் எவ்வளவு தூரம் ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதையும், நம் முன்னோர்கள் எவ்வளவு தூரம் மெய்யறிவு தாகம் கொண்டவர்களாக இருந்தனர் என்பதையும் காட்டுகின்றன. 😍)

இப்போது பகவானது அறிவுரையை சற்று மாற்றி வாசிப்போம்: ஒருவன் மனதை உலகின்பால் செலுத்த வேண்டியிருக்கிற வரையில், தனது தன்மையுணர்வை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

🌸 திருச்சிற்றம்பலம் 🌸

posted from Bloggeroid

Tuesday, December 27, 2016

திருவண்ணாமலை தீபம் - தி.பி. 2047 (2016)

நடந்து முடிந்த தீபத்திருநாளன்று பதிவு செய்தக் காட்சிகளை வைத்து தொகுக்கப்பட்ட காணொலியை இணைத்துள்ளேன்:

https://plus.google.com/+SaravananG_Enum_Dhasaman/posts/ER5PBUUSViP
(அ)
https://m.facebook.com/story.php?story_fbid=10154930854911052&id=698176051

*"விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்" என்றார் சம்பந்தமூர்த்தி பெருமான்.* அப்பேர்பட்ட விளக்கினை - பிறப்பறுக்க வல்ல அண்ணாமலையார் தீபத்தை - கண்டு மகிழவும்! மற்றவருடன் பகிரவும்!!

🌼🙏🌼

*இத்தனுவே நானாம் எனுமதியை நீத்தப்*
*புத்தி இதயத்தே பொருந்தி அகநோக்கால்*
*அத்துவிதமாம் மெய் அகச் சுடர் காண்கை பூ*
*மத்திஎனும் அண்ணாமலைச் சுடர் காண் மெய்யே*

*– பகவான் ஸ்ரீரமணர் எழுதிய “தீப தர்சன தத்துவம்”*

🌸🙏🌸

காணொலியில் வரும் அண்ணாமலையார் பாதம் பற்றி...

பெரும்பாலானோர், ஜடாமுடி, நீலத் திருமேனி, புலித்தோல், வெண்ணீறு, உருத்திராக்கக் கொட்டைகள், நாகங்கள் போன்ற அடையாளங்களைத் தாங்கிய ஒருவர் கையில் திரிசூலத்துடன் இங்கே நின்றிருப்பார் என எண்ணிக் கொள்கிறார்கள். இது மிகமிக தவறாகும்.

ஏதேனும் ஒரு மகான் இங்கு ஞானமடைந்திருக்கலாம். அவர் இங்கேயே உடலை உகுத்திருந்து, அவரது உடல் இங்கேயே புதைக்கப்பட்டிருந்தால், மேலே அடையாளமாக சிவலிங்கத்தை வைத்திருப்பர் நம் முன்னோர். ஆனால், இங்கே சிவலிங்கம் இல்லை. பாதாம் மட்டுமே உள்ளது.

*என்றும் மாறாமலும், அழியாமலும், சுயப்பிரகாசத்துடனும் நம்மில் விளங்குவது நம் உள்ளுணர்வாகும். இதையே இறையுணர்வு, கடவுள், ஈஸ்வரன், இறைவனின் பாதம், சிவபதம் என்றெல்லாம் அழைக்கிறோம். இந்த இறையுணர்வை தெளிவாக உணராமல் தடை செய்வது "நான் இன்னார்" என்னும் பொய்யறிவு. இந்தப் பொய்யறிவு நீங்கப் பெறுவதே ஞானமடைவது.* அப்படிப்பட்ட நிகழ்வு யாருக்கேனும் இவ்விடத்தில் நிகழ்ந்திருக்கும். அதைக் குறிப்பிடவே பாத அடையாளத்தை வைத்திருக்கின்றனர். ஒரு புனித நிகழ்வு இங்கே நடந்திருப்பதால், இவ்விடம் பாதுகாக்கப்பட வேண்டியதாகிறது.  சுருங்கக் கூறின், புத்த பகவான் ஞானமடைந்த போதி மரத்தடி போல. எவ்வாறு அப்போதி மரமும், அதைச் சுற்றியுள்ள இடமும் பாதுகாக்கப்படுகிறதோ, அவ்வாறே இவ்விடமும் பாதுகாக்கப்படவேண்டும்.

இது போன்ற இடங்களில் என்ன செய்ய வேண்டும்?

போதி மரத்தடியில் என்ன செய்வோம்? புத்த பகவானை வணங்குவோம். அவரது அறிவுரைகளைப் பற்றி சிந்திப்போம். அது போன்றே, இங்கே ஞானமடைந்த மகானை வணங்கவேண்டும். அவரது அறிவுரைகளைப் பற்றி சிந்திக்கவேண்டும். அவர் யாரெனத் தெரியாது எனும் போது, நமது குருவையும் அவரது அறிவுரைகளைப் பற்றியும் சிந்திக்கவேண்டும். அப்படி குருநாதர் யாரும் அமைந்திருக்காவிடில், நம் இறையுருவங்கள் உணர்த்தும் பேருண்மைகளை சிந்திக்கவேண்டும். அதுவும் இயலாவிடில், *"நாம் பிறந்தது முதல் இக்கணம் வரை, நம்மில் மாறாதது எது? அழியாதது எது? சுயப்பிரகாசத்துடன் விளங்குவது எது?"* என்று சிந்திக்கவேண்டும். இந்த சிந்தனையோட்டமே காலப்போக்கில் நாம் தேடும் உண்மையைத் தெள்ளென நமக்கு உணர்த்திவிடும்.

💮 திருச்சிற்றம்பலம் 💮

Sunday, May 1, 2016

🔯 பானக நரசிம்மர் - மடக் மடக் டமக் டமக் 🔯


(தினமலர் - ஆன்மிகமலர் - சென்னை - 23/04/2016)

இது போன்ற அறிவுகெட்ட கதைகளால் தான் நம் சமயம் கேலிக்குள்ளாகிறது! 😠 பெரும்பாலான இந்துக்கள் சமயமூடர்களாகவும், சில சமயம் தாம் சார்ந்த சமயத்தை எள்ளி நகையாடும் கருங்காலிகளாகவும் இருப்பதற்கும் இந்தக் கதைகளும் இதைப் புனைந்த சுயநலமும் குறுகிய மனப்பான்மையும் கொண்ட மனிதர்களே காரணம்!!

💥 "பானகால நரசிம்மர்" - தெலுங்கில் பானகாலு என்பதையே தமிழில் பானகால என எழுதியிருக்கிறார்கள். சரியான தமிழ் பெயர் "பானக நரசிம்மர்". பெயர்களை சரியாக தமிழுக்கு மாற்றாமல் வெளியிடுவது என்பது விற்பனை யுக்திகளுள் ஒன்று. கடவுளை விற்பது பரங்கியரின் வேலை. 😝 இந்த ஈன வேலையை நாம் செய்யத் தேவையில்லை.

💥 "தல வரலாறு" என்பது பெரும்பாலும் "தல புருடா"! சில சமயம் ஏதாவது உண்மை அதில் மறைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும், "டுஷ்" (கண்டசாலாவின் இசை - தந்திரக் காட்சிகளுக்கு உபயோகப்படுத்துவது 😂) காட்சிகள் தான் நிறைந்திருக்கும். நம் மக்களை என்றோ சமயமூடர்களாக்கி விட்டனர். மூடர்களை வழிநடத்தவும் கவர்ந்திழுக்கவும் உபயோகப்படுவது டுஷ் விஷயங்களும் பயமுறுத்தல்களும் ("சாமி கண்ணை குத்திடும்") தான்! (மற்ற மதங்களிலும் இதே கதைதான்) 😂😂

💥 "பாதி மாயம். மீதி பிரசாதம்." என்பது திருநெல்வேலி அல்வா. 😛 சிலை "மடக் மடக்" என்று சப்தமிட்டாலும் சரி, "டமக் டமக்" என்று சப்தமிட்டாலும் சரி, இதற்கும் ஆன்மிகத்திற்கும் சம்பந்தமே இல்லை. இது சிலை செய்தவரின் திறமையையும், சிலையை ஸ்தாபித்தவரின் திறமையையும் காட்டுகிறது. சிலைக்கு கீழே பானகத்தை வெளியேற்ற / உறிஞ்ச வழி செய்திருப்பார்கள். மலைப்பகுதி என்பதால் சுலபமாக வெளியேறும் / உறிஞ்சப்படும்.

💥 "நரசிம்மம்" என்ற பெயரை பெரும்பாலும் நரன் + சிம்மம் என்று பிரித்து "பாதி மனிதன் + பாதி மிருகம்" என்று பொருள் கொள்வர். ஆனால், உண்மை அதுவல்ல.

ந + ர + சிம் + ஹ என்பதே சரியாக பிரிக்கும் முறை.

ந - இல்லை
ர - காமம் / பாசம் / பற்று
சிம் - பிளத்தல் / பலி கொள்ளுதல்
ஹ - சிவபெருமான் (பரமன்) (#)

"எல்லா பற்றுகளையும் விட்ட ஜீவனை, பரமன் தானாகவே ஆட்கொள்ளுவான்" என்பதே சரியான பொருள். இதையே தான் நரசிம்ம அவதாரக் கதை உணர்த்துகிறது. (##)

இப்படி ஞானமடைதல் நிகழ்வை ஒவ்வொரு மகானும் ஒவ்வொரு விதமாக விளக்கியிருப்பார்கள். உதாரணத்திற்கு சில....

💮 திருவரங்கத்தில் நரசிம்மத்திற்குப் பதிலாக, பெருமாளிடமிருந்து கிளம்பிய ஒரு பெண் சக்தி அசுரன் முரனைக் கொன்றது என்பார்கள். மூலவர் அரங்கநாதரின் சிலைக்கு கீழ் சமாதியாகியிருக்கும் சட்டைநாதரின் விளக்கமாக இது இருக்கலாம்.
💮 சைவத்தில் சிவபெருமானே வெளிப்படுவதாக வரும். திருக்கடவூரில் மார்க்கண்டேயருக்கு அருள, சிவபெருமானே வெளிப்பட்டு எமனை அழித்தார் (எமபயம் / உயிர்பயம் போக்கினார்) என்பார்கள். இந்த விளக்கம் மூலவர் அமிர்தகடேஸ்வரரின் கீழ் சமாதியாகியிருக்கும் மார்கண்டேய மகரிஷியின் விளக்கமாக இருக்கலாம்.
💮 கெளதம புத்தர் விளக்கும் சூன்ய / நிர்வாண நிலையும் இதுவே. 6 வருடங்கள் பல இடங்களில் சுற்றித் திரிந்து ஒன்றும் நடக்காமல், இறுதியில் கயாவில் 6 நாட்கள் தீவிரமாக ஆன்மவிசாரம் (தன்னாட்டம்) மேற்கொண்டு நிர்வாண நிலையை (ஞான நிலையை) அடைந்தார்.
💮 ஜென் பௌத்தத்தின் நிறுவனரான போதிதர்மரின் (இவர் தமிழ்நாட்டை ஆண்ட பல்லவ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்) போதனைகள் யாவும் அத்வைத ஞான நிலையைப் பற்றியே பேசுகின்றன.
💮 மேற்கில், "யேசுநாதர் இறந்து மூன்று நாட்களுக்குப் பின்னர் உயிர்த்தெழுந்தார்" என்பதும் இதுவே. அதாவது, மூன்று நாட்கள் தொடர்ந்த தீவிர சாதனையின் இறுதியில் தனித்துவம் இழந்து பரமனில் கலந்து விடுகிறார். அதாவது, ஜீவன் மரித்து சிவமாக வெளிப்படுகிறார்.

நரசிம்ம அவதாரம் ஆந்திராவில் உள்ள அகோபில மலைக்குகையில் நடந்ததாகக் கூறுவார்கள். அதாவது, அங்கே வசித்த மகான்கள் யாராவது இந்தக் கதையை புனைந்திருப்பார்கள். அல்லது, அங்கே ஞானமடைந்த மகான், தான் ஞானமடைந்த விதத்தை இப்படி விளக்கியிருப்பார். இந்த விளக்கம் / உருவகம் அந்த சுற்று வட்டாரத்தில் பிரபலமாயிருக்கும். அதனால் தான் ஆந்திராவில் நரசிம்மர் கோயில்கள் அதிகம். பின்னர், ஏனைய இடங்களுக்கு பரவியிருக்கும்.

ஒரு கோயிலுக்கு செல்கிறோம் என்றால் அங்கு சமாதியாகியிருக்கும் மகானை வணங்க அல்லது அங்கேயுள்ள இறைவனின் பெயர் / சிலை, கோயிலின் அமைப்பு வழியாக நம் முன்னோர் நமக்கு சொல்ல வந்த உண்மைகளைப் பற்றி சிந்திக்க என்பன போன்ற குறிக்கோள்களுடன் சென்றால் நமக்கு லாபம். அதை விட்டு "மடக் மடக்" சப்தம், சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது, தங்க கோயில், வைர அங்கி, மிளகாய் யாகம் போன்ற விற்பனை யுக்திகளுக்காக செல்வதால் நமக்கு எந்த புண்ணியமும் இல்லை.

கோயிலுக்குச் செல்வது என்பது நம் உடலேக் கோயில் என்று உணர. இறைவனை வணங்குவது என்பது நம்முள் உறையும் இறைவனை உணர. 👍

"கடவுளைக் காண்பது என்பது கடவுளை அறிவதே. கடவுளை அறிவது என்பது கடவுளாய் இருத்தலே. கடவுளாய் இருத்தல் என்பது கடவுளாய் ஆதலே." -- பகவான் ஸ்ரீரமணர் 🌞

🌸🌹🍀🍁🌺🌻🌼

# - இங்கே, சிவன் எப்படி வந்தார்? "நரசிம்மர் சிவாம்சம் பொருந்தியவர்", "இவரை வணங்க ஏற்ற நேரம் சிவனுக்குரிய பிரதோஷ காலம்" என்பன போன்ற செய்திகளை நினைவு கூர்ந்து பாருங்கள். இவர் யார் என்று புரியும். எப்படி மவுனராகம் கதையை சுட்டு சில மாற்றங்களை செய்து ராஜா ராணி என்று வெளியிட்டு காசு பார்த்தார்களோ, அப்படியே சைவ / அத்வைத உண்மைகளை எடுத்துக் கொண்டு சில தகிடுதத்தங்களை சேர்த்து வைணம் / விசிஷ்டத்வைதம் என்று காசு பார்த்துவிட்டார்கள். ஞாபகமிருக்கட்டும், நாமம் என்பது ஏமாற்று வேலைக்கு சமம். "பட்ட போட்டுட்டாங்களா?" என்று யாரும் கேட்பதில்லை. "நாமம் போட்டுட்டாங்களா?" அல்லது "நாமம் போட்டுட்டியா?" என்று தான் கேட்பர். 👊

🌸🌹🍀🍁🌺🌻🌼

## - நரசிம்ம அவதார நிகழ்வு - ஜீவன் சிவமாக மாறும் ஞானமடைதல் நிகழ்ச்சியாகும்.

⚡ இரண்யகசிபு - "நான் இவ்வுடல்" என்ற நுண்ணிய அகந்தை.

⚡ பிரஹலாதன் - அகந்தையிலிருந்து பிறந்த ஜீவன். இங்கே, கூர்ந்த அறிவும், தெளிந்த மனதும், பொறுமையும், நம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட ஜீவனைக் குறிக்கும். அதாவது, அறிவு முதிர்ந்த ஜீவனைக் குறிக்கும்.

⚡ நரசிம்மம் - தொடர்ந்த முயற்சியில் இருக்கும் ஜீவன், ஒரு நிலையில் தன் இயலாமையை உணர்ந்து முயலாமல் நிற்கும். இப்படி நிற்பதே சரணாகதி எனப்படும். இவ்வாறு நின்ற ஜீவனை, பரமன் - சிங்கம் போல் - பாய்ந்து வந்து, மீதமிருக்கும் அகந்தையை அழித்து ஆட்கொள்ளும். அதாவது, உள்ளிருந்து வெளிவரும் தெளிவினால், அறிவு தெளிவடையும். "நான் இவ்வுடல்" என்ற அகந்தை அழிந்து "நான் நானாக" நிற்கும். இந்நிகழ்வுக்கு ஞானமடைதல் என்று பெயர்!!

இங்கே பகவான் ஸ்ரீரமணரின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன்:

"ஞானமடையும் போது, ஞானம் சிறிது சிறிதாக கிடைக்குமா அல்லது ஒரேடியாக கிடைக்குமா?" என்று ஒர் அன்பர் கேட்க, அதற்கு பகவான் பதிலாக கேட்ட கேள்வி: "இருட்டறையில் விளக்கேற்றும் போது, இருள் மெல்ல மெல்ல விலகுமா அல்லது ஒரேடியாக விலகுமா?".

வெளிச்சம் கண்ணிமைக்கும் நேரத்தில் அறையெங்கும் பாய்ந்து இருட்டை போக்கும். அங்ஙனமே, உள்ளிருந்து சிங்கம் போல் பாய்ந்து வெளிவரும் தெளிவு, "நான் இவ்வுடல்" என்ற அகந்தையை கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்து, ஞானத்தைக் கொடுக்கும்.

இது விசிஷ்டத்வைதக் கதை என்பதால், ஞானமடைந்த பிறகும், பரமனும் (நரசிம்மம்) ஜீவனும் (பிரஹலாதன்) தனித்தனியாகவே இருக்கின்றன. இதுவே, அத்தைவதக் கதையானால் அகந்தை அழிந்து ஜீவன் சிவனாகியிருக்கும். இதை, பகவான் ஸ்ரீரமணரின் பாடல் வரிகள் விளக்கும்:

இருக்கும் இயற்கையால் ஈச சீவர்கள் ஒரு பொருளேயாவர் உந்தீபற!
உபாதி உணர்வே வேறு உந்தீபற!!

posted from Bloggeroid