இப்படி ஒரு கட்டுரையை 2017ஆம் ஆண்டு விகடன் வெளியிட்டிருக்கிறது (https://www.vikatan.com/spiritual/temples/104480-glory-of-goddess-moodevi). இக்கட்டுரை தற்போது, மீண்டும், சமூக வலைதளங்களில் சுற்றிவருகிறது. இவை செய்யும் சேதாரம் போதாது என்று, அவ்வப்போது புதிய கற்சிலைகள் கண்டெடுக்கப்படும்போது, தவ்வை பற்றிய தவறான கண்ணோட்டம் மீண்டும் வலம் வருகிறது. (தவ்வை - மூத்ததேவியின் பெயர்களில் ஒன்று)
இந்நேரம், இந்த தவ்வை சிலரின் குலதெய்வமாகி இருப்பார்! சிலரின் விருப்ப தெய்வமாகி இருப்பார்!! சிலருடைய திறன்பேசிகளின் முகப்புத்திரையில் அமர்ந்திருப்பார். சிலர், அடுத்து தமக்கு பெண் குழந்தை பிறந்தால் தவ்வை என்று பெயரிடவேண்டும் என்றுகூட முடிவு செய்திருப்பர்!! 😁
எல்லாம் பல கோணங்களில் இருந்து ஆய்வு செய்யாமல் கட்டுரைகளை வெளியிடுவதின் விளைவு!!
oOOo
முதலில் நமது தெய்வப்புலவர் இந்த தெய்வத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
🔹குறள் #167
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
வஞ்சனையும் பொறாமையும் உடையவனை தனது அக்கையாகிய தவ்வையிடம் ஒப்படைத்துவிட்டு திருமகள் நீங்கிவிடுவாள்.
(அவ்வை=அக்கை. தம்+அவ்வை=தவ்வை. தனது அக்காள்.)
🔹குறள் #617
மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாள்உளாள் தாமரையி னாள்
சோம்பேறியிடம் மூத்தவள் குடி கொண்டிருக்கிறார். முயற்சியுள்ளவனிடமோ இளையவள் குடி கொண்டிருக்கிறார்.
(இளையவள் - சின்னவள் - சின்னாயி (சின்ன ஆயி. ஆயி - பெண் தெய்வம்) - பின்னவள் - நப்பின்னை (நல்ல பின்னே) - லட்சுமித் தாயார் - செல்வம் / மெய்யறிவு)
இவ்விரண்டு குறள்களை வைத்து பார்க்கும்போது, தவ்வையின் கடைக்கண் பார்வை ஒருவர் மீது விழவேண்டுமானால் அவரிடம் வஞ்சனை, பொறாமை, சோம்பேறித்தனம் ஆகியவை குடி கொண்டிருக்கவேண்டும்!!
ஒரு மூத்த, பண்பட்ட குடி இப்படிப்பட்ட தெய்வத்தின் அருளுக்காகவா முனைந்திருக்கும்?
oOOo
தொன்மக் கதைகளின்படி, தவ்வை சனி பகவானின் மனைவியாவார். "சனி" என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு. இங்கு அழுக்கு/மலம்/தூய்மையின்மை மற்றும் சோம்பேறித்தனத்தைக் குறிக்கும்.
இதற்கு முன்னர், குறள் பகுதியில் நாம் கண்ட விளக்கம் இங்கும் பொருந்தும்: மனதிலும் உடலிலும் தூய்மையற்று, சோம்பிக்கிடப்போரை தவ்வை வந்து பிடித்துக் கொள்வார்.
இவ்விளக்கத்தின்படி, இவரை வணங்கிய நம் முன்னோர்கள் சோம்பேறிகளாகவும் தூய்மையற்றவர்களாகவும் இருந்தனர் என்று பொருள் வரும். இதை ஏற்றுக்கொள்ள முடியுமா? இவ்விளக்கத்திற்கு முற்றிலும் எதிர்மறையானவர்கள் அல்லவா நம் முன்னோர்கள்!
oOOo
அடுத்தது, தவ்வையின் பிறப்பு, உருவம் மற்றும் இவர் வைத்திருக்கும் பொருட்களைப் பற்றி பார்ப்போம்.
> தொன்ம கதைகளின்படி, பாற்கடலைக் கடைந்தபோது இவர் முதலிலும், திருமகள் பின்னரும் வெளிவந்தனர். இவரது கொடியில் காக்கையும், கையில் துடைப்பமும் இருந்தன. இவரது ஊர்தி கழுதையாகும்.
> பாற்கடல் என்பது நமது உடல்! இதைக் கடைதல் என்பது மனதாலும், உடலாலும் செய்யப்படும் அனைத்து செயல்களுமாகும். இவற்றின் மூலம் கிடைக்கும் அனைத்து துய்ப்புகளும் தவ்வையாகும். இறுதியில் கிடைக்கும் மெய்யறிவு திருமகளாகும்.
(காஞ்சி திரு கைலாசநாதர் திருக்கோயிலில் உள்ள அன்னை தவ்வையின் சிற்பம்)> இவரது தனங்களும் வயிறும் பெருத்திருக்கும். உடலும் சற்று பூசியிருக்கும். மனதாலும் உடலாலும் ஆற்றப்படும் வினைகளின் விளைவுகள் பல மடங்காகப் பெருகுவதைக் குறிக்கும்.
> இவரது கொடியிலுள்ள காக்கை நல்லதையும் உண்ணும். தீயதையும் உண்ணும். இது போன்று, வாழ்வு நமக்கு நல்லதையும் கொடுக்கும்; தீயதையும் கொடுக்கும். இரண்டையும் சமமாக துய்க்கப் பழகவேண்டும்.
> இவரது கையிலுள்ள துடைப்பம் தூய்மைப்படுத்துவதைக் குறிக்கும். பிறவிகள் அமைவதும், அவற்றின் மூலம் பல விதமான துய்ப்புகள் கிடைப்பதும் நம்மை மேம்படுத்துவதற்காகவே. தூய்மைப்படுத்துவதற்காகவே. வினைப்பயன்கள் தீர்ந்தவுடன் பிறவிகள் ஓய்ந்துவிடும். நாமும் நம்மில் - சிவப்பரம்பொருளில் - நிலை பெற்றுவிடுவோம்.
> இறுதியாக, இவரது ஊர்தியான கழுதை. எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும். பொதியை ஏற்றினாலும் சரி, சும்மாவிருந்தாலும் சரி, அப்படியே இருக்கும். இப்படிப்பட்ட மனநிலையில் எப்போதும் இருக்க பழகிக் கொள்ளவேண்டும். நல்லது நடந்தால் தலையை விரிகோணத்தில் வைத்துக்கொள்வதும், தீயது நடந்தால் ஓடி ஒளிதலும் கூடாது.
இதுவரை இந்த பகுதியை பொதுவான கண்ணோட்டத்திலிருந்து எழுதியுள்ளேன். அதாவது, "நாம் பார்க்கிறோம்", "நாம் கேட்கிறோம்", "நாம் படிக்கிறோம்" என்ற கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு எழுதியுள்ளேன். ஆனால், இது தவறு!!
உண்மையில் நமக்கு பிறப்பில்லை, இறப்பில்லை. நாம் ஏதும் செய்வதுமில்லை. உடல் பிறக்கிறது. பிறக்க வைப்பது இயற்கை/அன்னை காளி/இறைவனின் ஆற்றல். உடல் இறக்கிறது. இறக்க வைப்பது அன்னை. உடல் இயங்குகிறது (மனமும் சேர்ந்து). இயக்க வைப்பது அன்னை. எல்லாவற்றையும் செய்வது அன்னையெனில், நமக்கிருக்கும் உகப்புகள் (சாய்ஸஸ்) இரண்டு: இருத்தல் & துய்த்தல். இருத்தல் எனில் நமது தன்மையுணர்வில் நிலைபெற்று இருத்தல். இதிலிருந்து விலகினால் ... துய்த்தல் - அதோ கதி - கோவிந்தா!! 😁
"இருத்தல் என்பது எளிய வேலையல்ல. மிக தீவிரமான வேலை!" என்று அருளியிருக்கிறார் #பகவான் திரு #ரமண #மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽♂️. இதில் சற்று தொய்வு - மடி - ஏற்பட்டாலும், மெய்யறிவு (தாமரையினாள் - திருமகள்) நீங்கி, தவ்வையின் (மாமுகடியின்) வசமாகிவிடுவோம் (குறள் #617). அதாவது, பிறவி ஏற்பட்டுவிடும்.
(ஏழு சொற்களில் எவ்வளவு அழகாக ஆன்மிகத்தைப் பற்றி சொல்லிவிட்டார் திருவள்ளுவர்!! 👌🏽😍 இது போன்று இன்னும் பல குறள்களின் அடிப்படை ஆன்மிகமாகும்.)
oOOo
இவ்வளவு சிறப்புகளிருந்தும் ஏன் தவ்வை வழிபாடு வழக்கொழிந்து போனது? நீண்ட காலமாக இருந்தும் ஏன் பெருவாரியான மக்களின் தெய்வமாக ஆகவில்லை?
கனியிருப்ப காய்கவர்ந்தற்று தான் காரணம்!
"காண்பவனை விட காணப்படுபவை உயர்ந்தது" என்ற கொள்கையை உடையது பெண்தெய்வ வழிபாடு. இதுவே தகராறு. இதனால்தான் இந்த வழிபாடு பண்படாத மக்களிடம் இருந்தது. இதிலும், தவ்வை வழிபாடு காக்கை, துடைப்பம், கழுதை, கிழிந்த/அலங்கோலமான ஆடை என அருவருப்பை அடிப்படையாகக் கொண்டது. இதன் வேறுபாடுகளான,
🌷 மாரியம்மன், காளியம்மன்... - பயத்தையும்
🌷 காமாட்சியம்மன், மீனாட்சியம்மன், பெருமாள்... - அழகையும், புலன்களை கவர்தலையும் அடிப்படையாகக் கொண்டவை.
இவைகளுக்கு முன்னர் அருவருப்பு எப்படி தாக்குப்பிடித்திருக்க முடியும்? என்றும் மாறாத அகத்தை (சிவத்தை) உணர்ந்த இனத்தால் மாறிக் கொண்டேயிருக்கும் புறத்தியை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்ததை காட்டுமிராண்டிகளின் படையெடுப்பு முடிவுக்கு கொண்டுவந்திருக்கும்.
(இங்கு கவனிக்க வேண்டியது, அருவருப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு வழிபாட்டையும் நம் முன்னோர்கள் அனுமதித்துள்ளனர் என்பது! இதுவே பாலைவன மதங்கள் இங்கு பெருவாரியான மதங்களாக இருந்திருப்பின்... 😏)
oOOo
கிடைத்த தவ்வை அன்னையின் சிலைகள் பெரும்பாலும் வயல்வெளிகளில் கிடைத்திருக்கின்றன. ஏன்?
சிவ வழிபாடு என்பது சுருங்குதல், எல்லாவற்றையும் விட்டொழித்தல், அனைத்திலிருந்தும் விலகுதல் என செல்லும். அன்னை வழிபாடு இதற்கு எதிர்மாறானது: விரிதல், பெருகுதல், வளர்தல், சேர்த்தல் என்று செல்லும்.
உழவுத்தொழில் என்பது ஒன்றையிட்டு, அதை பல மடங்காக அறுவடை செய்வதாகும். எனவே உழவர்கள் அன்னையை வணங்கியுள்ளனர். குறிப்பாக தவ்வையை வணங்கக் காரணம் வளத்தையும் பெருக்கத்தையும் குறிக்கும் இவரது உருவ அமைப்பு - பூசிய உடல், பெருத்த வயிறு & தனங்கள்.
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮
No comments:
Post a Comment