பெரும்பாலான தொன்ம வரலாறுகளில், செவிவழிச் செய்திகளில், தல புருடாக்களில் இறைவன் "முதிய அந்தணராக வந்தார்" என்ற வரியைக் காண முடியும். இது பற்றி ஓர் அன்பர் பகவான் திரு ரமண மாமுனிவரிடம் 🌺🙏🏽🙇🏽♂️ வருத்தப்பட்டார் (அதாவது, "வேறு சாதியினர் வடிவில் இறைவன் தோன்றமாட்டாரா?" என்பது அந்த அன்பர் கேட்க வந்த கேள்வி). அதற்கு பகவான், ஆறுதலாக, அக்கதைகளில் பதிவாகியிருக்கும் செய்தியில் கவனம் செலுத்த அறிவுறுத்தினார்.
அந்தணர் என்றதும் ஒரு குறிப்பிட்ட ஒப்பனை / இனம் நம் மனதில் தோன்றுவது போல் நமக்கு கொம்பு சீவி வைத்துள்ளனர். இது கடந்த சில நூற்றாண்டுகளில் நடந்த கைங்கர்யமாகும்.
அந்தணன் என்ற சொல்லுக்கு அறவோன், தூயவன், பிராமணன், எவ்வுயிரையும் தன்னுயிர் போல் காண்பவன் என்று பல பொருட்கள் உண்டு. இவையனைத்துமே சிவபெருமானைக் குறிக்கின்றன.
🔹அறவோன் எனில் அற வடிவினன் அல்லது அறத்தினின்று வழுவாதவன். அறம் எனில் நீதி. நீதிக்கு இறைவன் என்றொரு பொருள் உண்டு. காரைக்கால் அம்மையார் 🌺🙏🏽🙇🏽♂️ இறைவனை "அறவா" என்றழைக்கிறார்.
🔹தூயவன் எனில் மாசு சிறிதும் அற்றவன் என்று பொருள். மாசு என்பதற்கு மாயை, இருள், கருமை, விபரீதம் என்று பல பொருட்கள் உள்ளன. இவையனைத்துமே உடல் அல்லாத நம்மை, நாம் உடலாகக் கருதும் தன்மையைக் குறிக்கும். இந்த மயக்கம் தீர்ந்தவரே தூயவன். சிவபெருமானின் பெயர்களில் ஒன்று மாசிலாமணி (மாசு இல்லா மணி).
🔹பிராமணன் எனில் பிரம்மமாய் இருப்பவன். பிரம்மம் எனில் என்றும் மாறாதது. சிவதத்துவம் மாறாததை / அசைவற்றதைக் குறிக்கும். சக்தி / பெருமாள் தத்துவம் மாறுவதை / அசைவதைக் குறிக்கும்.
🔹சிவபெருமான் எனில் சிவநிலையில் உள்ள பெருமான். காண்பானிலிருந்து காட்சி வேறுபடாமலிருக்கும் நிலையே சிவநிலை. மொத்த அண்டமும் தானாக தோன்றும் இந்த நிலையில் பிறவுயிர்கள் மட்டும் பிரிந்து தனியாக தோன்றுமா? எவ்வுயிரையும் தன்னுயிராக உணர சிவநிலையில் உள்ள பெருமான்களால் மட்டுமே முடியும். இவர்களே உண்மையான அந்தணர்கள்.
எனில், சிவபெருமான் அந்தணனாகத்தான் தோன்ற முடியும். பிறவுயிர்களை தன்னிலிருந்து வேறாகக் காண்பவர் சிவபெருமான் அல்லர். ஆகையால், சிவபெருமான், அந்தணன் & பிராமணன் ஆகிய சொற்கள் ஒரு பொருட் பன்மொழியாகும். சிவபெருமானை - சிவநிலையில் இருப்போரை - குறிக்கும் சொற்களாகும். ஓர் இனத்தை குறிக்கும் சொற்களல்ல.
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮
No comments:
Post a Comment