"பாவநாசம் சிவன் கோயில்" என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படும் திருக்கோயில், ஒரு புகழ்பெற்ற தேவார & திருவாசக வைப்புக்கோயிலாகும். இங்குள்ள கருவறை உடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமானை, "பொதியிலான்" என்றழைத்துள்ளார் காழியூர் பிள்ளையார். இத்திருவிடத்தினை "பொதியின் மலை" என்றழைத்துள்ளார் அப்பர் பெருமான்.
இப்பெயர்களின் உட்பொருளை சற்று பார்ப்போம்.
🌷 பொதியிலான்
> பொதி + இலான் -> சுமை + இல்லாதவன்
"நான் இன்னார்" என்ற எண்ணம் முதற்கொண்டு நாம் சேர்த்து வைத்திருக்கும் தளைகள் யாவும் சுமைதான். இவ்வுடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான், எந்த சுமைகளும் (தளைகளும்) இல்லாதவர் என்பதால் பொதியிலான் என்றழைத்துள்ளார் பிள்ளையார்.
🌷 பொதியின் மலை
பொதி என்ற சொல்லுக்கு பல பொருட்களுண்டு. அவற்றில் நிறைவு (முழுமை) & சுமை ஆகியவற்றை பொருத்திப் பார்ப்போம்.
அ. நிறைவு (முழுமை)
> பொதியின் மலை - நிறைவின் / முழுமையின் மலை.
நிறைவானது / முழுமையானது எது? உள்ளபொருள்!
உள்ளபொருளின் மலை / உள்ளபொருள் இருக்கும் மலை.
ஆ. சுமை
> பொதி - சுமை - தளை - எண்ணங்கள்.
எண்ணம் என்பது அன்னை மாயையின் கூறாகும். எனில், பொதி என்ற சொல் அன்னையை குறிக்கும்.
> மலை என்ற சொல்லுக்கு ஆண் என்றொரு பொருளுண்டு.
>> பொதியின் மலை - அன்னையின் மணாளன் - சிவ பெருமான்!
பொதி என்ற சொல்லுக்கு நிறைவு என்று பொருள் கொள்ளும்போது பொதியின் மலை என்ற பெயர் இடத்தை குறிக்கிறது!சுமை என்று பொருள் கொள்ளும்போது இறைவனை குறிக்கிறது!!
oOo
எவ்வாறு அண்ணாமலை என்ற பெயர் அங்கு குடிகொண்டிருக்கும் பெருமான், மலை மற்றும் ஊரை குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறதோ, அவ்வாறு பொதியின் மலை என்ற பெயரை பயன்படுத்தினால் பொருத்தமாகவிருக்கும்.
oOOo
பொதியின் மலையை வணங்குவோம்.
பொதியிலா நிலையை எய்துவோம். 🌺🙏🏽🙇🏽♂️
கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻
No comments:
Post a Comment