உணக்கிலாததோர் வித்துமேல்விளை யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
-- திருவாசகம் - திருக்கழுக்குன்றப் பதிகம் #1
🌷 உணக்கிலாததோர் வித்து
உணக்கம் - வாட்டம்.
உணக்கம் + இல்லாத + ஓர் வித்து - வாட்டமில்லாதவன்.
அதாவது, சோர்வறியாமல், வாடாமல் கடகடவென செயல்களை செய்து வினைப்பயன்களை சேர்த்துக் கொள்பவன் என்று தன்னைப் பற்றி கூறிக்கொள்கிறார்.
🌷 மேல் விளையாமல் என் வினை ஒத்தபின்
ஆனால், அப்படி வினைப்பயன்களை தான் சேர்த்துக் கொள்ளாதபடி இறைவன் தன்னை ஆக்கிவிட்டதாகக் கூறுகிறார்.
ஒரு செயலை, நாம் செய்கிறோம் என்ற கண்ணோட்டத்துடன் செய்தால், அதன் விளைவுகளையும் நாம் துய்க்கவேண்டியிருக்கும். அப்படியில்லாமல், செயல் எவ்வாறு நடைபெறுகிறது என்ற உண்மையை புரிந்துகொண்டுவிட்டால், நாம் யாரென்ற நமதுண்மையை புரிந்துகொண்டு, அதில் நிலைபெற்றுவிட்டால், அதாவது, மெய்யறிவு பெற்று அதில் நிலைபெற்றுவிட்டால், செயலும் நடைபெறும்; விளைவுகளும் நம்மை பாதிக்காது. இந்நிலைக்கு தன்னை இறைவன் கொண்டு சென்றதாக பாடுகிறார் மணிவாசகர்.
🌷 கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே
கணக்கிலா - சூழ்ச்சியில்லா.
அதென்ன சூழ்ச்சியில்லாத் திருக்கோலம்?
தற்போது, உடலல்லாத நம்மை ஓர் உடலாக காண்கிறோம். பார்வையாளனான நம்மை செயல்படுபவனாக காண்கிறோம். வையகம் உண்மையில் நம்முள் இயங்கிக் கொண்டிருக்க, நாம் அதனுள் இயங்குவதாக காண்கிறோம். இதுதான் சூழ்ச்சி நிறைந்த திருக்கோலம்!
சூழ்ச்சியில்லாத் திருக்கோலமெனில் நமதுண்மையும், வையகத்தின் உண்மையும் தெளிவாக தெரியவேண்டும். அப்படி தெளிவாக தெரியும் காட்சிக்கு புகழ்பெற்ற இன்னொரு பெயருண்டு... திருக்கயிலாயக் காட்சி!!
ஆம்! மணிவாசகப் பெருமான் திருக்கழுக்குன்றத்தில் கண்டது திருக்கயிலாயக் காட்சியாகும். அக்காட்சியில் காண்பானாகிய நாமும் உண்டு; காட்சியாகிய வையகமும் உண்டு. ஆனால், தவறாகக் காணும் சூழ்ச்சி (மாயை / மாயோன்) மட்டுமிருக்காது.
oOo
இணைப்புப் படத்திலுள்ள திருவிடம் திருக்கழுக்குன்ற மலையின் அடிவாரத்திலுள்ளது. "கணக்கிலாத் திருக்கோலம்" என்று பெருமான் குறிப்பிட்ட திருக்கயிலாயக் காட்சியை, "திரு வேதகிரீசுவரரின் திருப்பாதம்" என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவ்விடத்தில் அப்பர் பெருமானின் வாழ்வில் நடந்த ஒரு புகழ்பெற்ற நிகழ்வை நினைத்துப் பார்ப்பது பொருத்தமாகவிருக்கும்.
திருக்கயிலாயம் செல்லும் வழியிலுள்ள ஒரு நீர் நிலையில் மூழ்கி, திருவையாற்றிலுள்ள ஒரு குளத்திலிருந்து வெளிப்பட்டவுடன், அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி கிட்டியது. அப்போது அவர் பாடிய பதிகத்தில், "... கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் ..." என்று பாடினார். "அவர் திருப்பாதம்" என்று அப்பர் பெருமான் குறிப்பிட்டதை, "வேதகிரீசுவரரின் திருப்பாதம்" என்று இப்பகுதி பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்று எடுத்துக்கொள்ளலாம். மற்றபடி, இரு அருளாளர்களும் கண்டது ஒரே காட்சியாகும்.
oOOo
கணக்கிலாத் திருக்கோலம் கண்ட பிரான் கழல் போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻
No comments:
Post a Comment