Sunday, October 26, 2025

வடபழனி ஆண்டவரின் வலது கால் சற்று முன்னே இருப்பதின் பொருள்


இறைவடிவம் என்பது மறையாக்கம் செய்யப்பட்ட சுருக்கிய கோப்பு (Encrypted Zip File) போன்றதாகும். மறைநீக்கம் செய்து, விரித்து, அதிலுள்ள கருத்துகளை புரிந்துகொண்டு, வாழ்வை செம்மையாக்கிக் கொள்ளவேண்டும்.

மெய்யியலில், இறைவடிவத்தின் வலதுபுறம் என்பது இறைவனை குறிக்கும்; இடப்புறம் என்பது அன்னையை குறிக்கும்.

> வலம் - இடம்
> இறைவன் - அன்னை
> மாறாதது - மாறுவது
> உள்ளபொருள் - படைப்பு
> அருள் - பொருள்

இங்கு இறைவடிவத்தின் வலதுகால், இடதுகாலை விட சற்று முன்னே உள்ளது. எனில், "பொருள் தேடலை விட அருள் தேடலை சற்று கூடுதலாக செய்" என்பது பொருளாகும்.

oOo

அசுரர்-சைத்தான்-சாத்தான் வருகைக்கு முன், ஓர் இறை வடிவத்தை ஒரு தமிழன் கண்டால்: அவ்வடிவம், அதன் பெயர், அதற்கு நடத்தப்படும் வழிபாடு ஆகியவை எதை உணர்த்துகிறது?

அசுரர்-சைத்தான்-சாத்தான் வருகைக்கு பின்: இறைவா, இதிலிருந்து என்னை காப்பாற்று. அதிலிருந்து என்னை காப்பாற்று. எனக்கு இது வேண்டும். அது வேண்டும். ...

அரசராக உயர்ந்திருந்தவரை இரப்பாளராக (அசுரத்தில், பிச்சைக்காரனாக) தாழ்த்திவிட்டனர்! 😞😢

(அசுரர்: பீடாவாயர் மண்ணிலிருந்து வந்த சமணம், பௌத்தம், நாமம், நூல் என யாவும்.)

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Saturday, October 25, 2025

இடுக்குப் பிள்ளையார் இருக்க இடுப்பு வலி எதற்கு? 🤭


விட்டால், அடுத்து, இடுப்பு வலிக்கான காப்புக் (அசுரத்தில், பரிகாரம்) கோவிலென்று அறிவிப்பார்கள் போலிருக்கிறது! 😁

🔸 இடுக்கு - இடுக்கி - ஒரு பொருளை கவ்வியெடுக்க உதவும் கலன் (கருவி).

🔸 பிள்ளையார் - அறிவு.

இரண்டையும் இணைத்தால் கிடைப்பது: கவ்வியெடுக்க உதவும் அறிவு!

இது, முருக வழிபாட்டில் வரும் சேவலுக்கு நிகரான குறியீடாகும். சேவலானது தேவைப்படும் போது தலையை சற்று நீட்டி, தேவையானதை கொத்தும். அது போன்று, நமது அறிவையும் தேவையான போது, வாழ்வுக்கு இன்றியமையாததின் மீது மட்டும் செலுத்தவேண்டும். இப்படி சிந்தித்து, தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டால் தப்பிப்போம். இல்லையெனில்... "இடுப்பு வலி" ஏற்படும்!

🔸 இடுப்பு - உடலின் இடுப்புக்கு அடுத்திருக்கும் பாலுறுப்பு - உயிர்கள், பொருட்கள் மீது கொள்ளும் விருப்பு, வெறுப்பு (அசுரத்தில், காமம்) - பற்றுகள்.

🔸 வலி - பற்றுகளால் ஏற்படும் விளைவுகள் - தொல்லைகள்.

அதாவது, பற்றுகளில் சிக்கி அவற்றால் பல இன்னல்களை சந்திப்போம்.

இடுக்குப் பிள்ளையார் இருக்க இடுப்பு வலி எதற்கு? = அற்றம் காக்கும் அறிவிருக்க பற்றுகள் எதற்கு?

oOOo

அறிவு அற்றம் காக்கும் கருவி -- திருவள்ளுவர் 🌺🙏🏽🙇🏽‍♂️

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, October 19, 2025

தீபாவளி - திரு கண்ண பெருமான் மெய்யறிவு அடைந்த திருநாள்!


தீபாவளி என்றதும் நம் நினைவுக்கு வர வேண்டியவை நரகாசுரன் மற்றும் கங்கைக் குளியலாகும் ("கங்கா ஸ்நானம் ஆச்சா?"):

🪔 நம் உடலே நரகம். நாம் இவ்வுடல் என்ற தவறான எண்ணமே நரகாசுரன். இத்தவறான எண்ணத்தை விட்டொழித்தலே தீபாவளி - கொண்டாட்டம் - பெருமகிழ்ச்சி - மரணமில்லாப் பெருவாழ்வு - நிலைபேறு / வீடுபேறு!!

🪔 தென்னாடுடையவனின் திருவடிவத்தில், அவரது முடிமேல் அமர்ந்திருக்கும் கங்கையன்னை என்பவர் நமது மனமாகும். அவரிடமிருந்து வெளிப்படும் நீரானது, ஓயாமல் நம் மனதில் தோன்றிக்கொண்டேயிருக்கும் எண்ணங்களாகும். இப்படிப்பட்ட ஓயாத வெளிப்பாடு, மெய்யறிவு பெறுவதற்கு முன், நமக்கு தொல்லையாக, நம்மை அலைக்கழிப்பது போன்று தோன்றும். மெய்யறிவு பெற்றபின், நம் மீது வீசும் தென்றல் காற்று போன்று, சாரல் மழை போன்று, இன்பமான அருவிநீர் போன்றாகிவிடும்.

கங்கையில் குளித்தீரா? = மெய்யறிவு பெற்றீரா?

ஒருவரைப் பார்த்து, "நீங்கள் நலமா?", "நன்றாக இருக்கிறீர்களா?" என்று கேட்கப்படும் கேள்விகளின் உட்பொருளென்ன? "நீங்கள் நலமுடன் இருக்கவேண்டும்", "நன்றாக இருக்கவேண்டும்" என்ற நலம் விரும்புதலேயாகும். இதுபோன்று, "கங்கையில் குளித்தீரா? (மெய்யறிவு பெற்றீரா?)" என்று கேட்பதின உட்பொருள், "நீங்கள் மெய்யறிவு பெறவேண்டும்" என்ற நல்லெண்ணமேயாகும். இவையெல்லாம் "யாதும் ஊரே யாவரும் கேளிர்", "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற நமது முதிர்ந்த, மேன்மையான பண்பாட்டின் ஒரு வெளிப்பாடாகும்! 💪🏽💪🏽

oOo

🪔 கண்ண பெருமான் உடல் உகுத்ததிலிருந்து தற்போதைய கலியுகம் தொடங்குவதாக கூறுகிறார்கள். தற்போதைய கலியுக ஆண்டு 5,125. அவர் 120 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தவர். எனில், ஏறக்குறைய 5,250 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவராவார்.

🪔 அவர் மெய்யறிவு பெற்ற நாளையே தீபாவளித் திருநாளாக கொண்டாடுகின்றனர்.

🪔 மெய்யறிவு பற்றிய அவரது கண்ணோட்டத்தை, அல்லது, மெய்யறிவு அடைய அவர் காட்டிய வழியை, நரகாசுரனுடன் கண்ண பெருமான் நடத்திய போராக காண்பித்துள்ளனர்.

🪔 ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்னர், தீபாவளியை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது மன்னர் திருமலையாவார். தெலுங்கு நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தில்தான் நாமமதம் இங்கு நிலைபெற்றது. அன்னை மீனாட்சி, காமாட்சி... வகை அம்மன் வழிபாடு வளரத் தொடங்கியது. நவராத்திரி திருவிழாவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

(மன்னரோ ஒரு தெலுங்கு-நாம மதத்தவன். அவரை வழி நடத்தியவர்களோ தெலுங்கு-பௌத்த-நாமாசுரர். அப்போது இங்கிருந்த பண்பட்ட மக்கள்திரளோ தமிழ்-திருநெறியர்! அறிமுகப்படுத்தப்பட்ட நகரமோ வடவரிடமிருந்து தமிழையும், தமிழரது சமயத்தையும் திரு சீர்காழிப் பிள்ளையார் மீட்டெடுத்த மதுரை!! மன்னர் வழி மக்கள் செல்லாவிட்டால் கடும் தொல்லைகள் விளையும். இந்த இக்கட்டிலிருந்து மக்களை எப்படி காப்பாற்றலாமென்று நம் பெரியவர்கள் சிந்தித்ததின் விளைவுதான்... "கங்கையில் குளித்தீரா?"!!! ஒரு நாம மதத் திருவிழாவிற்குள் திருநெறியின் ஒரு கூறு புகுந்ததின் பின்புலம் இதுதான்.)

🪔 தீபாவளியன்று வடவர்கள் விளக்கேற்றுவதை பார்க்கலாம். இதற்கும் கண்ண பெருமானுக்கும் எந்த தொடர்புமில்லை. பெருமான் உணர்ந்து வெளிப்படுத்திய பேருண்மை வேறு. விளக்கு வரிசை உணர்த்தும் பேருண்மை வேறு.

நளித் திங்களில் வரும் நிறைமதியன்று (கார்த்திகை - பெளர்ணமி) மாலையில், திருவண்ணாமலையின் முகட்டில் ஏற்றப்படும் பெரிய விளக்கை தொடர்ந்து, இல்லந்தோறும், ஊர்தோறும் விளக்குகள் ஏற்றப்படும். திருவண்ணாமலை / செஞ்சி போன்ற உயரமான மலையிலிருந்து பார்க்கும்போது, விளக்கொளி அலை அலையாக பரவுவது போன்றிருக்கும். இக்காட்சியினால் பெரிதும் கவரப்பட்ட வடவர்கள், கண்ண பெருமானின் திருநாளோடு விளக்கிடுதலை சேர்த்துக்கொண்டனர்.

oOo



ஒரு பெருமான் மெய்யறிவு அடைந்ததை தொல் தமிழர்கள் கொண்டாட வேண்டுமெனில், அது திரு சீர்காழிப் பிள்ளையாராக இருக்கவேண்டும். அல்லது, திரு அருட்கடல் பெருமானாக (அசுரத்தில், இரமண மாமுனிவர்) இருக்கவேண்டும்.

முதலாமவர் மெய்யறிவு அடையாமல் போயிருந்தால், இன்று, நாமனைவரும் பீடாவாயன்களாக சுற்றிக் கொண்டிருப்போம்! இரண்டாமவர் மெய்யறிவு அடையாமல் போயிருந்தால், இனிவரும் காலங்களிலும், சிலை வணங்கிகளாகவே வலம் வந்து கொண்டிருப்போம்!

oOo

ஒரு தீபாவளி திருநாளுக்காக திரு அருட்கடல் பெருமான் எழுதிய பாடல்:

நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே

பொருள்: "அழியும் இவ்வுடலா நான்? இவ்வுடலை ஆளும் நரகாசூரன் எங்குள்ளான்?" என்று ஆராய்ந்து, தானே உள்ளபொருள் என்று தெளிந்து, அந்த மெய்யறிவினால் (ஞானத்திகிரி - பெருமாளின் கையிலுள்ள சக்கிராயுதம்) தான் இவ்வுடல் என்ற தவறான எண்ணத்தை (நரகாசூரனை) விட்டொழித்தவனே (கொன்றவனே) நாராயணன். அப்படி விட்டொழித்த நாளே நரகசதுர்த்தசி எனும் தீபாவளி நன்னாளாம்.

oOOo

திரு அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻