Wednesday, August 28, 2024

வேலுண்டு வினையில்லை - சிறு விளக்கம்

வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை
கந்தனுண்டு கவலையில்லை, மனமே

🌷 வேலுண்டு வினையில்லை

நம்மை நாம் உடலாக கருதும் வரை, செயல்களை நாம்தான் செய்கின்றோம் என்ற எண்ணமிருக்கும் வரை, செயல்களின் விளைவுகளால் (வினைப்பயன்) பாதிப்படைவோம். இதற்கு தீர்வு? வேல்!

வேல் = மெய்யறிவு.

நாம் உடலல்ல என்ற நமதுண்மையை உணர்ந்து, செயல்களை செய்வது நாமல்ல என்ற உண்மையையும் உணர்ந்து, நாம் நாமாக இருந்துவிட்டால் (வேலாக இருந்துவிட்டால்), செயல்களும் அவற்றின் விளைவுகளும் நம்மை பாதிக்காது (வினையில்லை).

🌷 மயிலுண்டு பயமில்லை

மனிதப் பிறவியின் குறிக்கோள் பிறவிப்பெருங்கடலை தாண்டுவதாகும். ஒருவேளை, இப்பிறவியில் நமது முயற்சிகள் பயனளிக்கவில்லை எனில் அச்சப்படத் தேவையில்லை. அடுத்த பிறவியில் தொடர்ந்து கொள்ளலாம். முதல் நாள் இரவு தூங்கும்போது நமது மனநிலை எப்படியிருந்ததோ அப்படியேதான் அடுத்த நாள் காலையிலும் தொடரும். பிறவிகளும் இப்படிப்பட்டதே! ஒரு பிறவியின் முடிவில் நமது மனநிலை எப்படியிருந்ததோ அப்படியேதான் அடுத்த பிறவியின் தொடக்கத்திலும் இருக்கும்.

> மயில் = பிறவி.
> மயிலுண்டு பயமில்லை = பிறவிகளுண்டு அச்சப்படத் தேவையில்லை.

🌷 குகனுண்டு குறையில்லை

குகன் = நான் எனும் நமது தன்மையுணர்வு.

எப்போதும் எந்நிலையிலும் நமது தன்மையுணர்வு மாறவே மாறாது. ஒரு செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் சரி, சும்மாவிருந்தாலும் சரி, நமது தன்மையுணர்வில் ஒரு மாற்றமும் ஏற்படாது. நமது தன்மையுணர்வை இறுகப்பற்றிக் கொண்டுவிட்டால், குகனாக இருந்துவிட்டால், நமக்கு ஒரு குறையும் ஏற்படாது!

அன்பர்: எவ்வாறு தன்மையுணர்வை இறுகப்பற்றுவது?

பகவான்: குமரன் என்பவன் தன்னை குமரனென்று உணர கண்ணாடி தேவையோ? ☺️

🌷 கந்தனுண்டு கவலையில்லை

இது, மேற்கண்ட மெய்யறிவு, தன்மையுணர்வு என எதுவும் புரியவில்லை என்போருக்கான சொற்றொடராகும்!

கந்தன் = திரண்டவன்.

பலவாறாக பரவிச்செல்லும் மனதை திரட்டி (கந்தனாக்கி), ஒரு முகமாக நம்மிடமே வைத்துக்கொண்டால்... கவலைக்குதான் கவலை! நமக்கில்லை. 😀

oOo

மொத்தத்தில், மெய்யறிவுத் தேடலில் இருப்போருக்கான வழிகாட்டி & ஆறுதல் மொழியே "வேலுண்டு வினையில்லை..." என்ற பாடல் வரிகளாகும். 🙏🏽

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment