Monday, December 13, 2021

கோவில்களுக்கு சென்றுதிரும்பும் முன்னர் சற்று நேரம் அமர்ந்திருந்துவிட்டு வருவது எதற்காக?

சில நாட்களுக்கு முன் வாட்ஸ்அப் மூலம் ஓர் இடுகை கிடைத்தது. அதில், ஒரு கோவிலுக்கு சென்று மூலவரை வணங்கிவிட்டு, வெளியேவந்து சற்று நேரம் அமர்ந்துவிட்டு செல்வதற்கான ஏதுவை விளக்குவதாகக் கூறி ஓர் ஆரியச் செய்யுளை ("அனாயாசேன மரணம் ...") பகிர்ந்திருந்தனர். ஆனால், ஏதுவை விளக்காமல் செய்யுளின் பொருளை உருகி உருகி விளக்கியிருந்தனர்! (இந்த இடுகை ஏற்கனவே ஒலி வடிவில் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது)

கோவிலில் சற்றுநேரம் அமர்ந்திருந்துவிட்டு வெளியேறுவதுடன், வீட்டிற்கு திரும்பிய பிறகும், சற்று நேரம் அமர்ந்திருந்துவிட்டு, பிற்பாடு இதர வேலைகளை செய்யச் சொல்லியிருப்பார்கள் நம் பெரியோர்கள். இவற்றின் பொருள்களைப் பார்ப்போம்.

oOo

(இப்படத்தைப் பற்றிய சிறு குறிப்பை இறுதியில் இணைத்துள்ளேன்)

நமது பழமையான காேவில்கள் யாவும் மெய்யறிவில் நிலைபெற்ற மாமுனிவர்களின் சமாதிகளாகும். அம்முனிவர்கள் உடலுடன் இருந்த காலத்தில், அவர்களை தேடி பல அன்பர்கள் வந்திருப்பர். முனிவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டும், சிந்தித்துக்கொண்டும், அவர்கள் அறிவுருத்திய உத்தியை பயின்று கொண்டுமிருப்பர். முனிவர்களின் உடல்கள் இறந்த பின்னரும் (சமாதியான பின்னரும்) இந்த வழக்கம் (கேட்டல், படித்தல், சிந்தித்தல், பயிலுதல்) தொடர்ந்திருக்கும். இதற்கு இன்னொரு பெயரும் இருக்கிறது - வடக்கிருத்தல் (ஆரியத்தில், தவமியற்றுதல்)

(நமது அகந்தையை வேரறுக்க உதவும் உத்தி எதுவோ அதைப் பயிலுதலே தவம் என்கிறார் பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️. எல்லாப் பொருள்களுக்கும் திசைகள் இருப்பது போன்று நமதுடலுக்கும் திசைகள் உண்டு. நமது தலை உடலின் வடக்குப் பகுதியாகும். நமது நாட்டத்தை உடலின் வேறு பகுதிகளுக்கும், வெளிப்புறத்திற்கும் செல்லவிடாமல் நமது முகம்/தலையிலேயே வைத்திருப்பதற்கு பெயர்தான் வடக்கிருத்தல் - வடக்குப் பகுதியில் நாட்டத்தை வைத்திருத்தல்.)

இப்படி வடக்கிருந்தோரில் சிலர் அங்கேயே சமாதியும் அடைந்தனர். அச்சமாதிகளைக் குறிப்பதற்காக அவற்றின் மேல் சிவலிங்கங்களை அடையாளமாக வைத்தனர் (ஏனைய இறையுருவங்களை அடையாளமாக பயன்படுத்தியது பிற்காலத்தில்தான்). ஒரு சமாதியில் தொடங்கிய நமது கோவில்கள், ஒரு காலத்தில் சமாதித் தொகுப்புகளாக விளங்கின. தொடர்ந்து நடந்த அரசியல் & மத படையெடுப்புகளால், ஒரு சமயத்தில், அறிவையிழந்து, சமாதிகளை மறந்து, அடையாளங்களை (சிவலிங்கங்களை) மட்டும் திருச்சுற்றுகளில் வைத்துவிட்டனர். மேலும், கோவில்களுக்குள் நீதிமன்றம், கல்விச்சாலை, நெற்களஞ்சியம், கருவூலம் என அனைத்தையும் நுழையவிட்டனர். விளைவு: கோவில்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களாக மாறிப்போயின! 

இவையெல்லாம் காலத்தின் தவிர்க்க முடியாத கோலங்கள் என்பதை உணர்ந்திருந்த நம் பெரியோர்கள், கோவிலுக்குச் செல்வதின் அடிப்படை நோக்கத்தைக் காப்பாற்றுவதற்காக கோவிலைவிட்டு வெளியேறும் முன் சிறிது நேரம் வடக்கிருந்துவிட்டு வெளியேறச் சொன்னார்கள். இதுவே நாளடைவில் சிதைந்து "சிறிது நேரம் அமர்ந்துவிட்டு" என்றாகிவிட்டது!!

oOo

வடக்கிருத்தல் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் செய்யப்படும் செயலன்று. ஆற்றின் நீரோட்டத்தைப் போன்று, உருக்கிய நெய்யை ஊற்றியது போன்று இடைவிடாது இருக்கவேண்டுமென்று அறிவுருத்துகிறார் பகவான்.

கோவிலிலிருந்து வீடு திரும்பி, வேறு வேலைகளில் ஈடுபடும் முன், சற்று நேரம் அமர்ந்திருக்க (வடக்கிருக்க) சொன்ன நமது பெரியோர்களின் அறிவுரையும் பகவானது அறிவுரையைப் போன்ற ஒன்றுதான். இது கோவிலில் கிடைத்த துய்ப்பை (அனுபவத்தை) மேலும் உறுதிப்படுத்த உதவும். இவ்வாறு விட்டுவிட்டு செய்யப்படும் வடக்கிருத்தல், ஒரு சமயத்தில், நமது இயல்பாகிவிடும். விழிப்பு நிலையில் ஒன்றை இறுகப்பற்றினால் அந்த உணர்வு தூக்க நிலையிலும் தொடரும் என்கிறார் பகவான். விழிப்பையும் தூக்கத்தையும் வெற்றி கொண்ட பிறகு, இடைப்பட்ட கனவு மட்டும் எம்மாத்திரம்?

நனவு, கனவு, தூக்கம் என அனைத்து நிலைகளிலும் நமது தன்மையுணர்வை விடாது பற்றினால்... நிலைபேறு கிட்டும்!!

oOo

"சற்று நேரம் அமர்ந்திருந்துவிட்டு செல்" என்ற எளிய உத்தியின் மூலம் வீடுபேற்றையே அடையச் செய்த நம் முன்னோர்களின் நுண்ணறிவு எங்கே? பத்து வயதில் ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளியவனை பெரியார் என்றழைக்க வைத்திருக்கும் இன்றைய பகுத்தறிவு எங்கே? 👊🏽

oOo

"வடக்கிருத்தல், தன்மையுணர்வு, நிலைபேறு ... இவையெல்லாம் எனக்கு புரியவில்லை. இறைவனின் திருப்பெயர், மாமுனிவர்களின் அறிவுரை, செய்யுள், பாடல் என ஏதாவதொன்றை உருப்போடவே விரும்புகிறேன்" என்போருக்காக:

🌷 குடும்ப வாழ்க்கையிலுள்ள அன்பருக்கு

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத [துணையும்]
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!

-- அபிராமி பட்டர் 🌺🙏🏽🙇🏽‍♂️

(இருபாலரும் துதிப்பதற்கேற்ப "மனைவியும்" என்ற சொல்லை "துணையும்" என்று மாற்றியுள்ளேன்)

🌷 மெய்யியலில் நாட்டமுள்ள அன்பருக்கு

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு [உடலாசையை] மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்

-- வள்ளற்பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️

(இருபாலரும் துதிப்பதற்கேற்ப "பெண்ணாசையை" என்ற சொல்லை "உடலாசையை" என்று மாற்றியுள்ளேன்)

🌷 "வேண்டுதல் வேண்டாமை" என்ற நிலைக்கு ஒரு படி முன்னுள்ள அன்பருக்கு

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல்
உன்னையென்றும் மறவாமை வேண்டும்

-- பேயார் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌷 பொதுநலன் வேண்டும் அன்பருக்கு

வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
[திருமுறை] அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்.

-- கச்சியப்ப சிவாச்சாரியார் 🌺🙏🏽🙇🏽‍♂️

(நமது திருமுறைகளின் பெருமையை முன்னிறுத்துவதற்காக "திருமறை" எனும் சொல்லை "திருமுறை" என்று மாற்றியுள்ளேன்.

வேள்வி என்பது மனதில் நற்சிந்தனையை விதைத்தல், பசித்த வயிற்றுக்கு சோறிடுதல் என பலவற்றைக் குறிக்கும்.)

oOo

ஒன்றை ஆரியத்தில் சொல்லிவிட்டால் அது மேன்மையாகிவிடாது. பீட்டரில் சொன்னால் அறிவாளித்தனமாகாது. எதில் சொல்லப்பட்டது என்பதை விட என்ன சொல்லப்பட்டது என்று சிந்திப்பதே சிறந்தது.

பரம்பொருளின் மொழி: அமைதி (மவுனம்).

oOo

இணைப்பு படம்: இது சிருங்கேரி திரு சாரதாம்பாள் திருக்கோயிலின் ஒரு பகுதியாகும். சிவப்பு குறியிட்ட கோவில்கள் யாவும் ஆச்சார்யார்கள் மற்றும் ஏனையோரின் சமாதிகளாகும். இது போன்றே ஆற்றின் எதிர்கரையிலும், திருத்தல வளாகத்தின் இதர பகுதிகளிலும் சமாதிகளைக் காணலாம். 🌺🙏🏽🙇🏽‍♂️

ஒரு காலத்தில், இத்தலம் போன்றே நமது திருத்தலங்கள் யாவும் காட்சியளித்தன. 

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment