Saturday, August 12, 2023

பாபத்த அக்னிலேயோ / ஜலத்துலேயோ போக்குவது & பிறந்த ஊரில் / காசியில் மடிவது


அண்மையில், ஒரு தொடரி பயணத்தின்போது, இரு வயதான ஆரியப் பூசாரிகள் பேசுவதை கேட்க நேர்ந்தது. அவர்களது பேச்சிலிருந்து சில பகுதிகள்:

> பாபத்த அக்னிலேயோ, இல்ல ஜலத்துலேயோதான் போக்கமுடியும். அதனாலதான் நம்ம பெரியவா யாகம் பண்ணிண்டிருந்தா. சமுத்துரத்துல ஸ்நானம் பண்ணச் சொன்னா.

> கடைசி காலத்த காசியில கழிக்கலாம்னு இருக்கேன்.

சொந்த ஊர்ல இல்லயா பிராணன் போவணும்னு சொல்லுவா?

அப்படியும் சொல்லுவா. காசிலேயும் போகலாம்னு சொல்லுவா. என்னோட பெரியவாவும் அங்க போயிதான் முடிச்சிண்டா.

oOo

இனி அவர்களது நம்பிக்கைகளின் உட்பொருளை பார்ப்போம்.

🌷 வினைப்பயன்

ஆரியத்தில் பாவமென்பது பாவம், புண்ணியம் என இரண்டையும் குறிக்கும். நம் தமிழில் வினைப்பயன் என்றழைக்கலாம். நல்வினை & தீவினை என இரண்டு பயன்களையும் குறிக்கும்.

வினைப்பயன்கள் எண்ணங்களை தோற்றுவிக்கும். எண்ணங்களை நாம் அனுமதித்தால் செயல்களாக மாறும். செயல்கள் விளைவுகளை ஏற்படுத்தும். விளைவுகள் மீண்டும் எண்ணங்களுக்கு வித்திடும் ...

🌷 வேள்வி செய்தல்


> வேள்விக்குழி (யாகக்குண்டம்) - நமதுடல்
> அதில் எரியும் நெருப்பு - நாம் (நமது தன்மையுணர்வு)
> நெருப்பிலிடப்படும் பொருட்கள் - நமக்கு தோன்றும் எண்ணங்கள்

ஒரு எண்ணம் தோன்றியவுடன் அதன் பின்னே செல்லாமல், அது யாருக்கு தோன்றியது என்று பார்த்தால், எழுந்த எண்ணம் அடங்கிவிடும். இதுவே "பாபத்த (எண்ணத்தை) அக்னில (நமது தன்மையுணர்வில்) போக்குவது" என்பதின் பொருளாகும்.

🌷 கடலில் குளித்தல் (சமுத்திர ஸ்நானம்)


கடல் என்பது ஒரு வகையில் நமதுடலை குறிக்கும்; இன்னொரு வகையில் வையகத்தை குறிக்கும். கடலில் குளித்து "பாபத்தை" போக்குவதென்பது இவ்வையகத்தில் நாம் வாழும் வாழ்க்கையை குறிக்கும்.

எதையும் "நான் செய்கிறேன்" என்ற எண்ணத்துடன் செய்யும்போது, விளைவுகளும் நம்மையே சாரும். இல்லையெனில், சாராது. இக்கண்ணோட்டத்துடன் வாழ்தலே "பாபத்த (எண்ணத்தை) ஜலத்துல (வாழ்க்கையை வாழ்ந்து) போக்குவது" என்பதின் பொருளாகும்.

🌷 காசி

> காசி - ஒளிபொருந்திய / இருளற்ற இடம்.
> இருள் - உடல், வையம் ஆகியவற்றை உண்மையென்று நம்பும் அறியாமை.
> ஒளி - நமது தன்மையுணர்வு. நாமே உள்ளபொருளென்ற மெய்யறிவு.
> காசியில் இறப்பது - உடல் இறக்கும்போது, நாம் நாமாக - நமது தன்மையுணர்வாக (சிவமாக) - இருப்பது.

உடலிறக்கும் போது, நாம் நாமாக இருக்கவேண்டுமெனில், அதற்கு முன்னரே நாம் யாரென்று அறிந்திருக்கவேண்டும். இதற்கு பயிற்சிவேண்டும். இப்பயிற்சியே "கடைசி காலத்த காசியில கழித்தல்" ஆகும்!!

🌷 பிறந்த ஊர்

நமதுடல்தான் பிறந்திருக்கிறது. அதற்குதான் பிறந்த நாளும் பிறந்த ஊரும். நமக்கில்லை. உடல் விலகியபின், நாம் நாமாகிவிடுவோம். உண்மையில் எப்போதுமே நாம் நாமாகத்தான் இருக்கிறோம். ஆனால், இவ்வுண்மையை நாம் உணருவதில்லை. உணராததால், அன்னை மாயை / மாயோனின் தில்லுமுல்லுக்கு (உடல்-வையகக் காட்சிக்கு) இடங்கொடுத்துவிடுகிறோம். இதிலிருந்து தப்பவேண்டுமெனில், நம்மை பற்றி நாம் அறிந்திருக்கவேண்டும். இதற்கு பயிற்சிவேண்டும். இப்பயிற்சியே "கடைசி காலத்த சொந்த ஊரில் (நமது தன்மையுணர்வில்) கழித்தல்" ஆகும்!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment