Friday, September 17, 2021

திருத்தலங்களில் நாம் என்ன செய்யவேண்டும்?

சனாதன தர்மம் எனில் பூஜை, விரதம், ஹோமம், தர்ப்பணம், திதி, யாத்திரை, அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை என்று நினைத்துக்கொண்டிருந்த ஒரு நபருக்கு, திருவாலங்காடு திருத்தலத்திலிருக்கும் திரு இரத்தின சபையை மட்டும் வைத்து நம் சமயத்தைப் பற்றி சிறிது விளக்க முற்பட்டேன். அதன் தொகுப்பே இந்த இடுகையாகும். மேற்சொன்ன "நம்பிக்கைகளுடன்" ஆரியம் பேசினாலே மேன்மையானவராக ஆகிவிடுவோம் என்றொரு "நம்பிக்கையும்" அவரிடம் இருந்தது! 🤭

(தமிழ் அர்ச்சனை அரசாணையை எதிர்த்து பலர் வழக்குத் தொடுத்திருக்கிறார்களாம். அவர்களில் ஒருவர், "சிவபெருமானுக்கு தமிழ் தெரியாது. ஆகையால், தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது" என்று வாதிட்டுள்ளாராம்!! 😂😂🤣)

oOOo


பல ஆண்டுகளுக்கு முன்னர் திருவாலங்காடு திருத்தலம் சென்றிருந்தேன். அங்குள்ள இரத்தின சபையின் வடிவமைப்பு பின்வருமாறு இருக்கும்:

+----------------------------------------+
|                                                |
|                                                |
|                                                |
|          +------------------+            |
|          |    @ @ @     |            |
|          |                      |            |
+--------+                      +----------+

@ - திரு பேயார் எனும் காரைக்கால் அம்மையார், திரு இரத்தின சபாபதி (ஊர்த்துவதாண்டவப் பெருமான்) மற்றும் திரு அருகிலிருந்து வியந்த அம்மை (சமிசீனாம்பிகை)

🌺🙏🏽🙇🏽‍♂️

சபையை கவனித்தவாறே வலம் வந்துவிட்டு, அங்கிருந்த ஆரியப்பூசாரியிடம் கேட்டேன், "சிலைகளுக்கு பின்னாலுள்ள இடத்தில் என்ன உள்ளது?". சற்றே துணுக்குற்ற அவர், "நீங்க சிலைங்கறேள். நாங்க சுவாமிம்போம்." என்று நிறுத்திக்கொண்டார். "சரி, இவருக்கு சிலைகள்தாம் பரம்பொருள் போலிருக்கிறது." என்று எண்ணியவாறு விலகிவிட்டேன்.

அடுத்தமுறை சென்றிருந்த போது ஓர் இளம்வயது ஆரியப்பூசாரி இருந்தார். மக்களைக் கவர வேண்டுமென்ற ஆர்வமும் வேகமும் அவரிடம் இருந்தன. அவரிடம், "உள்ள 3 சுவாமிங்க இருக்காங்க. ஆனா, சபை பெரிசா இருக்கே. பின்னாடி என்ன இருக்கு?" என்று கேட்டபோது, "உள்ளே, சிவபெருமான் நடனமாடிண்டிருக்கா. காரைக்கால் அம்மையார் பாத்து ரசிச்சிண்டிருக்கா." என்று தொன்மவழியில் பெருமையுடன் பதில் கூறினார். 😊 அவர் சொன்ன பதிலின் ஆழத்தை அவர் அறிந்திருக்கவில்லை.

பின்னர், வேறு வழிகளின் மூலம் நான் தெரிந்துகொண்டதும் & உணர்ந்துகொண்டதும்:

☀️ இரத்தின சபை என்பது திரு பேயார் மற்றும் இன்னொரு பெருமானின் ஜீவசமாதித் தொகுப்பாகும். பெயர் தெரியாத அப்பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ பேயாருக்கும் மூத்தவர். பேயார் சமாதியடைந்த பின், அப்பகுதியை ஆண்ட மன்னர், இரு சமாதிகளையும் சுற்றி சபையை எழுப்பியுள்ளார். ஆனால், ஓர் அடையாளத்தை மட்டும் வைத்துள்ளார்.

☀️ பேயாரின் திருவுருவம் அவரை மட்டும் குறிக்கும். ஆனால், அம்மையப்பரின் திருவுருவங்கள் இரண்டாக இருந்தாலும் அவற்றை இணைத்து ஒன்றாகக் கருதவேண்டும். இத்திருவுருவங்கள் உள்ளே சமாதியிலிருக்கும் இருவரது நிலையையும் குறிக்கும். அது என்ன நிலை?

☀️ அம்மை என்பது நம் உடல் முதல் நம் கண் முன்னே விரியும் உலகனைத்தையும் குறிக்கும். அப்பன் என்பது நான் எனும் நமது தன்மையுணர்வைக் குறிக்கும். 

☀️ எவ்வளவு முயன்றாலும் உலகை (காளியை - அம்மையை) வெல்லமுடியாது. வெல்வதற்கு ஒரே வழி நம் கவன ஆற்றலை நம் மீது (நம் தன்மையுணர்வின் மீது - அப்பன்) திருப்புவது ஒன்றே. பெருமான் தனது காலை உயர்த்தி தனது காதணியை தானே கழட்டுவது என்ற சித்தரிப்பின் பொருள் இதுவே.

☀️ இந்த உத்தியை தன்னாட்டம் (ஆத்ம விசாரம்) என்றழைக்கிறார் பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️.

🔹யாருக்காக இவ்வளவு செய்திகளையும் பெயர்கள், உருவங்கள், கோயிலின் அமைப்புகள், பாடல்கள், தல வரலாறுகள் போன்றவற்றின் மூலமாக பதிவு செய்துவிட்டுச் சென்றுள்ளனர் நம் முன்னோர்கள்? நமக்காக. இனி வரும் தலைமுறையினருக்காக.

🔹எதற்காக பதிவு செய்துள்ளனர்? பேருண்மைகளை நாம் உணர்வதற்காக. பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்காக.

🔹ஆனால், என்ன நடந்திருக்கிறது? அபிஷேகம், அலங்காரம், லட்சார்ச்சனை, உற்சவம், சிறப்பு யாகம், அஷ்டபந்தன கும்பாபிஷேகம்...

🔹பேயார் என்ன செய்திருக்கிறார் திருத்தலத்தில்? வடக்கிருந்திருக்கிறார். 

🔹எனில், நாம் என்ன செய்யவேண்டும்? நாமும் வடக்கிருக்கவேண்டும். 

🔹ஆனால், என்ன செய்கிறோம்? அர்ச்சனை, சிறப்பு தரிசனம், பிரசாதம், நேர்த்திக்கடன்...

🔹வடக்கிருக்க வேண்டிய திருத்தலங்கள் சுற்றுலாத் தலங்களாக, அருங்காட்சியகங்களாக, சிறப்பு பொருளாதார மண்டலங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

🔹என்றுமே நமது திருத்தலங்கள் இப்படித்தான் இருந்தனவா? இல்லை. என்றுமே அங்கு நடந்து கொண்டிருந்த நிகழ்வு ஒன்றுதான்: வடக்கிருத்தல். இன்று இது தவிர மற்றனைத்தும் நடக்கின்றன. கடந்த 1800 ஆண்டுகளாக வடக்கிலிருந்தும், வெளியிலிருந்தும் நிகழ்ந்த மத & அரசியல் படையெடுப்புகளால் நாம் இழந்தவைகளில் மெய்யறிவியலும் ஒன்று. 

முகம்மதியர்களின் கத்திக்காகவும், கிறித்தவர்களின் மூளைச்சலவையாலும்தான் நம் முன்னோர்கள் மதம் மாறினர் என்று நம்மில் பெரும்பாலானோர் நம்பிக்கொண்டிருக்கிறோம். இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. திருவிசயநல்லூர் திரு ஸ்ரீதர அய்யாவாள் 🌺🙏🏽🙇🏽‍♂️ வரலாற்றில் அக்காரணம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

சனாதன தர்மம் என்ற சொற்களுக்கு பல பக்கங்களைத் தாண்டும் மேன்மையான விளக்கம் இருக்கலாம். ஆனால், நடைமுறையில்?

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம் 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment