சிவபெருமான் உணர்ச்சிவசப்பட்டாராம்!!!
"மாமனார், மாமியார் இல்லாமல் வாழ்க்கை நிறைவு பெறாது" என்றாராம் உமையன்னை!! (ஏன் நாத்தனார், ஓரகத்திப் பற்றியெல்லாம் கேட்கவில்லையா? வாழ்க்கை இன்னும் சுவையாக இருக்குமே!)
"மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு" என்று மது புட்டிகளில் அச்சிட்டிருப்பது போல், "புகையிலை புற்றுநோயை உருவாக்கும்" என்று வெண்சுருட்டு பெட்டிகளில் அச்சிட்டிருப்பது போல், "புருடாக்கள், படிப்பவரின் மூளைக்கும், நம் சமயத்திற்கும் கேடு" என்று புருடாக்களின் கீழ் அச்சிடவேண்டும் என்று சட்டம் வரவேண்டும்!
மனதை கொள்ளை கொள்ளும் ம.செ.வின் ஓவியத்தை ஒரு பக்கம் கொடுத்து விட்டு, இன்னொரு பக்கம் இரண்டாம்தர இதழ்களுக்கும், மட்டமான மெகாத் தொடர்களுக்கும் உரையாடல் எழுதிக் கொண்டிருப்பவரை வைத்து தயாரித்த புருடாவைக் கொடுத்திருக்கிறார்கள்!
oOOo
நம் திருத்தலங்களில் உள்ள நாயன்மார்கள் கூடத்தில் பேயாரை (காரைக்கால் அம்மையாரை) 🌺🙏🏽 மட்டும் அமரவைத்துப் போற்றியிருப்பார்கள் நம் முன்னோர்கள். இதற்கான காரணங்கள்:
🌷 63 நாயன்மார்களில் மூத்தவர்
🌷 செயற்கரிய செயல்களைச் செய்தவர்
🌷 "தமிழ் இசையின் தாய்" என்று போற்றப்படுபவர். நட்டபாடை, இந்தளம் ஆகிய பண்களை தமிழுக்கு தந்தவர்.
🌷 வெகு பின்னாளில் தோன்றிய கீர்த்தனை அமைப்புகளுக்கு முன்னோடி
🌷 வெண்பா, அந்தாதி, இரட்டைமணிமாலை, கட்டளைக் கலித்துறை ஆகிய பாடல் அமைப்புகளை பத்திம இலக்கியத்தில் முதன்முதலில் பயன்படுத்தியவர். கட்டளைக் கலித்துறைப் பற்றி தொல்காப்பியத்தில் செய்தியில்லை. சங்க இலக்கியங்களிலும் பாடல்கள் இல்லை. ஆகையால், இவரே இவ்வமைப்பை முதன்முதலில் பயன்படுத்தியவராகிறார்.
🌷 பதிக முறையில் முதன் முதலில் பாடியவரும் இவரே. பதிகத்தின் இறுதியில் முத்திரை பதிக்கும் முறையையும் அறிமுகப்படுத்தியவர் இவரே. இவரது திருவாலங்காட்டுத் திருப்பதிகமே மூத்த பதிகமாகிறது.
(மூலம்: காரைக்கால் அம்மையார் பாடல்கள் ஓர் ஆய்வு - முனைவர் செ சுப்புலட்சுமி மோகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
oOOo
திருக்கயிலாயம் - சைவர்களும், சமணர்களும், திபெத்திய பௌத்தர்களும் மிகப்புனிதமாக கருதும் திருத்தலங்களில் ஒன்று. எண்ணற்றோர் வடக்கிருந்த தலம். பலர் வீடுபேறு அடைந்த தலம். இருப்பினும், திருக்கயிலாயம் என்பது பொதுவாக ரிஷபதேவர் 🌺🙏🏽 என்ற மாமுனிவரின் சமாதியைக் குறிக்கும்.
பேயார் சந்தித்தது ரிஷபதேவரையா அல்லது வேறு மாமுனிவரையா என்பது தெரியாது. யாராக இருந்தாலும் அப்பெருமான் "திருக்கயிலாயக் காட்சி" நிலையிலேயே இருந்துள்ளார். எனவே தான் அவரை உமையன்னையுடன் வீற்றிருந்ததாகவே குறிப்பிடுகின்றனர்.
🌷 உலகினுள் நாமிருப்பதாக பொதுவாக அனைவரும் காணும் காட்சி - உலகக்காட்சி.
🌷 நம்முள் உலகமியங்கும் காட்சி - திருக்கயிலாயக் காட்சி. காண்பவரும் உண்டு (சிவம்). காணப்படுவதும் உண்டு (உமை). பேயார் சந்தித்த பெருமான் இந்நிலையிலேயே இருந்துள்ளார்.
இப்படிப்பட்ட மாமுனிவர்கள் வாழ்ந்த மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற மலைத்தொடரை தன் கால்களால் கடப்பது தவறு என்றெண்ணிய பேயார் தன் தலையாலும், கைகளாலும் கடந்துள்ளார்!! இன்றுவரை மலைப்பையும் வியப்பையும் தரும் அவரது செயற்கரிய இச்செயல் கண்டு பெருமகிழ்ச்சியடைந்த பெருமான், அவரை "அம்மையே" என்றழைத்து மரியாதை செய்துள்ளார். அவரது நோக்கத்தை உணர்ந்த அப்பெருமான், அவருக்கான மெய்யாசிரியன் தானல்ல என்பதை உணர்த்தி, அவருக்கு வழிகாட்டும் நல்லாசிரியர் திருவாலங்காட்டில் இருப்பதாகக் கூறியருளி, அங்கு அனுப்பி வைத்துள்ளார்.
பேயாரும் திருவாலங்காடு வந்து சேர்ந்து, தனது மெய்யாசிரியரைக் கண்டு வணங்கி, அவர் அறிவுறுத்திய உத்தியைக் கடைபிடித்து வீடுபேறு அடைந்துள்ளார். பேயாரின் சமாதியையும், அருகிலிருந்த இன்னொரு பெருமானின் சமாதியையும் சேர்த்து இரத்தின சபையை உருவாக்கியுள்ளார் அப்போது அப்பகுதியை ஆண்ட மன்னர்.
(பேயார் சந்தித்தது திருவாலங்காட்டு மூலவரின் கீழ் சமாதியாகி இருக்கும் ஆலங்காட்டு அப்பர் 🌺🙏🏽 பெருமானையா அல்லது வேறு பெருமானையா என்று தெரியவில்லை.)
வீடுபேறு அடைய பேயார் என்ன உத்தியைக் கையாண்டார் என்பதை இரத்தின சபாபதி என்னும் திருவுருவமாக வடித்து வைத்திருக்கின்றனர் நமது பெரியோர்கள். காளியன்னைக்கு எதிராக நடனமாடிக் கொண்டே, தனது இடதுகாலைத் தூக்கி, தனது இடது காதிலிருக்கும் காதணியைக் கழட்டுவது போல் அமைந்திருக்கும் பெருமானின் திருவடிவம்.
காளியன்னை என்பது நம் உடல், உலகம் என நம்மைத் தவிர மீதமனைத்துமாகும். பெருமான் தனது காலைத் தூக்கி தனது காதணியைக் கழட்டுவது என்பது நமது கவன ஆற்றலை நம் மீதே திருப்பி, "நான் இன்னார்" என்பதிலுள்ள இன்னாரை நீக்குவதாகும். நடனமாடிக்கொண்டே கழட்டுவது என்பது நமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே நமது பொய்யறிவை (இன்னார்) விட முயற்சிப்பதாகும்.
oOOo
மனதின் உருவை மறவாது உசாவ
மனமென ஒன்றிலை உந்தீபற
மார்க்கம் நேர் ஆர்க்கும் இது உந்தீபற
தன்னை உபாதி விட்டு ஓர்வது தான் ஈசன்
தன்னை உணர்வதாம் உந்தீபற
தானாய் ஒளிர்வதால் உந்தீபற
தானாய் இருத்தலே தன்னை அறிதலாம்
தான் இரண்டற்றதால் உந்தீபற
தன்மய நிட்டை ஈது உந்தீபற
-- பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 (உபதேச உந்தியார்)
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
No comments:
Post a Comment