சில நாட்களுக்கு முன்பு, திருவரங்கத்திலுள்ள திரு ரெங்கநாயகித் தாயார் கோயிலில் இலட்சம் விளக்குகள் ஸ்ரீ, சங்கு & சக்கிர வடிவமைப்பில் ஏற்றப்பட்டன. அந்த வடிவங்களைப் பற்றியும், விளக்கேற்றுதலைப் பற்றியும் சற்று காண்போம்.
🌷 ஸ்ரீ எனில் அசையாதிருத்தல் / நிலைபேறு என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽♂️. இதற்கு சமமான தமிழ் சொல் "திரு" ஆகும்.
🌷 ஸ்ரீ எனில் மேன்மையான செல்வம் என்றும் பொருள் கொள்ளலாம். ஆரியத்திலும் வைணவத்திலும் "ஸ்ரீயை உடையவர்" எனில் நிலைபேறு அடைந்தவர் என்று பொருள். இந்த ஸ்ரீ சைவத்தில் திருநீறு (விபூதி) ஆகிறது. திருநீறு தரித்தவர் எனில் நிலைபேறு அடைந்தவர் (சிவமானவர்) என்று பொருள்.
🌷 கூத்தப்பெருமானின் மேலிரு கைகளிலுள்ள டமருவும், நெருப்பும் பெருமாளின் சங்கு சக்கிரமாகியிருக்கும். கூத்தப்பெருமானின் கண்ணாடி பிரதிபலிப்பு பெருமாளாவார்.
டமரு / சங்கு - ஒலி
நெருப்பு / சக்கிரம் - ஒளி
இவ்வுலகம் ஒலி & ஒளியால் ஆனது.
🌷 சக்கிரத்தின் பின்புறத்தில் மடங்கல் (சிங்கம்) பெருமாளை வைத்தால் இரு பொருள்கள் கிடைக்கும்:
🔸 தோன்றும் / அசையும் காட்சிகளுக்கு (சக்கிரம்) பற்றுக்கோடு அசைவற்ற பரம்பொருளாகும் (மடங்கல் பெருமாள்).
🔸 அசையும் மனம், உடல் முதலியவற்றிற்கு அசைவற்ற ஆன்மா பற்றுக்கோடாகும்.
🌷 நூறு, ஆயிரம், இலட்சம், கோடி என்று எத்தனை விளக்குகளை ஏற்றினாலும், வகை வகையாக ஏற்றினாலும் விளக்கு உணர்த்தும் உட்பொருளை உணராமல், உணர்ந்ததன்படி வாழாமல் ஒரு பயனுமில்லை.
விளக்கு (அகல், மாவு, எலுமிச்சை, தேங்காய் ... ) என்பது நம் உடலுக்கு சமம். அதில் எரியும் நெருப்பு என்பது நம் உயிருக்கு சமம். ஒரு விளக்கு எரிவதால் அதற்கு எந்த பயனும் கிடையாது. ஆனால், அதிலிருந்து வெளிப்படும் வெளிச்சம், வெப்பம், நற்புகை மற்றவர்களுக்கு பயனளிக்கிறது. அதாவது, எரியும் விளக்கு என்பது தன்னலமற்று வாழ்வதைக் குறிக்கிறது.
🌷 "சாயங்காலம் வீட்டுல விளக்கேத்துமா" என்று பெண்களுக்கு பெரியவர்கள் அறிவுரை செய்வதைக் கேட்டிருப்போம்.
சாயங்காலம் - இரவுக்கு முந்தைய - இருள் சூழ்வதற்கு முந்தைய - காலம். குடும்பத்திற்கு கடின காலம் வருவதற்கு முன், தன்னலமற்று வாழும் மனப்பான்மையை குடும்பத்தலைவி வளர்த்துக் கொள்ளவேண்டும்.
ஓர் இல்லத்தில் கணவன்-மனைவி இடையே முறையான காதலும், பெற்றோர்-பிள்ளைகள் இடையே முறையான பாசமும் இருந்து, இல்லத்தரசி தன்னலமற்று, குடும்பத்தின் நலனுக்காக பாடுபடுபவராக அமைந்துவிட்டால் அந்த இல்லத்தில் மனநிறைவுக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவிருக்குமா?
🌷 சிலருக்கு முயற்சி செய்யாமலேயே அல்லது சிறு முயற்சி செய்தவுடனேயே எல்லாம் கிட்டிவிடும். சிலருக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் எதுவும் கிட்டாது. எதிர்மறை பலன்கள்கூட கிட்டும். எல்லாம் அவரவர் விதிப்படி நடக்கும். தனக்கு கிட்டாது என்பதை ஏற்றுக் கொள்ளும் முதிர்ச்சி அனைவரிடமும் இருக்காது. முயற்சியற்று அமைதியாக இருக்கவும் முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு நம் பெரியவர்கள் காட்டிய வழி: கோயில்களில் விளக்கேற்று!
இதற்கு இரண்டு பொருள்கள் உள்ளன:
🔸 இறைபணியில் தன்னலமற்று ஈடுபடு
🔸 தன்னலமற்று ஊருக்காக உழை (அக்காலத்தில் கல்விச்சாலை, நீதிமன்றம், நெற்களஞ்சியம் என ஊரே திருக்கோயிலிலிருந்து இயங்கியது. எனவே, ஊருக்காக உழை என்று சொல்லாமல் கோயிலில் உழை (விளக்கேற்று) என்று சொல்லியிருக்கிறார்கள்.)
பலன் கருதி எதையும் செய்தால்தான் பின்விளைவுகள் நம்மை பாதிக்கும். பலனை எதிர்பார்க்காவிட்டால் (தன்னலமற்று பணி செய்தால்) எதுவும் நம்மை பாதிக்காது.
கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே. -- திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽♂️
விளக்கேற்றுதல் = தன்னலமற்று வாழ்தல்.
(ராகு வேளையில் கொற்றவைக்கும், தேய்பிறை எண்மையில் பைரவருக்கும் விளக்கேற்றுவது என்பது மேற்கண்ட தன்னலமற்ற பணிகள் கணக்கில் வராது. முனைப்பற்று இருப்போருக்கும், ஆணவம், தற்பெருமை, அச்சம் போன்ற குணங்கள் மிகுதியாக உள்ளவர்களுக்கானவை.)
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮