Friday, April 16, 2021

அனைவருக்கும் இனிய கீழறை (பிலவ) புத்தாண்டு¹ நல்வாழ்த்துகள்!! 💐🙏🏽

"பகுத்தறிவால்" நம் தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம் பெறாமல் போன மனோன்மணியச் செய்யுள்:

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!!

"முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பிறகும், முழுமை முழுமையாகவே இருக்கிறது" என்ற திருமறைக் கருத்தை பயன்படுத்தி, தமிழிலிருந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் துளு ஆகிய மொழிகள் தோன்றிய பின்னரும், ஆரியம் போன்று வழக்கொழியாமல், தமிழன்னை சீர் கெடாமல், இளமையாகவே இருப்பதைக்கண்டு வியந்து, செயல்மறந்து (நான் என்ற தன்மையுணர்வை எக்கணமும் மறக்க முடியாதல்லவா? எனவே, "தன்னை மறந்து" என்று குறிப்பிடாமல், "செயல்மறந்து" என்கிறார் 👏🏽👏🏽👌🏽) அன்னையைப் போற்றுகிறார் சுந்தரம் பிள்ளையவர்கள்! 🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

oOOo

¹ ஆண்டு என்றாலே அது தமிழ் புத்தாண்டுத்தான்! இந்த அறிவியலை கண்டுணர்ந்து வெளிப்படுத்தியவர்கள் தமிழர்களே. இதன் பிறகே ஏனைய ஆண்டுகள் உருவாயின. எனவே, "தமிழ்" என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

(ஆப்பிள் தலையில் விழுந்ததும் புவியீர்ப்பு விசையை உணர்ந்து கொண்ட அதிமேதாவிகளான (🤭) பரங்கியர்களின் ஆண்டு ஆண்டே அல்ல! அறிவியல், வரலாறு, இயற்கை, மதம் என்று எந்த அடிப்படையும் அதற்கில்லை. "காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது" என்ற கதையாக இருந்ததை, 500 ஆண்டுகளுக்கு முன், நம்முடன் மீண்டும் ஏற்பட்ட தொடர்பால் சரி செய்து கொண்டனர். கேட்டால், "கிரிகோரி உருவாக்கினார்" என்று பீலா விடுவார்கள்! 👊🏽👊🏽👊🏽)

Friday, April 9, 2021

சோதிடம் - ஒளியைப் பற்றிய அறிவியல்!!

ஒரு வயதான சோதிடர், சோதிடத்தின் பெருமையைப் பற்றி பேசுகையில், நியூட்டன், கெப்ளர் போன்ற பரங்கியர்களும் சோதிடர்களாக இருந்தனர் என்று கூறி மகிழ்ந்தார். அதாவது, அப்பரங்கியர்களால் சோதிடம் பெருமையடைவது போல் பேசினார். அவருக்கு நான் கொடுத்த பதிலை சற்று மாற்றி இங்கு பதிவிட்டுள்ளேன். நன்றி.

oOOo

🔸சோதிடம் என்பது திருமறைகளின் ஒரு பகுதி. அதன் மதிப்பை, புராதனத்தை உணர இந்த ஒரு தகவல் போதும். நியூட்டன், கெப்ளர், ஆர்க்கிமிடிஸ் போன்ற திருட்டுப்பயல்களின் வரலாறு தேவையில்லை. பராசரர், வராகமிகிரர், ஸ்ரீபதி, பரமேஸ்வரா போன்ற மேதைகள் நம்மிடமிருக்க, எடுத்துக்காட்டிற்குக்கூட நம்மை சீரழித்த பரங்கியர்களைப் பயன்படுத்தக்கூடாது.

🔸அக்காலத்தில் மருத்துவர்களே சோதிடர்களாகவும் இருந்தனர் என்று கேள்விப்பட்டதுண்டு. அதாவது, மக்களின் துயர் துடைக்க உருவாக்கப்பட்ட ஓர் அறிவியலே சோதிடம்!

🔸தாங்கள் சொல்வது போல் நமது முன்னோர்களின் அண்ட-பிண்ட ஆரய்ச்சியின் விளைவாக தோன்றியவற்றில் ஒன்றாக சோதிடமும் இருக்கும்.

🔸திருமறைகளின் இறுதி நோக்கம் மனிதன் மெய்யறிவு (ஞானம்) பெற்று நிலைபேறு (சமாதி - மரணமில்லாப் பெருவாழ்வு) பெறுவதே. எனில், அவற்றின் ஒரு பகுதியான சோதிடமும், அந்நோக்கத்தை அடைவதற்கு உதவி புரிவதற்காகத்தான் உருவாக்கப்பட்டிருக்கும் என்பது எனது கருத்து.

🔸சோதிடம் - ஜோதிடம் - ஜோதிஷா - ஜோதி = ஒளி. ஒளியைப் பற்றிய அறிவியல்.

🔸ஜோதிஸ - ஜோதிஸ் + அ = சாபம் அல்லது மதி மயக்குவது. உடலல்லாத நம்மை உடலாக நாம் காணுவதற்கு முக்கிய காரணமான ஒளியை "மதி மயக்குவது" என்றும், இப்படி மதி மயங்கி கிடப்பதை சாபம் என்றும் கொள்ளலாம்.

oOOo

எனது சோதிட ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!! 🙏🏽

Monday, April 5, 2021

திரு மாணிக்கவாசகர் சுமந்த திரு வேதகிரீசுவரர் திருப்பாதம்!!

"... சுமந்த ... திருப்பாதம்" - இப்படி எதுகை மோனையுடன், பக்தி ரசம்/சாம்பார்/மோர்குழம்பு சொட்ட சொட்ட பரிமாறிவிடுகிறார்கள். நாமும் மூக்கைப்பிடிக்க உண்டு விட்டு, உள்ளூர், வடநாடு & வெளிநாட்டுக் கொள்ளையர்கள் பல தலைமுறைகள் சொத்து சேர்க்க உதவி விட்டு (அதாவது, வாழ்ந்துவிட்டு), அடுத்த உடலுக்கு தயாராகி விடுகிறோம்!!

இது போன்ற சொற்றொடர்கள் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தவறான பாதிப்புகள் தான் எவ்வளவு! 😔

மணிவாசகப் பெருமானின் 🌺🙏🏽 காலம் சுமார் 9ம் நூற்றாண்டு. வேதகிரீசுவரர் என்னும் மூலவரின் கீழ் சமாதியாகியிருக்கும் பெருமானின் 🌺🙏🏽 காலம் அதற்கும் வெகுகாலத்திற்கு முன்னராகும். சிவமாய் சமைந்த ஒரு பெருமான் எவ்வாறு வெளிவந்து, ஒரு அன்பரின் சிரசில் கால் வைத்து ஆட்கொள்ள முடியும்? அப்படியே பாதம் வைத்தால் மணிவாசகரின் மனமழிந்துவிடுமா? சிவதத்துவம் என்பது உடலுடன் கூடியதா? (அனைத்தும் அதுவே - ஏகன் அநேகன் - என்பது வேறு)

திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்) குருந்த மரத்தினடியில் அமர்ந்திருந்த தனது மெய்யாசிரியரின் பார்வை பட்டதும், முதன்முதலாக "தான்" யாரென்று மணிவாசகர் உணர்கிறார். உடல், உலகம் முதலிய காட்சிகள் நீங்கப்பெற்று, தானே உள்ளபொருள் (சிவம்) என்ற துய்ப்பைப் பெறுகிறார். பின்னர், மீண்டும், உடல்-உலகு தோற்றத்திற்குள் சிக்கிக் கொள்கிறார். "நரி-பரி", "வந்திக் கிழவி" திருவிளையாடல்களுக்கு பின்னர், தனது முதலமைச்சர் பதவியைத் துறந்துவிட்டு, பல திருத்தலங்களுக்கு செல்கிறார். தான் துய்த்த திருநீற்று நிலையை மீண்டும் பெற போராடுகிறார். சில திருத்தலங்களில் துய்க்கவும் செய்கிறார். அப்படிப்பட்ட திருத்தலங்களில் ஒன்று தான் திருக்கழுக்குன்றம்.

இணைக்கப்பட்டிருக்கும் படத்திலுள்ள இடம், திருக்கழுகுன்றத்தின் அடிவாரத்தில், மலையேற்றப் படிகளுக்கு முன்னர் உள்ளது. இவ்விடத்தில் அவர் வடக்கிருந்திருக்கிறார். தானேத்தானாக - சிவமாக - மிளிர்ந்திருக்கிறார்!!

எனவே, இவ்விடத்தை "திரு மாணிக்கவாசகர் வடக்கிருந்து ...

🔹 திருநீற்று நிலை எய்திய இடம்
🔹 சிவநிலையை துய்த்த இடம்
🔹 தானேத்தானாய் மிளிர்ந்த இடம்
🔹 சிவமாய் இருந்த இடம்

போன்ற பெயர்களால் அழைக்கவேண்டும்.

இப்படி அழைப்பதால் என்ன பயன்?

"உண்மைகள் திரியாமலிருக்கும்", "முட்டாள்தனம் குறையும்", "சிந்தனை வளரும்" என எத்தனையோ பயன்கள் இருந்தாலும், திருத்தலத்திற்கு வருகை தரும் அன்பர்கள், திருத்தலத்தில் செய்யவேண்டியதை (வடக்கிருத்தலை) உணர்த்தும். இது ஒன்று சரியாக நடந்தால் அனைத்தும் சீராக வாய்ப்புள்ளதே! 😍

oOOo

ஒரு திருத்தலத்திற்கு சென்றுதிரும்பும் போது, நம்மைத் தெரிந்தவர்களை சந்திக்க நேர்ந்தால், அவர்கள் கேட்கும் கேள்வி:

🔹 சாமி கும்பிட்டீங்களா?
🔹 சாமிய நல்லா பாத்தீங்களா?
🔹 தரிசனம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?

பகுத்தறிவு தோன்றி, வளர்ந்து, உச்சத் தொட்டுள்ள இக்காலத்தில், இக்கேள்விகளின் பொருள்: கருவறையில் உள்ள மூலவரை நன்கு பார்த்தீர்களா?

பகுத்தறிவு தோன்றுவதற்கு முன்னர் இக்கேள்விகளின் பொருள்:

🔹 கும்பகமிட்டீரா? - மூச்சை உள்நிறுத்தும் போது மனம் செயலிழக்கும். மனமடங்கினால் மீதமிருப்பது... பரம்பொருள்!
🔹 பார்ப்பது / தரிசிப்பது - அனைத்தையும் பார்ப்பவனை பார்ப்பது!

அதெப்படி பார்ப்பவனை பார்ப்பது? இதற்கு பகவானின் 🌺🙏🏽 பதில் கேள்வி: இராமன் என்பவன் தன்னை இராமன் என்றுணர கண்ணாடி தேவையோ? 👌🏽👏🏽😍

குறைந்தது, திருத்தல வளாகத்தினுள் நுழைந்தது முதல் வெளிவரும் வரை, "நான் இன்னார்" என்ற உணர்விலுள்ள "இன்னாரைக்" கழட்டிவிட்டு நாம் நாமாக இருந்தால் போதும்.

oOOo

ஆளுடைய பிள்ளையார் 🌺🙏🏽, திருநீற்றுப் பதிகத்தில், திருநீறு என்ற சொல்லை சிவம் என்ற சொல்லிற்கு சமமாக பயன்படுத்துகிறார்:

🌷 செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே

🌷 மாலொடு அயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு

அப்பெருமானின் வழி பற்றி, உடல்-உலகு காட்சிகள் நீங்கி, தான் மட்டும் "இருந்து விளங்கும்" நிலையை நிர்விகற்ப சமாதி என்று குறிப்பிடாமல், திருநீற்று நிலையென்று குறிப்பிட்டுள்ளேன். 🙏🏽

oOOo

ஊலிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, March 29, 2021

பிறப்பறுக்க தமிழ் பிள்ளையார் கூறும் அறிவுரை!!

பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
மறவா தேத்துமின், துறவி யாகுமே!!
🌺🙏🏽🙇🏽‍♂️

-- சம்பந்தர் தேவாரம் - 1.91.2

இச்செய்யுள், ஆளுடையபிள்ளையார் 🌺🙏🏽 திருவாரூர் திருத்தலத்தில் பாடிய முதல் பதிகத்தின் 2வது செய்யுளாகும்.

மேலோட்டமான பொருள்: பிறவித்தளையை அறுக்க விரும்பும் அன்பர்களே, நீதியே வடிவான ஆரூர் பெருமானை மறவாது துதித்தால் துறவு கிடைக்குமே.

🔸"பிறவித்தளையை அறுக்க" என்று தான் குறிப்பிட்டுள்ளார். "பிறவியெடுத்துள்ள" என்று குறிப்பிடவில்லை. ஏனெனில், பிறவியெடுத்துள்ளது நமதுடல் தான். நாமல்ல. நாம் நமதுடலோடு பிணைக்கப்பட்டிருக்கிறோம். இந்த பிணைப்பை - தளையை - அறுத்தெறியவேண்டும்.

🔸ஆரூர் பெருமானை இடைவிடாது (மறவாது) துதித்தால் என்னவாகும்? ஆரூர் மூலவர் போலாகிவிடுவோம்!! ☺️ எதைத் தொடர்ந்து நினைக்கின்றோமோ அதுவாகிவிடுவோம். எனில், ஆரூர் மூலவரைத் தொடர்ந்து நினைத்துக்கொண்டிருந்தால் அந்த உருவத்தைத்தான் பெறுவோம். அதற்காகவா இவ்வளவு போராட்டம்?

ஆரூர் பெருமான் என்பது கருவறையிலுள்ள மூலவரல்ல. அதன் கீழ் சமாதியாகியிருக்கும் மாமுனிவருமல்ல 🌺🙏🏽. எங்கும் எக்கணமும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவப்பரம்பொருளாகும். நாமே - நமது தன்மையுணர்வே - அப்பரம்பொருள்!! அப்பொருளை மறவாது துதித்தல் என்பது நம்மை (நமது தன்மையுணர்வை) விடாதிருத்தல்.

"தன்னை விடாதிருத்தல் ஞானம். அந்நியத்தை நாடாதிருத்தல் வைராக்கியம். உண்மையில் இரண்டும் ஒன்றே." என்பது பகவான் திரு ரமண மாமுனிவரின் 🌺🙏🏽 வாக்கு.

🔸நம்மை விடாது பற்றிக் கொண்டிருந்தால், ஒரு சமயத்தில், நாம் யாரென்ற தெளிவு பிறக்கும். "நாம் இன்னார்" என்பதிலுள்ள "இன்னாரை" (அகந்தையை) விட்டுவிடுவோம். இதுவே துறவு எனப்படும். பெயர், உடை, இடங்களை மாற்றிக்கொள்வது துறவாகாது. அகந்தையை துறத்தலே துறவாகும். (இக்கருத்தை பல முறை பகவான் வலியுறுத்தியுள்ளார்)

ஆக, தன்மையுணர்வை விடாது பற்றி, தன்னைப் பற்றிய தெளிவு பெற்று, அகந்தையை துறந்து, பிறவித்தளைகளிலிருந்து விடுபடவேண்டும் என்பதே தமிழ் காத்த திருஞானசம்பந்த பெருமானின் அறிவுரையாகும்!!

oOOo

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி 🌺🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Monday, February 22, 2021

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்!! 😛

"காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்"
என்கிறார் நாலடியார்!!

"காக்கா கறி சமைத்து,
கருவாடு உண்பவர்களா சைவர்கள்?" என்று பதற வேண்டாம்! ☺️

சைவர்களின் மேன்மையைக் கூறுவதற்காக தமிழில் விளையாடியிருக்கிறார் ஆசிரியர். தமிழும் சைவமும் தமிழரின் இரு கண்கள்.

இனி, பாடலின் உட்பொருளைப் பார்ப்போம்.

🔸 காக்கை = கால் கை. உள்ளங்கையில் கால் அளவு.

🔸 கறி சமைத்து = காய்கறி சமைத்து. உள்ளங்கையில் கால் அளவு காய்கறி சமைத்து.

🔸 கருவாடு மென்று = கரு வாடும் என்று. உடலின் கருவாகிய உயிர் வாடும் என்று.

🔸 உண்பர் சைவர் = சைவர்கள் உண்பார்கள்

பொருள்: உள்ள பொருளாகிய சிவமாய் சமையும் வாழ்நாள் நோக்கம் கொண்ட சைவர்கள், உடலில் உயிர் தங்க வேண்டுமென்பதற்காக, உள்ளங்கையில் கால் அளவு காய்கறி சமைத்து உண்பர்.

இப்படி உண்பதால், உடல் நோய்கள் பெருகாது; சுறுசுறுப்பாக இயங்க முடியும்; பற்றுகள் குறைய வாய்ப்புண்டு; எல்லாவற்றிற்கும் மேலாக, வடக்கிருத்தல் எளிதாகும்!!

வடக்கிருத்தல் = தவமியற்றுதல்.

"நான் இன்னார்" என்ற அகந்தை அற்ற பின் "இருந்து விளங்கும்" உள்ளபொருளை அறிந்து கொள்ள உதவும் வழியே / உத்தியே தவமாகும்.

-- பகவான் திரு ரமணர் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

அன்னைத்தமிழ் வாழ்க!

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்!!

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

(வாட்ஸ்அப்பில் கிடைத்த ஓர் இடுகையை சிறிது செப்பனிட்டு பதிவேற்றியிருக்கிறேன் 🙏🏽)

Wednesday, January 6, 2021

தீபாவளி - திரு கண்ணபிரான் 🌺🙏🏽 மெய்யறிவு பெற்ற நாள்!!


🪔 நம் உடலே நரகம். நாம் இவ்வுடல் என்ற தவறான எண்ணமே நரகாசுரன். இத்தவறான எண்ணத்தை விட்டொழித்தலே தீபாவளி - கொண்டாட்டம் - பெருமகிழ்ச்சி - மரணமில்லாப் பெருவாழ்வு!

🪔 நரகாசூரன் பன்றிப் பெருமாளுக்கும் நிலமகளுக்கும் பிறந்தவர் - நிலமகள் என்பது நமது உடல். பன்றிப்பெருமாள் என்பது மெய்யறிவு பெறாத நாமே.

(பன்றித்திருவிறக்க கதையில் பன்றிப்பெருமாள் கடலுக்குள் சென்று பூமாதேவியை மீட்டு வருவார். இவ்வுருவகக் கதையில் வரும் பூமாதேவி மெய்யறிவைக் குறிக்கும். பூமா எனில் முழுமை. ஆனால், பூமி என்று தவறாகப் பொருள் கொண்டுவிட்டனர். இக்கதையில் வரும் கடல் என்பது நமது உடல். கடலுக்குள் செல்லும் பெருமாள் என்பது மெய்யறிவுக்காக வடக்கிருக்கும் நாம். பூமாதேவியுடன் திரும்ப வரும் பெருமாள் என்பது மெய்யறிவு பெற்று உலக வாழ்க்கைக்கு திரும்பும் நாம். கடலுக்குள் செல்லும் போதும், பூமாதேவியுடன் வெளிப்படும் போதும் பெருமாள் பெருமாள் தான். வேறுபாடு பூமாதேவி மட்டுமே. இவ்வாறே, மெய்யறிவு பெறுவதற்கு முன்னும், பெற்ற பின்னும் நாம் நாம் தான். வேறுபாடு நம்மைப் பற்றிய மெய்யறிவு மட்டும் தான்.)

நம்மைப் பற்றிய தெளிவு இல்லாததால் அழிவற்ற நம்மை (பெருமாள்) அழியும் உடலுடன் (நிலமகள்) இணைத்துக் கொள்கிறோம். விளைவு... "நாம் இவ்வுடல்" என்ற நரகாசூரன்!!

🪔 நரகாசூரனின் இறப்பு. தனது இறப்பு தன் தாயின் மூலமாக மட்டுமே நிகழ வேண்டும் என்ற பேறுபெற்று வந்தவன் நரகாசூரன். இதன்படி, கண்ணபிரான் திருவிறக்கத்தில் கண்ணபிரான் (தந்தை) போராடி அயர்ந்த பின்னர், சத்யபாமா (தாய்) போராடி நரகாசூரனைக் கொல்லுவார்.

இக்கதையில் வரும் கண்ணபிரான் நாமே. எவ்வளவு முட்டிமோதினாலும் "நாம் இவ்வுடல்" என்ற பொய்யறிவு நம்மைவிட்டு விலகாது. இது விலக 2 வழிகள் உண்டு: 1. பல காலம் வடக்கிருந்து, மிகவும் முதிர்ந்த (பக்குவமடைந்த) பின்னர் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 போன்ற மெய்யாசிரியர்களின் அறிவுரைகளால் நமதுண்மையை உணர்தல், 2. மொத்த அண்டமும் நமக்குள் இருந்தாலும், நாம் அதற்குள் இருப்பது போல் கண்கட்டு வித்தைக் காட்டிக்கொண்டிருக்கும் அன்னை மாயை (சத்யபாமா) சில கணங்கள் காட்சிகளைத் தவிர்த்து நமதுண்மையை நாம் உணர வழிவிடுதல்.

இரண்டாவது வழியில் அன்னையால்தான் "நாம் இவ்வுடல்" என்ற எண்ணம் (நரகாசூரன்) அழிகிறது என்றால் ஏற்றுக் கொள்வோம். முதலாவது வழியிலும் அன்னை தான் கொல்கிறார். அறிவுரையை வெளிவிட்ட மெய்யாசிரியர் சிவப்பரம்பொருளில் நிலைபெற்றவராய் இருந்தாலும், அவரிடமிருந்து வெளிப்பட்ட அறிவுரை உயிரற்ற பொருளாகிறது - அன்னையின் கூறாகிவிடுகிறது (அம்சமாகிவிடுகிறது).

ஆக, இரு வழிகளிலும் அன்னை தான் "நாம் இவ்வுடல்" என்ற தவறான எண்ணத்தை அழிக்கிறார். இதையே அன்னை சத்யபாமாவால் நரகாசூரன் இறப்பதாக உருவகப்படுத்தியுள்ளனர்.

🪔 "கங்கை நீரில் குளித்தீரா?" - தீபாவளியன்று கேட்கப்படும் பாரம்பரிய கேள்வி. நலம் விசாரிப்பது போல.

மெய்யறிவில் நிலைபெறும்போது நம் உச்சந்தலையிலுள்ள பிடியுட்டரி சுரப்பி நன்கு சுரக்கும். அதன் வெள்ளை நீர் (கங்கை நீர்; கங்கை - வெள்ளை) உடலெங்கும் பரவி, மற்ற சுரப்பிகளைத் தூண்டி உடலை சீராக்கி, மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதை, சிவபெருமானின் ஓவியத்தில் அவரது தலையிலிருந்து கங்கை நீர் வெளிப்படுவது போல் வரைந்திருப்பார்கள்.

"கங்கை நீரில் குளித்தீரா?" என்ற கேள்வியின் உட்பொருள்:

- மெய்யறிவு பெற்றீரா?
- உமதுண்மையை உணர்ந்தீரா?
- சிவப்பரம்பொருளாய் சமைந்தீரா?
- தன்மையுணர்வில் நிலைபெற்றீரா?

🪔 இவ்வளவு பொருள் பொதிந்த திருவிழாவாக இருந்தாலும், வடக்கத்திய தீபாவளி நம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் திருமலை நாயக்கர் காலத்தில்தான். இந்நாளன்று வடகத்தியர் தீபங்களை ஏற்றுவதற்கு அடிப்படை நமது கார்த்திகை திருநாள்! இடைக்காட்டுச் சித்தர் உணர்ந்து உணர்த்திய "ஏகன் அநேகன்" என்ற பேருண்மையைக் கொண்டாடும் கார்த்திகை திருநாள் திருவிழா அவ்வளவு தாக்கத்தை ஆரியர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

oOOo

ஒரு தீபாவளி திருநாளுக்காக பகவான் எழுதிய பாடல்:

நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே

பொருள்: அழியும் இவ்வுடலா நான்? இவ்வுடலை ஆளும் நரகாசூரன் எங்கு உள்ளான்? என்று ஆராய்ந்து, தானே உள்ளபொருள் என்று தெளிந்து, அந்த மெய்யறிவினால் (ஞானத்திகிரி - பெருமாளின் கையிலுள்ள சக்கிராயுதம்) தான் இவ்வுடல் என்ற தவறான எண்ணத்தை (நரகாசூரனை) விட்டொழித்தவனே (கொன்றவனே) நாராயணன். அப்படி விட்டொழித்த நாளே நரகசதுர்த்தசி எனும் தீபாவளி நன்னாளாம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

பி.கு.: வைணவத்திற்கும் கண்ணபிரானுக்கும் எந்த தொடர்புமில்லை. வைணவம் தோன்றியது பொது ஆண்டு 700களில். நிலைபெற்றதோ 1500களில் (விஜயநகர & நாயக்க மன்னர்களின் காலத்தில்). ஆனால், கண்ணபிரான் வாழ்ந்ததோ சுமார் 5,100 ஆண்டுகளுக்கு முன்னர்!

Tuesday, November 3, 2020

ஐப்பசி நிறைமதி நாள் & சோறு கண்ட இடம் சொர்க்கம்

(தஞ்சை பெருவுடையார் 🌺🙏🏽)

ஐப்பசி நிறைமதி நாள் - சிவத்திருத்தலங்கள் அன்னாபிஷேகம் காணும் நாள்! "நாம் காணும் இவ்வுலகம் உணவுமயம்" என்ற பேருண்மையை நமது முன்னோர்கள் உணர்ந்த நாள்!!

சிவ அடையாளத்தின் மீது கொட்டப்படும் (*) சோற்றிலிருக்கும் ஒவ்வொரு பருக்கையும் ஒர் உயிரை/உயிரினத்தைக் குறிக்கும். நுண்ணோக்கி வழியாக காண்பது போன்ற திறனைப் பெற்றிருந்தோமானால் நம் முன்னே கோடான கோடி உயிரிகள் ஒன்றையொன்று அண்டியும், சார்ந்தும், கொன்றும், தின்றும் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காணலாம். ஒர் உயிரியின் உடலோ கழிவோ இன்னோர் உயிரியின் உணவாக மாறுவதைக் காணலாம். நம் உடலுக்குள்ளும் இதே நிகழ்வு தான். மொத்தத்தில் எங்கும் உணவுமயம் தான்!

இந்த உண்மையை நமது முன்னோர்கள் ஒர் ஐப்பசி நிறைமதி நாளன்று உணர்ந்திருக்கிறார்கள். இவ்வுண்மையை உணர்வதால் அகந்தை அடங்குவதையும் / அழிவதையும் கண்டிருக்கிறார்கள். எனவே, அவர்கள் உணர்ந்ததை அன்னாபிஷேகம் என்ற திருவிழாவின் மூலம் பதிவு செய்து, வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். இத்திருவிழா தமிழகத்திற்கே உரியதாவதால், ஒரு தமிழ் பெரியோனே மேற்கண்ட உண்மையை முதன்முதலில் உணர்ந்திருக்கிறார் என்று உறுதியாக கருதலாம்.

(* - ஒரு 25+ ஆண்டுகளாகத்தான் உணவுப்பண்டங்களைக் கொண்டு உடையவருக்கு ஒப்பனை செய்கிறார்கள். அதற்கு முன்னர், உடையவர் மேல் சோற்றைக் கொட்டிவிட்டு வெளியே வந்துவிடுவார்கள். திருவிழாவின் பெயர் அன்னாபிஷேகம். அன்ன அலங்காரமன்று.)

oOOo

எல்லாம் சரி. 1600களில் தான் உலகக் கொல்லிகளான பரங்கியர்களால் நுண்ணோக்கி "கண்டுபிடிக்கப்பட்டது". எனில், எவ்வாறு "உலகம் உணவுமயம்" என்ற உண்மையை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்களால் உணரமுடிந்தது? ஹாலிவுட் திரைப்படங்களில் வருவது போன்று, 1600களில் வாழ்ந்த பரங்கியர்கள் நேரப்பயணத்தின் மூலம் முற்காலத்திற்கு சென்று காட்டுமிராண்டிகளாக இருந்த நமது முன்னோர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கவேண்டும். வேறு வழியே இல்லையல்லவா? 😁

oOOo

(கங்கை கொண்ட சோழபுர பெருவுடையார் 🌺🙏🏽)

சோறு எனில் வெந்த அரிசி என்பது இன்றைய பொதுவான பொருள். ஆனால், கம்பஞ்சோறு, பனஞ்சோறு (நுங்கு), கற்றாழைச் சோறு போன்ற பயன்பாடுகளும் உண்டு. இவற்றிலிருந்து சோறு எனில் "உள்ளிருப்பது. பக்குவமடைந்தது. நன்மை தரக்கூடியது." என்று பொருள் கொள்ளலாம்.

இந்த கணக்கில், மேற்கண்ட நெல்லின் உமி, பனங்காயின் ஓடு, கற்றாழையின் தோலுக்கு நம் உடல் சமமானால், உடலின் உள்ளிருக்கும் ஆன்மா (தன்மையுணர்வு) சோறுக்கு சமமாகிறது. எப்போது? பக்குவமடைந்த பிறகு!

பக்குவமடைதல் என்றால் என்ன? நாம் இவ்வுடலல்ல என்பதை உணர்ந்து, நாம் யாரென்று தெளிந்து, நாம் நாமாக நிலை பெறுவதே பக்குவமடைதல். இவ்வாறு பக்குவமடைந்த பிறகு கவலை, துன்பம், தொல்லை என எதுவும் நம்மை அண்டாது. எப்போதும் பேரமைதியில் திளைப்போம். இந்நிலையை சொர்க்கம் என்று வைத்துக்கொண்டால், பக்குவமடைந்த நம்மை சோறு என்று வைத்துக்கொண்டால், நம்மை நாம் உணர்ந்த இடம் - நம்மை நாம் கண்ட இடம் - சோறு கண்ட இடம் சொர்க்கமாகிவிடுகிறது!! ☺️

தீதீல்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்

-- திருத்தோணோக்கம், திருவாசகம்

மேலுள்ள பாடலில் வரும் "சோறு பற்றினவா" என்ற சொற்களை மணிவாசகப் பெருமான் 🌺🙏🏽 பயன்படுத்திய விதத்தை வைத்து, இவ்விடுகையின் "சோறு" பகுதியை எழுதியுள்ளேன்.

(சோறு என்ற சொல்லுக்கு வீடு பேறு, நிலைபேறு, விடுதலை (ஆரியத்தில், முக்தி/மோட்சம்) என்ற பொருள்களும் உண்டு)

oOOo

ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி 🌺🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮