Tuesday, November 22, 2016

ஸ்ரீதிருப்புகழ் சுவாமிகள் என்றழைக்கப்படும் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள்

பரங்கியர்கள் இந்தியாவை நேரடியாக கொள்ளையடித்துக் கொண்டிருந்த காலம் அது! அவர்களது வருட பிறப்பான ஜனவரி 1 அன்று, நம் மக்கள், பரங்கியரின் தயவு வேண்டி, மாலை இனிப்புகள் சகிதம் அவர்களைக் கண்டு, வாழ்த்து தெரிவித்து விட்டு வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். 😣

"எதற்கு இப்படி அடிமை போன்று பரங்கி 'துரை'களின் (😝) காலில் விழ வேண்டும்? அதே நாளில், எல்லா நலன்களையும், வளங்களையும் வழங்கக்கூடிய தணிகை துரையை வணங்கி இன்புறலாமே!!" 👍 என்று ஒரு அடியார் 6 பக்தர்களுடன் தி.பி. 1948 (1917) டிசம்பர் 31 அன்று இரவு திருத்தணிகை வேலனைத் தொழ புறப்பட்டார். 👌 அன்று 6 பேருடன் ஆரம்பித்த திருப்பணி இன்று 6 லட்சம் பக்தர்களை ஒருங்கிணைக்கும் " #திருத்தணி #திருப்படி #திருப்புகழ் #விழா " என்ற பேரியக்கமாக வளர்ந்துள்ளது. 👏👍 "திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமானே" என்ற அருணகிரிநாதரின் வாக்கை மெய்பித்துள்ளது. மேலும், வேலவன் வசிக்கும் அனைத்து மலைத் தலங்களுக்கும் இவ்விழா பரவியுள்ளது. 🙏

இந்தப் பேரியக்கம் உருவாகக் காரணமான அந்த அடியார்... *#ஸ்ரீதிருப்புகழ் #சுவாமிகள் என்றழைக்கப்படும் #வள்ளிமலை #ஸ்ரீசச்சிதானந்த #சுவாமிகள்*!! 🙏

தணியாத ஆன்மீக தாகமும், குருவின் திருவருளும் இருந்தால் சாதாரண மனிதர்களாக இருப்பவர்களும் மிக உயர்ந்த ஆன்மீக நிலைக்குச் செல்ல முடியும் என்பதற்கு உதாரணம் ஸ்ரீதிருப்புகழ் சுவாமிகளின் வாழ்க்கை.

திருப்புகழ் சுவாமிகளின் இயற்பெயர் அர்த்தநாரி. கொங்கு நாட்டில் சிவத்தலமான பவானிக்கு அருகில் பூநாச்சி என்ற கிராமத்தில் சிதம்பர ஜோதிடர்-லஷ்மியம்மாள் தம்பதிக்கு திருச்செங்கோடு ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் அருளால் தி.பி. 1901 (1870) நவம்பர் 25 ஆம் நாள் கார்த்திகை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தார்.

இளம் வயதிலேயே துறவு நாட்டம் வந்து விட்டது. திருமணம் ஆகியும் கூட கோவில் கோவிலாகச் சுற்றிக் கொண்டிருந்தார். பின் பிழைப்புக்காகச் சொந்த ஊரை விட்டு மைசூருக்குச் சென்றார். சிறிது காலம் அரண்மனையில் பணியாற்றினார். பின்னர் அதிகாரிகளுக்கு சமைத்துப் போடும் வேலை கிடைத்தது. அதைச் செய்து வந்தார்.

ஆனால் வாழ்க்கையில் துன்பங்கள் தொடர ஆரம்பித்தன. முதல் மனைவி, குழந்தைகள் என ஒவ்வொருவராக காலமாகினர். இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். குழந்தைகள் பிறந்தன. ஆனால் அவையும் வரிசையாகக் காலமாகி விட்டன. நரசிம்மன் என்னும் கடைசிக் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தான். தொடர்ந்த சோக சம்பவங்களால் அர்த்தநாரிக்கு வாழ்க்கை மீதே வெறுப்பு வரத் தொடங்கியது. இறைநாட்டம் அதிகரித்தது. திக்கற்றோருக்கு தெய்வமே துணை என அனுதினமும் இறைவனைத் தொழுது வரலானார்.

இந்நிலையில் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை. உடலை உருக்கியது. தற்கொலை செய்து கொண்டு விடலாமா என்று கூட நினைத்தார். இந்நிலையில் அர்த்தநாரியின் நண்பர் ஒருவர் பழனி முருகனைச் சென்று தரிசிக்குமாறும், அவன் அபிஷேக தீர்த்தம் உண்டால் தீராத வினைகள் அனைத்தும் தீரும் என்றும் ஆலோசனை கூறினார். அதன்படி மனைவி, குழந்தையை அழைத்துக் கொண்டு பழனியம்பதியைச் சென்றடைந்தார் அர்த்தநாரி. மனைவியும் மகனும் மற்றவர்கள் வீட்டில், வீட்டு வேலை செய்து சாப்பிட்டு வந்தனர். அர்த்தநாரியோ பழனியம்பதி ஆலயத்திலேயே தங்கினார். அன்ன ஆகாரம் ஏதுமில்லை. ஆலயப் பணியாளர்கள், பக்தர்கள் பிரசாதமாகத் தரும் பாலும் பழமும்தான்.

நாளடைவில் தனக்குள் புது ரத்தம் பாய்வதையும், படிப்படியாக நோய் குணமாவதையும் உணர்ந்தார். முருகனின் மீதான பக்தி அதிகமாயிற்று. சதா கோயில், பூஜை, தியானம் என்று ஆலய மண்டபத்திலேயே கழித்தார். ஆலய கைங்கரியப் பணிகளில் ஈடுபட்டார். துறவு வாழ்க்கை வாழ்ந்தார். அவரது வைராக்கிய நிலையைக் கண்ட மக்கள் அவரை ’ #மைசூர் #சுவாமிகள் ’ என்று மரியாதையுடன் போற்றலாயினர். சுவாமிகளுக்கோ நாளுக்கு நாள் துறவு பூண வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வந்தது.

ஒருநாள் ஆலயத்தில் ஒருவர் திருப்புகழ் பாடிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டதும் சுவாமிகளுக்குத் தன்னை அறியாத ஒரு பரவச உணர்ச்சி ஏற்பட்டது. அவர் பாடப்பாட இவரும் கூடவே பாடினார். நெக்குருகிக் கலங்கினார். நாளடைவில் முயன்று அதனை முழுமையாகக் கற்றுக் கொண்டார். பக்தி மேலீட்டால் கண்ணீர் சிந்த அனுதினமும் திருப்புகழை முருகன்முன் பாடி வந்தார். அதனால் பக்தர்கள் அவரைத் ’திருப்புகழ் சுவாமிகள்’ என்று அழைக்க ஆரம்பித்தனர். ஆனாலும் துறவு எண்ணம் நாளுக்கு நாள் அவரிடம் வளர்ந்து கொண்டே இருந்தது. ஒருநாள், நண்பர் ஒருவரிடம் தனது எண்ணத்தைத் தெரிவித்தார். அவரோ, சுவாமிகளை திருவண்ணாமலைக்குச் சென்று பகவான் ஸ்ரீரமண மகரிஷியை தரிசிக்குமாறு ஆலோசனை கூறினார். சுவாமிகளும் திருவண்ணாமலை நோக்கிப் பயணப்பட்டார்.

அப்போது #பகவான் #ரமணர் விரூபாக்ஷி குகையில் தங்கி இருந்தார். அவர் குகையை விட்டு வெளியே வந்தபோது, கௌபீனதாரியாய், தண்டமேந்தியவராய், சாட்சாத் பழனிமுருகனாகவே திருப்புகழ் சுவாமிகளுக்குக் காட்சி அளித்தார். மெய் சிலிர்த்துப் போனார் சுவாமிகள். அப்படியே ரமணரது பாதம் பணிந்து வீழ்ந்தார். பகவானின் விரூபாஷி குகை அருகிலேயே தங்கி பணிவிடை செய்ய ஆரம்பித்தார். ஸ்ரீ ரமணரும் அவரை *திருப்புகழ் முருகன்* என்று அன்போடு அழைத்து வந்தார். தினம்தோறும் அவரை திருப்புகழ் பாடச் சொல்லிக் கேட்பார். ஸ்ரீ ரமணரிடத்தில் எப்படியாவது குரு உபதேசம் பெற வேண்டும் என்பது தான் திருப்புகழ் சுவாமிகளின் எண்ணம். அதற்காக ஆவலுடன் தகுந்த நேரத்தை எதிர்பார்த்துக் காத்து கொண்டிருந்தார்

ஒரு நாள்… பணிவிடை செய்து கொண்டிருந்த வள்ளிமலை சுவாமிகளைப் பார்த்து ரமணர், ‘கீழே போ, கீழே போ, இங்கே நிற்காதே! உடனே கீழே போ’ எனக் கட்டளையிட்டார். திருப்புகழ் சுவாமிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘தான் ஏதும் தவறு செய்து விட்டோமோ, அதுதான் மகரிஷி கோபித்துக் கொண்டு தன்னை கீழே போகுமாறு சொல்லிவிட்டாரோ’ என நினைத்து வருந்தியவாறே மலையிலிருந்து வேகமாகக் கீழே இறங்கினார்.

கீழே.. சேறும் சகதியும் நிறைந்த ஒரு குட்டை. அதில் ஒரு எருமையைக் கட்டிக் கொண்டு, அதனோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தார் #ஸ்ரீசேஷாத்ரி #சுவாமிகள். அவர் உடல் முழுவதும் சேறு, சகதி.

திருப்புகழ் சுவாமிகள் வருவதைப் பார்த்த சேஷாத்ரி சுவாமிகள், உடனே குட்டையை விட்டு எழுந்து ஓடோடி வந்து திருப்புகழ் சுவாமிகளை அப்படியே கட்டிக் கொண்டார். சேஷாத்ரி சுவாமிகளின் உடை மீதிருந்த சேறெல்லாம் திருப்புகழ் சுவாமிகள் மீதும் ஒட்டிக் கொண்டு விட்டது. சுவாமிகளுக்கோ ஒன்றுமே புரியவில்லை. எங்கும் ஒரே சந்தன வாசம். திருப்புகழ் சுவாமிகளின் மீதும் அது வீசியது. திகைத்துப் போய் நின்று கொண்டிருந்த திருப்புகழ் சுவாமிகளைத் தன்னருகில் அமர வைத்துக் கொண்ட சேஷாத்ரி சுவாமிகள், அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.

*ஆத்மாத்வம், கிரிஜாமதி: ஸஹசரா: ப்ராணா: சரீரம் ஹம்*
*பூஜாதே விஷயோப போகரசனா நித்ரா ஸமாதி ஸ்திதி*
*ஸஞ்சார; பதயோ: ப்ரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணி ஸர்வாகிர:*
*யத்யத்கர்ம கரோமி தத்தத் அகிலம் சம்போ வாராதநம்*

எனத் தொடங்கும் சிவ மானச ஸ்தோத்திரத்திலிருந்து நான்காம் ஸ்லோகத்தைச் சொல்லி, *‘ஈசனே நீ எனது ஜீவாத்மா; தேவியே நீ எனது புக்தி! என்னுடைய உடல் உன்னுடைய இருப்பிடம். நான் ஈடுபடும் அனைத்து விஷயங்களும், அனுபவிக்கும், அனைத்து போகங்களும் உன்னுடைய பூஜை!’* என்று அதன் பொருளையும் விளக்கினார். பின்னர் திருப்புகழ் சுவாமிகளிடம், ‘இதே கருத்துக்குச் சமமான திருப்புகழ் பாடல் ஏதேனும் இருந்தால் கூறுங்கள்!’ என்றார். அதற்கு திருப்புகழ் சுவாமிகள்,

*அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல*
*அமுதபானமேமூல அனல்மூள*
*அசைவுறாது பேராத விதமுமேவி யோவாது*
*அரிச தான சோபான மதனாலே*

*எமனைமோதி யாகாச கமன மாமனோபாவ*
*மெளிது சால மேலாக வுரையாடும்*
*எனதியானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்*
*இதய பாவனாதீத மருள்வாயே*

*விமலை தோடி மீதோடு யமுனைபோல வோரேழு*
*விபுத மேகமேபோல வுலகேழும்*
*விரிவு காணும் மாமாயன் முடிய நீளுமா போல*
*வெகுவி தாமு காகாய பதமோடிக்*

*கமலயோனி வீடான ககனகோள மீதோடு*
*கலபநீல மாயூர இளையோனே*
*கருணை மெகமேதூய கருணை வாரியேயீறில்*
*கருணை மேருவே தேவர்க பெருமாளே!*

எனத் தொடங்கும் 1048-வது திருப்புகழைப் பாடி, அதன் பொருளையும் விளக்கினார்.

அதைக்கேட்டு மகிழ்ந்த சேஷாத்ரி சுவாமிகள், ’திருப்புகழ்தான் உனக்கு இனித் தாரக மந்திரம். நீ இனிமேல் உன்னுடைய சுயநலத்துக்காக எந்தக் காரியத்தையும் செய்யாமல், சிந்தனை, சொல், செயல் என அனைத்தையும் பரம்பொருளுக்கே அர்ப்பணம் செய்து வாழ். நீ இனி வேறு எந்த மந்திர நூல்களும் படிக்க வேண்டாம். ஜெப, தபங்கள் எதுவும் செய்ய வேண்டாம். உனக்கு திருப்புகழே போதும். இனி நீ எங்கு சென்றாலும் திருப்புகழ் ஒலிக்க வேண்டும். நீ வள்ளிமலைக்குப் போய்த் தவம் செய்து கொண்டிரு. பின்னர் நானும் அங்கே வந்து சேருகிறேன்’ என்று கூறி ஆசிர்வதித்தார்.

ஸ்ரீரமணரிடம் குரு உபதேசம் பெற நினைத்தார் சுவாமிகள், ஆனால் சேஷாத்ரி சுவாமிகளே வலிய வந்து அவருக்கு உபதேசம் செய்தார். உருவங்கள் வேறுபட்டாலும் ஸ்ரீரமணர் வேறு, சேஷாத்ரி சுவாமிகள் வேறு அல்ல என்பதை உணர்ந்து கொண்ட திருப்புகழ் சுவாமிகள், குருவின் கட்டளைப்படியே வள்ளிமலைக்குச் சென்றார். தவம் மேற்கொண்டார். கோயிலை ஒழுங்குபடுத்தினார். மலைப் பாதையைச் செப்பனிட்டார். பொங்கி அம்மனுக்கு ஆலயம் எழுப்பினார். பல்வேறு அற்புதங்களைச் செய்தார். பல ஆன்மீக, சமுதாயப் பணிகளை மேற்கொண்டார். ஆன்மீக அன்பர்களால் ‘வள்ளிமலை சுவாமிகள்’ என்று போற்றப்பட்டார். தம் வாழ்நாள் முழுவதும் திருப்புகழின் புகழ் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தார்.

தி.பி. 1981 (1950) ஏப்ரல் 14-ல் பகவான் ஸ்ரீரமணர் தேகத்தை உகுத்தார். அவ்வருடம் நவம்பர் 22 (கார்த்திகை - அஸ்வினி - திரயோதசி) அன்று வள்ளிமலை சுவாமிகளும் தேகத்தை உகுத்தார். சுவாமிகளது திருவுடல் அவர் பல காலம் தவம் செய்த, திருப்புகழ் பாடிக் கழித்த குகையிலேயே சமாதியில் வைக்கப்பட்டுள்ளது.

*பழவினைகள் தீர்த்தவனாம் பழநியுறை திருமுருகன்*
*கழல் பணிந்து புகழ்பாடும் கடமையுடன் பிறவியறும்*
*வழிகாட்டும் குருவருளால் வள்ளிமலைப் பணிபுரிந்த*
*அழகர் சச்சிதானந்தர் அகம் அமர்வேள் பதம்போற்றி*

*நவம்பர் 22 - சுவாமிகளின் ஆராதனை நாள்*
*நவம்பர் 25 - சுவாமிகளின் பிறந்த நாள்*

🌼🙏

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

(இணைப்புகள்: ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், கார்த்திகை தி.பி. 2047 (2016))

(ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தின் 2 பக்கக் கட்டுரையைக் காண https://m.facebook.com/story.php?story_fbid=10154802419666052&id=698176051)

பி.கு. 1: வள்ளிமலை சுவாமிகளைப் பற்றி மேலும் அறிய *திரு.#பரணீதரன்* அவர்கள் எழுதிய *#அருணாசல #மகிமை* என்ற நூலைப் படிக்கவும்.

பி.கு. 2: இந்த இடுகையை தினமலர் மற்றும் தமிழ் இந்து இணையதளங்களில் கிடைத்த செய்திகளைக் கொண்டு உருவாக்கினேன். எழுதும் முன்னர் மேலும் சில தளங்களையும் கண்டு வந்தேன். தமிழ் இந்து நீங்கலாக மற்ற அனைத்து தளங்களிலும் உள்ள பொதுவான மற்றும் முக்கியமான செய்தி: சுவாமிகள் பரங்கி வருடப் பிறப்புக்கு மாற்று வழி கண்டு பிடித்தது. ஆனால், தமிழ் இந்துவில் இது முழுதும் மறைக்கப்பட்டிருக்கிறது. ஏன்? ஆங்கிலேயர்கள் பரங்கி மதத்தில் தேவர்களாக ஜோடிக்கப்படுகின்றனர். ஆகையால், "பரங்கி தேவர்கள் மனம் புண்படும்" என்று மறைத்தனரா? இல்லை, "அலெக்ஸாண்டர் ஆயுத பூஜை செய்தானா?" என்ற அறிவுப்பூர்வமான கேள்வியை அன்று கேட்க வைத்து ஊதியமும் கொடுத்துப் பிழைக்க வைத்ததற்காக நன்றிக் கடனாக மறைத்தனரா? 🤔😕😛😜😝

No comments:

Post a Comment