Showing posts with label திருக்கயிலாயக் காட்சி. Show all posts
Showing posts with label திருக்கயிலாயக் காட்சி. Show all posts

Tuesday, August 19, 2025

திருக்கயிலாயக் காட்சி எனும் சூழ்ச்சியில்லாக் காட்சி!

அப்பர் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருக்கயிலாயக் காட்சியை கண்ட போது, அம்மையப்பரோடு சில அசுரர்களும் காட்சி கொடுத்தனர் போலிருக்கிறது! 😜

oOo

திருக்கயிலாயக் காட்சி:

ஒரு நீர் நிலையில், பாதியுடல் நீருக்குள் இருக்குமாறு, அப்பர் பெருமான் நின்று கொண்டிருப்பார். அவருக்கு எதிரே, விடை மீது அமர்ந்தவாறு திரு அம்மையப்பர் காட்சி கொடுத்துக் கொண்டிருப்பர்.

> அப்பன் + அம்மை + விடை = 
> அவன் + அவள் + அது = 
> காண்பான் + காட்சி + காணும் செயல் = 
> தன்மையுணர்வு + காட்சி (படைப்பு) + மனம்

நமது அன்றாட வாழ்வும் இத்தகையதே. நாமும் ஒரு காட்சியை காணும் போது உணர்வுடன் இருக்கிறோம். காட்சி தோன்றுகிறது. காணுதல் எனும் செயலும் நடக்கிறது. எனில், நாம் காணும் காட்சிக்கும், பெருமான் கண்ட திருக்கயிலாயக் காட்சிக்குமுள்ள வேறுபாடென்ன?

இதற்கான விடையை திரு திருவாதவூரடிகள் (அசுரத்தில், மாணிக்கவாசகர்) கொடுக்கிறார். அப்பர் பெருமான் பெற்ற அதே காட்சியை, அடிகளார் திருக்கழுக்குன்றத்தில் பெறுகிறார். அதை, "சூழ்ச்சியில்லாக் காட்சி" என்றழைக்கிறார்.

இப்போது நம்மிடம் வந்து, "நீ வேறு. உனது மனமும், உடலும், வையகமும் வேறு." என்று சொன்னால் ஏற்றுக் கொள்வோமா? ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஏன்? நமக்கு கிடைக்கும் நுகர்வு (அசுரத்தில், அனுபவம்) அத்தகையது. உண்மையை இம்மியளவு கூட உணர முடியாதவாறு காட்சிகள் திறம்படத் தோன்றுகின்றன. இதுவே அன்னை / பெருமாளின் சூழ்ச்சியாகும் (அசுரத்தில், மாயை).

திருக்கயிலாயக் காட்சியில் சூழ்ச்சிக்கே இடமிருக்காது. யாவற்றிலிருந்தும் நாம் விலகியிருப்போம். அக்காட்சியை காண்பதால் தெளிவு கிட்டும். தெளிவு கிட்டியதால்தான், "கண்டறியாதன கண்டேன்" என்று பாடினார் அப்பர் பெருமான்.

ஒவ்வொரு ஆண்டும் திருக்கயிலாயக் காட்சியை நினைவு கூறுவது எதற்காக? சிந்திப்பதற்காக. பெருமான் பெற்ற தெளிவை நாமும் பெறுவதற்காக. தெளிவு பெற்று, பிறவிச் சூழற்சியிலிருந்து மீள்வதற்காக.

எனில், சூழ்ச்சியில்லா காட்சியில் சூழ்ச்சியின் மனித வடிவங்களில் ஒன்றான அசுரருக்கென்ன வேலை? 👊🏽👊🏽😍😌

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, December 1, 2023

கூடம், திருமணக்காட்சி, திருக்கயிலாயக் காட்சி, சூழ்ச்சியில்லாக் காட்சி - சிறு விளக்கம்


🌺🙏🏽🙇🏽‍♂️
திரு இரத்தினக்கூடம் (ஆரியத்தில், சபை), திருவாலங்காடு

🌷 இம்மதில் சுவருக்குப் பின்னால், திரு காரைக்கால் அம்மையாரும், மற்றுமொரு பெருமானும் திருநீற்று நிலையிலுள்ளனர்.

🌷 அவர்களது நிலையை குறிக்கும் இறையுருவம்தான் படத்தில் காணப்படும் திரு ஆடலரசன் ஆவார்.

🌷 அவர்களது நிலையென்ன? 

இதற்கு பதில்: அவ்விடத்தின் பெயரன்ன?

கூடம் (சபை)!!

கூடம் எப்படியிருக்கும்? பார்வையாளர்கள் ஒரு புறம் அமர்ந்திருக்க, காட்சிகள் ஒரு புறம் அரங்கேறிக் கொண்டிருக்கும். இதையொத்த நிலையில் அப்பெருமான்கள் இருக்கிறார்கள் என்பது பொருளாகும். அதாவது, அவர்களுக்கு இன்னமும் காட்சிகள் தோன்றிக்கொண்டிருக்கின்றன.

🌷 இதனால் அவர்களுக்கென்ன பயன்?

அவர்களுக்கு ஒரு பயனுமில்லை. நமக்குத்தான் கொள்ளைப் பயன்கள்!

கருவறை அமைப்பிலிருக்கும் திரு ஆலங்காட்டு அப்பர் தெருமுனையிலிருக்கும் நண்பரெனில், கூடத்திலிருக்கும் திரு காரைக்கால் அம்மையார் பக்கத்து வீட்டிலிருக்கும் நண்பராவார்!!

🌷 கூடத்தின் உள்ளிருக்கும் பெருமான்களின் நிலையை குறிப்பது மட்டுமில்லாது, எந்த நுட்பத்தை (Technique) கடைபிடித்தால் அவர்களது நிலையை நாமும் அடையலாமென்பதையும் ஆடலரசன் திருவுருவம் குறிப்பிடுகிறது!

🌷 அதென்ன நுட்பம்?

அம்மையுடன் நடக்கும் ஆடல் போட்டியில், பல வகையான நுட்பங்களை பயன்படுத்திய பின்னர், இறுதியில், பெருமான் தனது இடதுகாலைத் தூக்கி, தனது இடது காதில் மாட்டப்பட்டிருக்கும் அணிகலனை கழட்டுவார். இதை செய்யமுடியாமல் அன்னை தோற்றுப்போவார். 

அம்மை - மனம், உடல் & வையகக் காட்சிகள்.

பெருமான் - நாமே.

தூக்கிய இடதுகால் - புறமுகமாக செல்லும் நமது கண்ணோக்கத்தை (ஆரியத்தில், கவனத்தை) நம் மீது - நமது தன்மையுணர்வின் மீது - திருப்புதல்.

காதணி - "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம். இதிலிருந்தே அனைத்து பற்றுகளும் தோன்றுகின்றன.

இந்நுட்பத்திற்கு பகவான் திரு இரமண மாமுனிவரிட்ட பெயர்: தன்னாட்டம்!!

oOo

இரத்தினம், பொன், வெள்ளி, தாமிரம் & சித்திரம் ஆகிய கூடங்களிலுள்ள பெருமான்கள் எந்நிலையில் உள்ளனரோ, அதே நிலையில்தான் பின்வரும் பெருமான்களும் உள்ளனர்:

🌷 சென்னை திருவொற்றியூரிலுள்ள திரு படம்பக்கப் பெருமான் என்ற உடையவரின் கீழுள்ள பெருமான்

🌷 மதுரையிலுள்ள, பெரும் புகழ்பெற்ற, திரு சொக்கநாதர் என்ற உடையவரின் கீழுள்ள திரு சுந்தரானந்த சித்தர்

🌷 அகத்தியர் திருமணக்காட்சி கண்ட திருவிடமென்று சொல்லப்படும் அனைத்து திருக்கோயில்களிலுள்ள உடையவர்களின் கீழுள்ள பெருமான்கள்

🌷 திருக்கயிலாயக் காட்சி கண்ட திரு அப்பர் பெருமான்

🌷 சூழ்ச்சியில்லாக் காட்சி கண்ட திரு மணிவாசகப் பெருமான்

🌷 நடக்கும் சில நிகழ்வுகளைக் கண்டால் பகவானும் இந்நிலையில் இருக்கலாமென்று தோன்றுகிறது.

ஆக, கூடம், திருமணக்காட்சி, திருக்கயிலாயக் காட்சி, சூழ்ச்சியில்லாக் காட்சி என அழைக்கப்படும் யாவும் ஒரே காட்சிதான்: அம்மையப்பர் காட்சி!!

காண்பவர் - அப்பன்
காட்சி - அம்மை

oOo

இவ்வாறு, இறையுருவின் பெயர், திருக்கோயிலின் பெயர், ஊரின் பெயர், இறையுருவம், கோயிலின் அமைப்பு, புனைவுக்கதைகள் என வாய்ப்பு கிடைத்த அனைத்திலும் பேருண்மைகளை பதிவு செய்துவிட்டுச் சென்றுள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால், கேடுகெட்ட, நன்றிகெட்ட, தன்னலமே வடிவான, பித்தலாட்ட, நயவஞ்சக, நச்சு அசுர இனம் உள்நுழைந்ததால், அனைத்தும் வீணாகிவிட்டன. குருடர்களாக, செவிடர்களாக, "மம" சொல்லும் மரமண்டைகளாக ஆக்கப்பட்டுவிட்டோம்!! 🤬😡

இதுவும் அம்மையின் கூத்துத்தான். இதையும் தென்னாடுடைய தமிழீசன் வெற்றிக்கொள்வான்.

oOOo

செயற்கரிய செயல் செய்த பேயார்க்கும் அடியேன் 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, August 8, 2023

திரு மணிவாசகப் பெருமான் கண்ட திருக்கயிலாயக் காட்சி 🌺🙏🏽🙇🏽‍♂️


உணக்கிலாததோர் வித்துமேல்விளை யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

-- திருவாசகம் - திருக்கழுக்குன்றப் பதிகம் #1

🌷 உணக்கிலாததோர் வித்து

உணக்கம் - வாட்டம்.
உணக்கம் + இல்லாத + ஓர் வித்து - வாட்டமில்லாதவன்.

அதாவது, சோர்வறியாமல், வாடாமல் கடகடவென செயல்களை செய்து வினைப்பயன்களை சேர்த்துக் கொள்பவன் என்று தன்னைப் பற்றி கூறிக்கொள்கிறார்.

🌷 மேல் விளையாமல் என் வினை ஒத்தபின்

ஆனால், அப்படி வினைப்பயன்களை தான் சேர்த்துக் கொள்ளாதபடி இறைவன் தன்னை ஆக்கிவிட்டதாகக் கூறுகிறார்.

ஒரு செயலை, நாம் செய்கிறோம் என்ற கண்ணோட்டத்துடன் செய்தால், அதன் விளைவுகளையும் நாம் துய்க்கவேண்டியிருக்கும். அப்படியில்லாமல், செயல் எவ்வாறு நடைபெறுகிறது என்ற உண்மையை புரிந்துகொண்டுவிட்டால், நாம் யாரென்ற நமதுண்மையை புரிந்துகொண்டு, அதில் நிலைபெற்றுவிட்டால், அதாவது, மெய்யறிவு பெற்று அதில் நிலைபெற்றுவிட்டால், செயலும் நடைபெறும்; விளைவுகளும் நம்மை பாதிக்காது. இந்நிலைக்கு தன்னை இறைவன் கொண்டு சென்றதாக பாடுகிறார் மணிவாசகர்.

🌷 கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

கணக்கிலா - சூழ்ச்சியில்லா.

அதென்ன சூழ்ச்சியில்லாத் திருக்கோலம்?

தற்போது, உடலல்லாத நம்மை ஓர் உடலாக காண்கிறோம். பார்வையாளனான நம்மை செயல்படுபவனாக காண்கிறோம். வையகம் உண்மையில் நம்முள் இயங்கிக் கொண்டிருக்க, நாம் அதனுள் இயங்குவதாக காண்கிறோம். இதுதான் சூழ்ச்சி நிறைந்த திருக்கோலம்!

சூழ்ச்சியில்லாத் திருக்கோலமெனில் நமதுண்மையும், வையகத்தின் உண்மையும் தெளிவாக தெரியவேண்டும். அப்படி தெளிவாக தெரியும் காட்சிக்கு புகழ்பெற்ற இன்னொரு பெயருண்டு... திருக்கயிலாயக் காட்சி!!

ஆம்! மணிவாசகப் பெருமான் திருக்கழுக்குன்றத்தில் கண்டது திருக்கயிலாயக் காட்சியாகும். அக்காட்சியில் காண்பானாகிய நாமும் உண்டு; காட்சியாகிய வையகமும் உண்டு. ஆனால், தவறாகக் காணும் சூழ்ச்சி (மாயை / மாயோன்) மட்டுமிருக்காது.

oOo

இணைப்புப் படத்திலுள்ள திருவிடம் திருக்கழுக்குன்ற மலையின் அடிவாரத்திலுள்ளது. "கணக்கிலாத் திருக்கோலம்" என்று பெருமான் குறிப்பிட்ட திருக்கயிலாயக் காட்சியை, "திரு வேதகிரீசுவரரின் திருப்பாதம்" என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவ்விடத்தில் அப்பர் பெருமானின் வாழ்வில் நடந்த ஒரு புகழ்பெற்ற நிகழ்வை நினைத்துப் பார்ப்பது பொருத்தமாகவிருக்கும்.

திருக்கயிலாயம் செல்லும் வழியிலுள்ள ஒரு நீர் நிலையில் மூழ்கி, திருவையாற்றிலுள்ள ஒரு குளத்திலிருந்து வெளிப்பட்டவுடன், அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி கிட்டியது. அப்போது அவர் பாடிய பதிகத்தில், "... கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் ..." என்று பாடினார். "அவர் திருப்பாதம்" என்று அப்பர் பெருமான் குறிப்பிட்டதை, "வேதகிரீசுவரரின் திருப்பாதம்" என்று இப்பகுதி பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்று எடுத்துக்கொள்ளலாம். மற்றபடி, இரு அருளாளர்களும் கண்டது ஒரே காட்சியாகும்.

oOOo

கணக்கிலாத் திருக்கோலம் கண்ட பிரான் கழல் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, January 17, 2023

"படம்பக்கப் பெருமான்" & "கண்கூடு" - சிறுவிளக்கம்


மிக மிக பழமையான திருவிடமான திருவொற்றியூரில் (சென்னை) குடிகொண்டிருக்கும் பெருமானின் 🌺🙏🏽🙇🏽‍♂️ பெயர்களிலொன்று "படம்பக்கப் பெருமான்" ஆகும். இந்த அருமையான தமிழ் பெயரின் பொருள்: படத்தின் பக்கமிருக்கும் பெருமான்.

எந்த படத்தின் பக்கம்? வையகம் (உலகம்) எனும் திரைப்படத்தின் பக்கம்.

திரையரங்கில் நாம் ஒருபுறம் அமர்ந்திருக்க, எதிர்புறத்திலுள்ள திரையில் காட்சிகள் தெரிவதுபோன்று, அவருக்கு வையகம் தோன்றுகிறதென்பது பொருளாகும். இப்படி தோன்றும் காட்சிக்கு திருக்கயிலாயக் காட்சியென்று பெயர்.

இக்காட்சியில் காண்பான் (அப்பன்) உண்டு; காட்சியும் (அம்மை) உண்டு. ஆனால், காட்சியில் பொய்தன்மையில்லை (மனம் / மாயை). அதாவது, தோன்றும் காட்சி "காட்சிமட்டுமே & உண்மையல்ல" என்ற அறிவுமிருக்கும். தற்போது நமக்கு தோன்றும் வையகக் காட்சியை பொய்யென்றால் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். காட்சியின் தன்மை அப்படிப்பட்டதாகும். இதுவே, திருக்கயிலாயக் காட்சியின்போது, காட்சியை உண்மையென்றால் ஏற்றுக்கொள்ளமாட்டோம்! ஏன்? மீண்டும் மேற்கண்ட பதில்தான்: காட்சியின் தன்மை அப்படிப்பட்டதாகும்! 😊

திருக்கயிலாயக் காட்சிக்கு அன்னைத் தமிழில் ஓர் அருமையான பெயருண்டு: கண்கூடு!!

ஒன்று கண்கூடாகத் தெரிகிறது எனில் பொய்யின் கலப்பில்லாமல், உண்மை தெளிவாகப் புரிகிறதென்பது பொருளாகும். இப்பொருளை மேற்கண்ட திருக்கயிலாயக் காட்சியிலிருந்து எடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். எப்படியென்று பார்ப்போம்.

ஒரு தொலைநோக்கி வழியாக காண்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு முனையிலிருந்து நாம் பார்த்துக்கொண்டிருப்போம். இன்னொரு முனையில் காட்சி தெரியும். இடையிலுள்ள தொலைநோக்கியின் உட்புறப் பகுதிகளும் தெரியும். இதே போன்றொரு அமைப்பு திருக்கயிலாயக் காட்சியின்போது தெரியும். ஒருபுறம் காணும் நாம், இன்னொருபுறம் காட்சி, இடையில் நம் கண்கள் அமைந்திருக்கும் மண்டையோட்டின் உட்பகுதி (கண்கூடு) தெரியும். இப்போது, தெள்ளத்தெளிவாக,

- நாம் உடலல்ல என்பதை உணர்வோம்
- நாம் என்றுமே நாமாகத்தான் இருந்துள்ளோம் என்பதை உணர்வோம்
- நாம் தேடியது நம்மையே என்பதை உணர்வோம்
- தோன்றும் காட்சி காட்சிமாத்திரமே - உண்மையல்ல - என்பதையும் உணர்வோம்

மொத்தத்தில், உண்மை உண்மையாகவும், பொய் பொய்யாகவும் தோன்றும். மாற்றி கருதுவதற்கு வாய்ப்பேயில்லை. இதற்கு கண்கள் அமைந்திருக்கும் கூடுகளே ஏதுவாவதால், பொய்யின் கலப்பின்றி உண்மை தெள்ளத்தெளிவாக புலப்படும் சூழ்நிலைக்கு "கண்கூடு" என்று பெயரிட்டுள்ளனர் நம் முன்னோர். 

முதன்முதலில் இந்த காட்சியைக் கண்டு மற்றவர்களுக்கு தெரியப்படுத்தியவர் ஒரு மெய்யறிவாளராகத்தான் (சிவன்) இருக்கமுடியும். அதை ஆராய்ந்து உறுதிசெய்த மற்றவர்களும் மெய்யறிவாளர்களாகவோ அல்லது உள்ளபொருளை பற்றிய அறிவுடைய ஆன்றோராகத்தான் இருக்கமுடியும். "கண்கூடு" என்ற சொல் மட்டுமல்ல; அன்னைத்தமிழின் மொத்த அடித்தளமும் இப்படித்தான் போடப்பட்டிருக்கிறது. இதனால்தான் முதல் சங்கத்தில் சிவபெருமான், முருகர், அகத்தியர் (எல்லோரும் மெய்யறிவாளர்களே) இடம்பெற்றிருந்தனர் என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

oOo

🌷 திருக்கயிலாயம் செல்லும் வழியிலுள்ள ஒரு குளத்தில் மூழ்கி, திருவையாற்றிலுள்ள உப்பங்கோட்டை பிள்ளை குளத்தில் (அப்பர் குட்டை) வெளிப்பட்டவுடன், திரு அப்பர் பெருமானுக்கு 🌺🙏🏽🙇🏽‍♂️ இறைவன் திருக்கயிலாயக் காட்சி கொடுத்தாரென்று படித்திருப்போம். அதாவது, மேற்கண்டவாறு வையகக் காட்சியை "கண்கூடாக" பார்த்திருக்கிறார் என்பது பொருளாகும்.

🌷 சில திருக்கோயில்களில், கருவறையினுள்ளே பின்புற சுவற்றில், (உடையவருக்கு பின்புறம்) அம்மையப்பர் திருவுருவை புடைப்பாகவோ அல்லது பாவையாகவோ (சிலையாகவோ) காணலாம். இதன் பொருள் யாதெனில், அக்கருவறையிலுள்ள உடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான், உடல் தாங்கியிருந்த காலத்தில் திருக்கயிலாயக் காட்சியை காணும் பேறு பெற்றவரென்பதாகும்.

🌷 சொக்கர் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பெற்றவரும், பெரும் புகழ்பெற்றவருமான திரு சுந்தரானந்த பெருமானும் 🌺🙏🏽🙇🏽‍♂️ (மதுரையிலுள்ள திரு சுந்தரேசுவரர் எனும் உடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருப்பவர்) ஒரு படம்பக்கப் பெருமானாவார். தன் வாழ்நாளின் இறுதிவரை வையகக் காட்சியை "கண்கூடாக" காணும் பேறுபெற்றவராக இருந்திருக்கிறார்.

oOo

ஆழமான பொருள்கொண்டதும், சிந்திக்க எளிமையானதும், நம்மை செம்மையாக்கக்கூடியதுமான "படம்பக்கப் பெருமான்" போன்ற தமிழ் திருப்பெயர்களை பயன்படுத்தி பயன்பெறுவோம். பன்னெடுங்காலமாக நம் முன்னோர்கள் பாடுபட்டுச் சேர்த்த விலைமதிப்பற்ற முத்துக்களைக் காப்போம்.

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே 💪🏽

oOOo

என்றுமுள தென்தமிழ் வாழ்க 🌷🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Sunday, August 8, 2021

திருக்கயிலாயக் காட்சி என்றால் என்ன?

நேற்று (08/08/2021) ஆடி அமாவாசை.

அப்பர் பெருமானுக்கு திருவையாற்றில் திருக்கயிலாயக் காட்சியை இறைவன் காட்டியருளிய திருநாள்!!


🌺🙏🏽🙇🏽‍♂️

திருக்கயிலாயக் காட்சி என்றால் என்ன?

"நாயைக் கண்டால் கல்லைக் காணோம். கல்லைக் கண்டால் நாயைக் காணோம்." என்பது எல்லோரும் அறிந்த பழமொழி. சிலர், இத்துடன் இன்னொரு வரியையும் சேர்ப்பர்: இரண்டையும் கண்டால் அடிப்பவனைக் காணோம்.

☀️ நாயைக் கண்டால் கல்லைக் காணோம் - நாம் காணும் உலக காட்சி. உலகை காண்கிறோம். ஆனால், அதற்கு பற்றுக்கோடு நாம்தான் என்பதை நாம் உணர்வதில்லை. நம்முள்ளிருந்துதான் உலகம் வெளிப்படுகிறது என்பதையும் உணர முடிவதில்லை. உலகினுள் நாமிருப்பது போன்று காண்கிறோம்.

☀️ கல்லைக் கண்டால் நாயைக் காணோம் - மெய்யறிவாளர்கள் காணும் காட்சி. எக்கணமும் தமது தன்மையுணர்வில் இருப்பவர்கள். காணப்படும் யாவும் இருப்பற்றவை என்பதை உணர்ந்தவர்கள். உலகை "எரிந்து முடிந்து, உருக்கலையாத சாம்பல்" போன்று காண்பவர்கள். இதனால் தான் மெய்யறிவாளர்களை - சிவனை - சுடுகாட்டில் வசிப்பவர் (காடுடைய சுடலை) என்றழைத்தனர்.

☀️ இரண்டையும் கண்டால் அடிப்பவனைக் காணோம் - திருக்கயிலாயக் காட்சி! காண்பானும் உண்டு (கல்). காணப்படும் காட்சியுமுண்டு (நாய்). காணப்படுவது காட்சி மாத்திரமே என்ற அறிவுமுண்டு! இவ்வறிவுக்கு காரணம் காட்சி தோன்றும் வகை. காட்சியின் பொய்த்தன்மை உணரப்பட்டதும் "நான் இன்னார்" என்ற மனம் (அடிப்பவன் - எல்லா வினைகளுக்கும் காரணமானது) மறைந்துவிடும்.

சில பழமையான சிவத்தலங்களில் மூலவருக்கு பின்னே அம்மையப்பரை புடைப்புச் சிற்பமாக செதுக்கி வைத்திருப்பதைக் காணலாம். "அகத்தியருக்கு சிவபெருமான் தனது திருமணக்காட்சியை இங்கே காட்டியருளினார்" என்று தலவரலாற்றில் பதிவு செய்திருப்பர். இதன் பொருள்: அத்தலத்தின் மூலவருக்கு கீழ் சமாதியாகி இருக்கும் பெருமான், உடல் தாங்கியிருந்த காலத்தில், மேற்கண்டவாறு திருக்கயிலாயக் காட்சியைக் காணும் பேறு பெற்றவர். (இங்கு அகத்தியர் எனில் மெய்யறிவாளர் என்று பொருள். நாமறிந்த குள்ள மாமுனிவரைக் 🌺🙏🏽🙇🏽‍♂️ குறிக்காது.)

oOOo

ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮