Monday, April 25, 2022

"இதான் நம்ம பொளப்பு, சாமி!"


(தயவு செய்து பொறுமையாகப் படிக்கவும். சில சொற்களையே திரும்பத் திரும்ப பயன்படுத்தியுள்ளதுபோலத் தோன்றும். மேலோட்டமாக படித்தால் கிறிஸ்டோபர் நோலானின் "டெனட்" திரைப்படம் பார்த்தது போலிருக்கும்! 😊)

1. பொளப்பு - வேலை / தொழிலைக் குறிக்க பாமர மக்கள் பயன்படுத்தும் ஒரு சொல். பிழைப்பு என்ற சொல்லின் மருவு. இந்த பிழைப்பு "பிழை"-யிலிருந்து வருகிறது. பிழை எனில் தவறு என்று பொருள். அதாவது, வேலை / தொழில் என்பது தவறு செய்வதற்கு சமம் என்றாகிறது. இது சரியா?

2. அடுத்து, திருப்பேரெயில் தேவாரப் பாடலைப் பார்ப்போம் (இத்தலம் திருவாரூருக்கு அருகிலுள்ளது; அப்பர் பெருமானால் 🌺🙏🏽🙇🏽‍♂️ பாடப்பெற்றது):

உழைத்துந் துள்ளியு முள்ளத்து ளேயுரு
இழைத்து மெந்தை பிரானென் றிராப்பகல்
அழைக்கு மன்பின ராய அடியவர்
பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே

"திருப்பேரெயில் பெருமானை வணங்கினால் பிழைப்பு (வேலை / தொழில்) போய்விடும்" என்பது நேரடி பொருள். இது சரியா?

3. அடுத்து, ஒருவர் உயிர் போகும் நிலையிலிருந்து மீண்டு வந்தால் என்ன சொல்கிறோம்? "அவரு பொளச்சிகிட்டாருங்க". "பிழைத்துக் கொண்டார்" என்பதன் மருவு. இங்கும் தவறு என்ற பொருள் தரும் பிழை என்ற சொல்லையே பயன்படுத்துகிறோம். உயிர் பிழைப்பது தவறா?

"பொளச்சிகிட்டாருங்க" என்பதற்கு பதில் "தப்பிச்சுட்டாருங்க" என்றும் கூறுவோம். தவறு என்பது தெரியாமல் செய்யும் குற்றம். தப்பு என்பது தெரிந்து செய்யும் குற்றம். எனில், உயிர் பிழைப்பது என்பது தெரிந்தே செய்யப்படும் குற்றமா?

4. அடுத்து, ஒருவர் இறந்துபோனால் "அவரு தவறிட்டாருங்க" என்போம். இறப்பது தவறாகுமா? அல்லது, இறப்பது என்பது தெரியாமல் செய்யும் குற்றமா?

மேலே, உயிர் பிழைப்பதையும் (பொளச்சிகிட்டாருங்க) தவறு என்று கண்டோம்! இப்போது, இறப்பதையும் (தவறிட்டாருங்க) தவறு என்று காண்கிறோம்!! 😁 எது சரி?

oOo

நம்மைப் பற்றிய உண்மையான அறிவைப்  (மெய்யறிவு) பெற்று, நமது தன்மையுணர்வில் நிலைபெறுவதை பிறப்பென்றும், தன்மையுணர்விலிருந்து விலகுவதை இறப்பென்றும் விளக்கியிருக்கிறார் பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️. இதே பார்வை நமது முன்னோர்களிடமும் இருந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே பிழை, தவறு & தப்பு ஆகிய சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். தன்மையுணர்வில் நிற்பதை சரியென்றும், அதிலிருந்து விலகுவதை தவறென்றும் கருதியுள்ளனர்.

இனி, முதலில் பார்த்த கேள்விகளை மறுபடியும் பார்ப்போம்.

oOo

1. ஒரு வேலையை செய்ய முனையும் போது, நமது தன்மையுணர்வை விட்டு விலக வேண்டியிருக்கும். அப்படி விலகுவதென்பது நம்மையும் அறியாமல் நடக்கும். அறியாமல் செய்யும் குற்றம் தவறாகும். எனவே, விலகுதல் - தவறுதல் - தவறு - பிழை - பிழைப்பு - பொளப்பு!

"இதான் என் பொளப்பு" - "இதுதான் என் பிழைப்பு" - "இதுதான் என்னை எனது தன்மையுணர்விலிருந்து விலகச் செய்கிறது."

2. தன்னை வணங்குபவரின் பிழைப்பை நீக்கிவிடுவார் திருப்பேரெயில் பெருமான் - தன்மையுணர்விலிருந்து விலகவேண்டிய தேவையை நீக்குவார். அல்லது, திருநீற்று நிலையை (சமாதி) வழங்குவார்.

3. பொளச்சிகிட்டாருங்க & தப்பிச்சுட்டாருங்க

இறப்பைக் கொண்டாடும் ஓர் இனம் உலகில் உண்டெனில் அது தமிழினம்தான்!! மற்ற இனங்கள் அழுது புலம்பிக்கொண்டிருக்க (நயவஞ்சக உலகக்கொல்லிகளான பரங்கியர்கள் சிறப்பு உடை உடுத்திக்கொண்டு அழுவார்கள்! ☺️), இவர்கள் மட்டும் தாரை, தப்பட்டை, வெடி & ஆட்டம் என்று கொண்டாடுவார்கள்.

இறப்பென்றால் என்ன? "உடல் இறந்துவிட்டது" என்பது காண்பவரின் பார்வையில். இறந்தவரின் பார்வையில்? உடல் நீங்கிவிட்டது. உலகக்காட்சிகள் தொடர்ந்து தோன்றலாம்; தோன்றாமலும் இருக்கலாம். ஆனால், அவர் மட்டுமிருக்கிறார். தெள்ளத் தெளிவாக தன்னை உணர்கிறார். இது நாள் வரையில், அவர் தூக்கிய காவடியின் ஒரு பகுதியான உடல் தானாக கழன்றுவிட்டது. மீதமிருக்கும் பகுதியான பற்றுகளை கழற்றிக் கொள்ளும் அரிய வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. ஆனால், கழற்றுவாரா?

🔸 தேவையான முதிர்ச்சியிருந்தால் அப்படியே நிலைபெற்றுவிடுவார். அன்னை மாயையோ (அல்லது, மாயக்கண்ணனோ) இனி ஏதும் செய்துவிட முடியாது.

🔸 தேவையான முதிர்ச்சியில்லையெனில் ... கோவிந்தா! அந்த நிலையிலிருந்து விலகி / தவறி மீண்டும் உடல்-உலக மாய உலகிற்கு திரும்பிவிடுவார். விலகுதல் - தவறுதல் - பிழைத்தல் - பிழைத்துக்கொண்டார் - பொளச்சிகிட்டாருங்க.

🔸 தேவையான முதிர்ச்சியிருந்தும், பற்றுகளை விடும் துணிவில்லாமல் போனாலும் அவ்வளவுதான். மீண்டும் உலகிற்கு திரும்பிவிடுவார். தெரிந்தே திரும்புவார். தெரிந்து செய்யும் குற்றம்... தப்பு - தப்பித்தல் - தப்பிச்சுட்டாருங்க.

4. தவறிட்டாருங்க

நமதியல்பான தன்மையுணர்விலிருந்து விலகுவதே தவறாகும். வெறும் தோற்றமாத்திரமேயான இந்த உடல்-உலகிலிருந்து நமது இயல்பு நிலைக்கு மீள்வது (அதாவது, இங்கு இறப்பது) எவ்வாறு தவறாகும்?

அம்மன் வழிபாட்டினருக்கு அது தவறாகும்! அவர்களுக்கு திருநீற்று நிலையென்பது (சமாதி) பித்துப் பிடித்தலாகும்!! 

ஒரு பக்கம், தங்களது தல புனைவுக்கதைகளில் மெய்யறிவாளரை (சிவனை) பித்தனென்றும், திருநீற்று நிலையை பித்துப் பிடித்தலென்றும் சித்தரித்துவிட்டு, இன்னொரு பக்கம், தீ மிதித்தல், பால்குடம் சுமத்தல் போன்ற திருநீற்று நிலையை அடைய உதவும் சடங்குகளையும் நடத்திக் கொண்டிருப்பார்கள். 😊

இறந்தவரை "தவறிட்டாருங்க" என்றழைப்பது தவறாகும்.

(இன்றைய நிலையில், நியாயம், தர்மம், சடங்கு, சம்பிரதாயம், கடமை, குடும்பம், சாதி, சனம், சமூகம், நாடு, மக்களாட்சி, மெக்காலே கல்வி, கொள்ளை (வரி), வழிப்பறி (நெடுஞ்சாலை சுங்கவரி), எரிபொருள் என பல காதுகுத்துகள், பட்டை நாமங்கள் மூலம் நம்மிடமிருப்பதை உருவ முயற்சிக்கும் இவ்வுலகை நல்லது என்று நினைப்பவன்தான் பித்துப் பிடித்தவன்!!)

oOo

வேலை என்ற சொல் கடலையும் குறிக்கும். கடலானது எப்போதும் சலித்துக் கொண்டேயிருக்கும். இதுபோன்று, மனதை சலிக்கவிடுவதற்குப் பெயர் வேலையாகும்!

வேலை செய்யாமல் - மனதை சலிக்கவிடாமல் - இருப்பதற்கு பெயர் ... ஓய்வு! இதில் வரும் "ஓய்" என்ற பகுதிக்கு சுருங்குதல் என்ற பொருளுண்டு. மனதை விரியவிடுவது வேலையென்றும், சுருக்கிக்கொள்வது ஓய்வென்றும் கொள்ளலாம்.

oOo

பகவானை சந்தித்த பலருக்கு, தன்மையுணர்வில் இருந்துகொண்டு ஒரு வேலையை எவ்வாறு செய்வது என்ற குழப்பம் இருந்துள்ளது. அவர்களுள் திரு அண்ணாமலை சுவாமிகளும் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஒருவராவார். ஒரு சமயம் இது பற்றி கேள்வியும் கேட்டுள்ளார். பகவான் பதிலளிக்கவில்லை. ஒரு 10 மணித்துளிகள் கழிந்த பிறகு, சிறு பெண்பிள்ளைகள் அடங்கிய ஒரு குழு வந்து, பகவானை வணங்கிவிட்டு, ஆடிப் பாடியது. அவர்களது பாடலின் உட்கரு: கண்ணனைப் பற்றிய சிந்தனையை விடாமல் பால் கறப்போமே!

அண்ணாமலை சுவாமிகளை திரும்பிப் பார்த்து பகவான் கூறினார், "நீ கேட்ட கேள்வியின் பதில் இதுதான்"!

(கண்ணன் - உள்ளபொருள் - தன்மையுணர்வு. பால் கறத்தல் - வேலை செய்தல். எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும், தன்மையுணர்விலிருந்து விலகாமல் இருக்கவேண்டும் என்பது பொருள்.)

oOo

மெய்யியலே அன்னைத் தமிழின் மூலக்கூறுகளில் தலையாயதாகும் என்ற கூற்றுக்கு, மிகச்சிறிய எடுத்துக்காட்டுத்தான் இந்த இடுகை. 🙏🏽

oOOo

என்றுமுள தென்தமிழ் வாழ்க 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment