Wednesday, May 31, 2023

திருமலை நடைபயணம் & பழனி காவடி - சிறு விளக்கம்


அடியார்கள் திருமலைக்கு மேற்கொள்ளும் நடைப்பயணத்தையும் & பழனி முருகப் பெருமானுக்காக எடுக்கும் காவடியையும் ஒரு பகுத்தறிவுவியாதி கிண்டல் செய்து பேசினார். அவருக்கு நான் அனுப்பிய விளக்கங்களை தொகுத்து இந்த இடுகையாக மாற்றியிருக்கிறேன்.

oOo

முதலில், உங்களது தாயாரின் இறப்பை பற்றி சற்று பார்ப்போம்.

ஒரு குறிப்பிட்ட நாள் வரை அவர் உயிருடனிருந்தார். அடுத்த நாள் அவர் இறந்துவிட்டார். இறந்தநாளுக்கு முதல் நாள்வரை, எதையெல்லாம் வைத்து நீங்கள் அம்மா என்று அழைத்தீர்களோ, அவையெல்லாம் அன்றும் அப்படியே இருக்கின்றன. ஆனால், இப்போது அதை அம்மா என்று நீங்கள் அழைக்கவில்லை. அதிலிருந்து நீங்கிய ஏதோ ஒன்றுதான் அம்மாவாகிறது. எனில், அம்மா என்பது எது / யார்?

இப்போது, இதே ஏரணத்தை (Logic) நமக்கும் பொருத்திப் பார்த்தால், நாம் இவ்வுடல் அல்ல என்பது உறுதியாகும். எனில், நாம் யார்?

இந்த கேள்விக்கு விடை காண நம் மாமுனிவர்கள், மெய்யறிவாளர்கள், சான்றோர்கள் வகுத்துக் கொடுத்த பாதைகளில் இரண்டுதாம்: திருமலைக்கு நடைபயணம் மற்றும் பழனிக்கு காவடி தூக்குதல்.

🔸 திருமலைக்கு நடைபயணம்


இவ்வகையான பயணத்தை எப்படி மேற்கொள்ள வேண்டுமென்று பகவான் திரு இரமண மாமுனிவர் அருளியிருக்கிறார்: கருவுற்று நிறைமாதமாக உள்ள ஒரு பேரரசி நடைபயில்வதை போன்று பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

இப்படி செய்தால் என்னவாகும்?

ஒரு சமயத்தில் நமதுடல் மரத்துப்போகும். ஆனால், நாம் (நமது தன்மையுணர்வு) மரத்துப்போகமாட்டோம். இப்போது நம்மை நாம் தெளிவாக உணரமுடியும்.

இவ்வாறு உணருவதால் என்ன பயன்?

பிறவியறுப்போம். இதையே வீடுபேறு, நிலைபேறு, மோட்சம் (ஆரியம்) என்று பலவாறு அழைக்கிறோம்.

இங்கு, அன்னைத்தமிழின் மேன்மையை உணரமுடியும்: பிறவி என்ற சொல்லைப் பற்றி சற்று சிந்திக்கவும். நாம் நாமாக இல்லாமல் "பிறவாக" (மனிதனாக, விலங்காக, பறவையாக...) ஆவதற்கு பெயர்தான் "பிறவி"!!

🔸 பழனிக்கு காவடி தூக்குதல்


காவடி எப்படியிருக்கும், அதை எப்படி தூக்குவர் என்பது தாங்கள் அறிந்ததே. சிலர் மட்டும், அவ்வப்போது, காவடிகளை தங்களது தோள்பட்டைகளில் வைத்து சுழற்றுவர்.

> காவடி - நமதுடல்

> காவடியின் இருபுறமும் சொருகியுள்ள மயிற்பீலிகள் - முன்வினை & வருவினைப் பயன்கள்

> காவடியை தூக்குதல் - உடலை தாங்குவது நாமே

> காவடியை சுழற்றுதல் - உடலை இயக்குவது நாமே

> காவடியை எதுவரை தூக்குகின்றனர்?

முருகப்பெருமானை காணும்வரை. அல்லது, திருக்கோயிலை அடையும்வரை.

> முருகப்பெருமான் என்பது எது?

என்றும் மாறாத, அழியாத, தன்னொளி கொண்ட நாமே உள்ளபொருள் என்ற அறிவு. அதாவது, மெய்யறிவு.

> உடலை எதுவரை தாங்குகிறோம் / இயக்குகிறோம்?

நாம் இவ்வுடல் என்ற தவறான அறிவு இருக்கும்வரை. அதாவது, மெய்யறிவு கிடைக்கும்வரை. இதுவே, "முருகப்பெருமானை காணும்வரை காவடி தூக்குதல்" என்ற சடங்கின் பொருளாகும்.

கடந்த 700+ ஆண்டுகளாக நடந்த அரசியல் படையெடுப்புகள், 2,000+ ஆண்டுகளாக தமிழகத்தின் மீது நடந்த இன & மத படையெடுப்புகள், கடந்த 60 ஆண்டுகளாக நடக்கும் தரமற்றவர்களின் ஆட்சி ... என பலவற்றால் தரமிழந்து போனோம். குறிக்கோள் தவறிப்போனோம்.

"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து..." என்பது திரு மணிவாசகப் பெருமானின் வாக்காகும். இவ்வாறே, செய்யும் சடங்குகளின் உட்பொருள் உணர்ந்து செய்தால் மேன்மை அடையலாம்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

No comments:

Post a Comment