ஆத்தி கடுக்கைமுத லானமலர் ஐந்துஎழுத்தால்
சாத்தி அடியவரும் தக்கோரும் - ஏத்திப்
புகழுமலை ஆங்குஅவரைப் பொற்கொடியோடு எய்தி
மகிழுமலை அண்ணா மலை
-- அண்ணாமலை வெண்பா - #70
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
🔸 பொதுவான பொருள்:
ஆத்தி, கொன்றை போன்ற மலர்களாலும், நமசிவாய என்ற திருவைந்தெழுத்தாலும் அடியவர்களும், தகுதியுடைய ஏனையோரும் சிவப்பரம்பொருளை போற்றி வணங்குவர். அவ்வாறு போற்றி வணங்குவோரை, அவர் தம் இடத்திற்கே உமையன்னையுடன் சென்று காட்சியருளி மகிழ்வார் எம்பெருமான்.
🔸 உட்பொருள்:
🔹 ஆத்தி - இங்கு மலரைக் குறிக்கவில்லை. தொடர்பு (சம்பந்தம்) என்ற பொருளைக் குறிக்கிறது. "நான் இன்னார்" என்று நம்மை நம் உடம்புடன் தொடர்பு படுத்திக் கொள்வது.
🔹 கடுக்கை - கொன்றை மலரல்ல. சேட்டை. நமது செயல்கள். "நான் செய்கிறேன்" என்ற எண்ணம்.
🔹 ஐந்தெழுத்து - நமசிவாய.
உணர்த்தும் பொருள்: எதுவும் நானில்லை. எல்லாம் நீயே. எல்லாம் உன்னிடமிருந்து வெளிப்படுபவையே. எல்லாம் உனது வெளிப்பாடே.
இந்த வகையில் தொடர்ந்து சிந்திக்க, நமது ஆணவம் ஒழியும்.
🔹 பொற்கொடி - உமையன்னையைக் குறிக்கும். உமையன்னை என்பது நம்மைத் தவிர (நான் என்னும் தன்மையுணர்வைத் தவிர) மீதமனைத்தும் அடங்கும். ஏற்கனவே உமையன்னையோடு தான் இருக்கிறோம். இனி புதிதாக எப்படி "ஆங்கு பொற்கொடியோடு எய்த" முடியும்?
இப்போது, உலகினுள் நாமிருப்பதாக உணர்கிறோம். இது உலகக்காட்சி - பொய் காட்சி. திருக்கயிலாயக் காட்சியின் போது அனைத்தும் நம்முள்ளிருப்பதை உணர்வோம். நாமும் இருப்போம் (சிவம்). காட்சிகளும் தோன்றும் (உமை). இச்சமயத்தில் மகிழ்ச்சியும் தோன்றும் (மகிழும் மலை). யாருக்கு இந்த காட்சி கிடைக்கும்?
"நான் இன்னார்" (ஆத்தி), "நான் செய்கிறேன்" (கடுக்கை) போன்ற தவறான கண்ணோட்டங்களை விடுத்து, "எதுவும் நானில்லை. எல்லாம் நீயே." (திருவைந்தெழுத்து) என்று சிந்தித்து ஆணவத்தை ஒழிக்கும் மெய்யன்பர்களுக்கு!!
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮
No comments:
Post a Comment