Showing posts with label திருமணக்காட்சி. Show all posts
Showing posts with label திருமணக்காட்சி. Show all posts

Sunday, February 11, 2024

திருவீழிமிழலைப் பெருமானின் 🌺🙏🏽🙇🏽‍♂️ பெயர் விளக்கம் & அத்திருக்கோயில் புனைவு கதைகளின் உட்பொருள்


🌷 தொன்மையான நிலப்பகுதியிலுள்ள பழமையான திருக்கோயில்
🌷 மூவர் பெருமக்களாலும் பாடல் பெற்ற திருக்கோயில் (23 பதிகங்கள்!!)
🌷 அப்பர் பெருமானும், காழியூர் பிள்ளையாரும் பெருமானிடமிருந்து படிக்காசு பெற்று, பஞ்சம் போக்கிய திருக்கோயில்
🌷 சுந்தரமூர்த்தி நாயனார் பொன் அணிகலன் பெற்ற திருக்கோயில்
🌷 பெருமிழலைக் குறும்ப நாயனார் பிறந்து, இறைத்தொண்டு புரிந்த ஊர்

oOo

புனைவு #1: கருவறையிலுள்ள இறைச்சின்னத்திற்கு பின்னால் அம்மையப்பர் சிலைகள் உள்ளன. இதற்கு, "அகத்தியப் பெருமானுக்கு இறைவன் திருமணக்காட்சியை காட்டியருளிய இடம்" என்று புனைந்திருப்பார்கள்.


புனைவு #2: திருமால் தனது கண்ணை பறித்து, மலராக கருதி, இறைவனை வழிபட்டு, திகிரியை (அசுரத்தில், சக்கிரம்) பெற்ற இடம்.

oOo

🌷 பெருமானின் திருநெறியத்தமிழ் பெயர்: வீழிமிழலைப் பெருமான்.

> வீழி + மிழலை + பெருமான் = வீழிச்செடிகள் + மழலைச்சொல் + மெய்யறிவாளர்.

அதாவது, இறைச்சின்னத்தின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான், வீழிச்செடிகள் நிறைந்த பகுதியிலிருப்பவர்; ஒரு குழந்தை பேசுவதைப்போன்று பேசுபவர். அல்லது, குழந்தைத்தனமாக நடந்துகொள்பவர்.

🌷 பெருமானின் அசுரப்பெயர்: நேத்திரார்ப்பணேசுவரர்.

> நேத்திரம் + அர்ப்பணம் + ஈசுவரர் = கண் + [பிறிதொருவருக்கு] உரியதாகக் கொடுத்தல் + மெய்யறிவாளர்.

புனைவுக்கதை #2-ன் படி, இங்கு, பெருமாள் தனது கண்ணை பறித்து இறைவனுக்கு கொடுத்திருக்கிறார். எனில், "இறைசின்னத்தின் கீழிருப்பது பெருமாளா?" என்ற கேள்வியெழும்!

உண்மை என்னவெனில், மனம் இயங்கும் வரை நாமனைவரும் பெருமாள்களே! மனமழிந்தால் சிவமாவோம். இவ்விதிக்கு ஒருவரும் விலக்கல்ல. கருவறையின் கீழேயிருக்கும் பெருமானும் இதற்கு விலக்கல்ல.

அவர் உடல் தாங்கியிருந்த காலத்தில், மனமும் இயங்கிக் கொண்டிருந்த வேளையில், அவரும் பெருமாளாகிறார். மெய்யறிவில் நிலைபெறுவதற்காக வெகுவாக போராடியிருக்கிறார். எல்லா பற்றுகளையும் விட்டுள்ளார். இதை, "999 மலர்கள் (பற்றுகள்) கொண்டு வழிபாடு நடத்தினார்" என்று பதிவு செய்துள்ளனர்! இறுதியாக, புறமுகப் பார்வையை விட்டுள்ளார். இதை, "கண்ணை பறித்து இறைவனுக்கு படைத்தார்" என்று பதிவு செய்துள்ளனர்!

புறமுகப் பார்வையை விடுதலென்பது அகமுகப் பார்வையை இறுகப் பற்றுதலுக்கு சமம். அகமுகப் பார்வையென்பது தான் எனும் தன்மையுணர்வாய் நிற்றலாகும்.

இங்கு, பகவான் திரு இரமண மாமுனிவரின் 2 பொன்மொழிகளை நினைவு கூர்வது பொருத்தமாகவிருக்கும்:

🌷 தானாயிருத்தலே தன்னையறிதலாம்
🌷 தன்னை விடாதிருத்தல் மெய்யறிவு. அந்நியத்தை நாடாதிருத்தல் பற்றின்மை. இரண்டும் ஒன்றே.

> அந்நியத்தை நாடாதிருத்தல் = புறமுகப் பார்வையை விட்டுவிடுதல் = கண்ணை பறித்துக் கொடுத்தல்!

புறமுகப் பார்வை இருந்தவரை அவர் பெருமாளாகிறார். அகமுகமாய் நிலைபெற்றவுடன் அவர் அகத்தியாராகிறார். (எல்லா மெய்யறிவாளர்களும் அகத்தியர்களே!)

தற்போது, வையகத்தினுள் நாமிருப்பதாக உணர்கிறோம். நிலைபேறு அடைந்த பின், எதுவும் தோன்றாமலிருக்கலாம். அல்லது, ஒரு திரையரங்கிலிருப்பது போன்று, நாம் ஒரு புறமும், வையகக்காட்சி இன்னொரு புறமும் தோன்றிக் கொண்டிருக்கலாம். இத்தகைய காட்சியே மிழலைப் பெருமானுக்கு கிட்டியுள்ளது.

> காண்பான் ஒரு புறம் & காட்சி ஒரு புறம்
> காண்பான் & காட்சி = அப்பன் & அம்மை
> அம்மையப்பர் = திருமணக்காட்சி

மேற்கண்ட நிலையில் மிழலைப் பெருமான் இருக்கிறார் என்பதை நமக்குணர்த்தவே அம்மையப்பர் சிலையை இறைசின்னத்தின் பின்னே வைத்துள்ளனர். மேலும், "அகத்தியருக்கு திருமணக்காட்சி கிட்டிய திருவிடம்" என்றும் பதிவுசெய்து வைத்துள்ளனர்.

இப்போது நாம் காணும் காட்சியில் சூழ்ச்சி நிறைந்துள்ளது. நமதுண்மையை நாம் உணர வெகுவாக போராடவேண்டியுள்ளது. ஆனால், திருமணக்காட்சியில் சூழ்ச்சியே இருக்காது. எனவே, அதை நல்ல காட்சியென்று அழைத்துள்ளனர்.

> திருமணக்காட்சி = நல்ல காட்சி
> நல்ல + காட்சி = அசுரத்தில், சு + தரிசனம் = சுதர்சனம்!

காட்சி என்பது இடைவிடாது மாறிக்கொண்டேயிருக்கும். இதையுணர்த்துவதற்காக, திகிரி (அசுரத்தில், சக்கிரம்) என்று பதிவு செய்துள்ளனர். திகிரி சுழன்று கொண்டேயிருக்கும்.

🌷 சுதர்சன சக்கிரம் = நல்ல காட்சி = திருமணக்காட்சி!!

🌷 அகத்தியர் திருமணக்காட்சியை காணுதல் = பெருமாள் சுதர்சன சக்கிரத்தை பெறுதல்!!!

(எதற்காக ஒரே செய்தியை சொல்லும் இரண்டு புனைவுக் கதைகளை, ஒரு திருக்கோயிலில் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள்?... விடையை உங்களது சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.)

oOo

திருமணக்காட்சியின் வேறு பெயர்கள்:

🌷 திருக்கயிலாயக் காட்சி
🌷 சூழ்ச்சியில்லாக் காட்சி (இது திரு மணிவாசகப் பெருமானின் படைப்பு)
🌷 கூடம் (அசுரத்தில், சபை - இரத்தின சபை, பொற்சபை...)
🌷 கண்கூடாகக் காணுதல்

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, December 1, 2023

கூடம், திருமணக்காட்சி, திருக்கயிலாயக் காட்சி, சூழ்ச்சியில்லாக் காட்சி - சிறு விளக்கம்


🌺🙏🏽🙇🏽‍♂️
திரு இரத்தினக்கூடம் (ஆரியத்தில், சபை), திருவாலங்காடு

🌷 இம்மதில் சுவருக்குப் பின்னால், திரு காரைக்கால் அம்மையாரும், மற்றுமொரு பெருமானும் திருநீற்று நிலையிலுள்ளனர்.

🌷 அவர்களது நிலையை குறிக்கும் இறையுருவம்தான் படத்தில் காணப்படும் திரு ஆடலரசன் ஆவார்.

🌷 அவர்களது நிலையென்ன? 

இதற்கு பதில்: அவ்விடத்தின் பெயரன்ன?

கூடம் (சபை)!!

கூடம் எப்படியிருக்கும்? பார்வையாளர்கள் ஒரு புறம் அமர்ந்திருக்க, காட்சிகள் ஒரு புறம் அரங்கேறிக் கொண்டிருக்கும். இதையொத்த நிலையில் அப்பெருமான்கள் இருக்கிறார்கள் என்பது பொருளாகும். அதாவது, அவர்களுக்கு இன்னமும் காட்சிகள் தோன்றிக்கொண்டிருக்கின்றன.

🌷 இதனால் அவர்களுக்கென்ன பயன்?

அவர்களுக்கு ஒரு பயனுமில்லை. நமக்குத்தான் கொள்ளைப் பயன்கள்!

கருவறை அமைப்பிலிருக்கும் திரு ஆலங்காட்டு அப்பர் தெருமுனையிலிருக்கும் நண்பரெனில், கூடத்திலிருக்கும் திரு காரைக்கால் அம்மையார் பக்கத்து வீட்டிலிருக்கும் நண்பராவார்!!

🌷 கூடத்தின் உள்ளிருக்கும் பெருமான்களின் நிலையை குறிப்பது மட்டுமில்லாது, எந்த நுட்பத்தை (Technique) கடைபிடித்தால் அவர்களது நிலையை நாமும் அடையலாமென்பதையும் ஆடலரசன் திருவுருவம் குறிப்பிடுகிறது!

🌷 அதென்ன நுட்பம்?

அம்மையுடன் நடக்கும் ஆடல் போட்டியில், பல வகையான நுட்பங்களை பயன்படுத்திய பின்னர், இறுதியில், பெருமான் தனது இடதுகாலைத் தூக்கி, தனது இடது காதில் மாட்டப்பட்டிருக்கும் அணிகலனை கழட்டுவார். இதை செய்யமுடியாமல் அன்னை தோற்றுப்போவார். 

அம்மை - மனம், உடல் & வையகக் காட்சிகள்.

பெருமான் - நாமே.

தூக்கிய இடதுகால் - புறமுகமாக செல்லும் நமது கண்ணோக்கத்தை (ஆரியத்தில், கவனத்தை) நம் மீது - நமது தன்மையுணர்வின் மீது - திருப்புதல்.

காதணி - "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம். இதிலிருந்தே அனைத்து பற்றுகளும் தோன்றுகின்றன.

இந்நுட்பத்திற்கு பகவான் திரு இரமண மாமுனிவரிட்ட பெயர்: தன்னாட்டம்!!

oOo

இரத்தினம், பொன், வெள்ளி, தாமிரம் & சித்திரம் ஆகிய கூடங்களிலுள்ள பெருமான்கள் எந்நிலையில் உள்ளனரோ, அதே நிலையில்தான் பின்வரும் பெருமான்களும் உள்ளனர்:

🌷 சென்னை திருவொற்றியூரிலுள்ள திரு படம்பக்கப் பெருமான் என்ற உடையவரின் கீழுள்ள பெருமான்

🌷 மதுரையிலுள்ள, பெரும் புகழ்பெற்ற, திரு சொக்கநாதர் என்ற உடையவரின் கீழுள்ள திரு சுந்தரானந்த சித்தர்

🌷 அகத்தியர் திருமணக்காட்சி கண்ட திருவிடமென்று சொல்லப்படும் அனைத்து திருக்கோயில்களிலுள்ள உடையவர்களின் கீழுள்ள பெருமான்கள்

🌷 திருக்கயிலாயக் காட்சி கண்ட திரு அப்பர் பெருமான்

🌷 சூழ்ச்சியில்லாக் காட்சி கண்ட திரு மணிவாசகப் பெருமான்

🌷 நடக்கும் சில நிகழ்வுகளைக் கண்டால் பகவானும் இந்நிலையில் இருக்கலாமென்று தோன்றுகிறது.

ஆக, கூடம், திருமணக்காட்சி, திருக்கயிலாயக் காட்சி, சூழ்ச்சியில்லாக் காட்சி என அழைக்கப்படும் யாவும் ஒரே காட்சிதான்: அம்மையப்பர் காட்சி!!

காண்பவர் - அப்பன்
காட்சி - அம்மை

oOo

இவ்வாறு, இறையுருவின் பெயர், திருக்கோயிலின் பெயர், ஊரின் பெயர், இறையுருவம், கோயிலின் அமைப்பு, புனைவுக்கதைகள் என வாய்ப்பு கிடைத்த அனைத்திலும் பேருண்மைகளை பதிவு செய்துவிட்டுச் சென்றுள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால், கேடுகெட்ட, நன்றிகெட்ட, தன்னலமே வடிவான, பித்தலாட்ட, நயவஞ்சக, நச்சு அசுர இனம் உள்நுழைந்ததால், அனைத்தும் வீணாகிவிட்டன. குருடர்களாக, செவிடர்களாக, "மம" சொல்லும் மரமண்டைகளாக ஆக்கப்பட்டுவிட்டோம்!! 🤬😡

இதுவும் அம்மையின் கூத்துத்தான். இதையும் தென்னாடுடைய தமிழீசன் வெற்றிக்கொள்வான்.

oOOo

செயற்கரிய செயல் செய்த பேயார்க்கும் அடியேன் 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Wednesday, August 23, 2023

7 கன்னியர் - சிறு விளக்கம்


தேவாரப் பாடல் பெற்ற திருக்கடம்பந்துறை (குளித்தலை) திரு கடம்பங்காட்டு அப்பர் (கடம்பவனநாதர்) திருக்கோயிலின் கருவறை பின்புற சுவற்றில் 7 கன்னியர் புடைப்புச்சிற்பமாக இருப்பதைக் காணலாம். இதற்கு அத்திருக்கோயிலின் புனைவுக்கதை கூறும் விளக்கம்: கருவறை உடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமானை வணங்கியவர்களுள் 7 கன்னியரும் அடங்குவராம். அதை குறிக்கவே 7 கன்னியரின் உருவம் புடைப்பாக செதுக்கப்பட்டுள்ளதாம். 🤦🏽🤦🏽

("புகை நமக்கு பகை", "குடி குடியை கெடுக்கும்" என்று அச்சிடுவது போன்று, இதுபோன்ற பிட்டுகளுடன், "தல புருடாக்கள் அன்பர்களுக்கும், இந்து சமயத்திற்கும் கேடு" என்று அச்சிடவேண்டும். அல்லது, திரைப்படங்களுக்கு தரச்சான்றிதழ் வழங்குவது போன்று, இவைகளுக்கும் வழங்கவேண்டும். எ.கா.: "அனைவருக்கும் பொருந்தும்", "வயது வந்தவர்களுக்கு மட்டும்", "மனநலம் பாதிக்கக்கூடும்"... 👊🏽👊🏽👊🏽)

கடம்பந்துறை கோயில் உயிருள்ள திருக்கோயிலாகும். அதாவது, இங்குள்ள கருவறை உடையவரின் கீழே ஒரு பெருமான் திருநீற்று நிலையில் (ஆரியத்தில், சமாதி) இருக்கிறாரென்பது பொருளாகும். அவரது நிலையை குறிக்கும் இறையுருவங்கள்தாம் கருவறையிலிருக்கும்:

🌷 சிவலிங்கம்

- சீரான தண்டுப்பகுதி - உள்ளபொருளாய் சமைந்துள்ள பெருமானின் நிலை என்றும் மாறாதது

- சற்றே வளைந்துள்ள உச்சிப்பகுதி - பெருமானின் நிலை முடிவற்றது

🌷 7 கன்னியர்

"7 கன்னியர்" என்றவுடன் பிராம்மி, வாராகி... என்ற ஆரியப் பெயர்வரிசையை நாம் நினைவுகூறும்படி கைங்கரியம் செய்திருக்கிறார்கள். இவ்விடத்தில், இது தவறாகும்!

இங்கு, 7 கன்னியர் எனில் நிணநீர், குருதி, தசை, கொழுப்பு, எலும்பு, எலும்புச் சோறு மற்றும் வெண்ணீர் ஆகும்.

அதாவது, 7 கன்னியர் = நமது உடல்!!

எனில், 7 கன்னியரின் புடைப்பிலிருந்து நாம் எய்தக்கூடிய முடிவுகள்:

🔸 உடையவரின் கீழேயிருக்கும் பெருமான் உடலுடன் உள்ளேயிறங்கி இருக்கலாம்.

(திரு சதாசிவ பிரம்மேந்திரப் பெருமானும் உடலுடன் திருநீற்றுக் குழிக்குள் இறங்கினாரென்பதை இங்கு நினைவுகூறலாம்.)

🔸 அல்லது, அப்பெருமான் இன்றும் உடல் தாங்கியிருக்கலாம்.

(வள்ளிமலை திருப்பணியின்போது, மலைப்பாதையில், ஓரிடத்திலிருந்த கற்பலகையை நகர்த்திப் பார்த்தபோது, உள்ளே 4 (அல்லது, 5) பெருமான்கள் எலும்புந்தோலுமாக, திருநீற்றுநிலையில் இருப்பதைக் கண்டு திரு கிருபானந்த வாரியாரும், அவருடனிருந்த இன்னொருவரும் மயங்கி விழுந்த நிகழ்வை இங்கு நினைவுகூறலாம்.)

🔸 அல்லது, உடலென்பது மேற்கண்ட 7 பொருட்களால் ஆனது என்ற கூற்றை வையகத்திற்கு வழங்கியது அப்பெருமானாக இருக்கலாம்! அவரது பங்களிப்பை வையகம் மறவாதிருக்க, 7 கன்னியர் புடைப்பை கருவறையில் வைத்திருக்கிறார்கள் என்று கொள்ளலாம்.

oOo

சில திருக்கோயில்களில், உடையவருக்கு பின்புறம் அம்மையப்பர் திருவுருவை செதுக்கியிருப்பார்கள். இதற்கு "அவ்விடத்தில் திரு அகத்தியப் பெருமானுக்கு இறைவன் திருமணக்காட்சியை காட்டியருளினார்" என்றொரு கதையை புனைந்திருப்பார்கள்.

திருமணக்காட்சி, திருக்கயிலாயக்காட்சி, சூழ்ச்சியில்லாக்காட்சி என பல பெயர்களில் அழைக்கப்படும் அக்காட்சியில் காண்பானும் (அப்பன் - நாம்) உண்டு, காட்சியும் (அம்மை - நம்மை தவிர மீதமனைத்தும்) உண்டு. உடலல்லாத நம்மை உடலாக காணும் சூழ்ச்சி (அன்னை மாயை / மாயோன்) மட்டுமிருக்காது. இப்போது, வையகம் என்ற திரைப்படத்திற்குள் நாமிருப்பது போன்று தோன்றுகிறது. திருக்கயிலாயக்காட்சியில், நாம் ஒரு புறமும் (அப்பன்), காட்சி ஒரு புறமும் (அம்மை) தோன்றும். இதையே அம்மையப்பராக உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

இவ்வுருவகம் இருக்கும் திருக்கோயில்களில் உறையும் பெருமான்கள் (கருவறை உடையவர்களுக்கு கீழே திருநீற்று நிலையிலிருப்பவர்கள்) அத்தகைய காட்சியை கண்டுகொண்டிருக்கிறார்கள் என்பது பொருளாகும்.

oOo

சென்னை திருவேற்காட்டிலுள்ள திரு வேற்காட்டீசர் திருக்கோயிலின் கருவறையில் அம்மையப்பருடன் பிள்ளையாரையும் காணலாம்.

திருக்கயிலாயக்காட்சியில் காண்பான் (அப்பன்) காட்சியுடன் (அம்மை), காணும் அறிவும் (பிள்ளையார்) உடனிருக்கிறது என்பது அங்கு உறையும் பெருமானின் கருத்து என்று கொள்ளலாம்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻