Sunday, September 6, 2020

ஆடி மாதம் அம்மனுக்கான மாதமாகியதற்கான காரணங்கள்

ஆடி மாதத்தில், சிவபெருமானின் ஆற்றலைவிட, உமையன்னையின் ஆற்றல் சிறந்திருக்குமாம்!! 😂

மேலும், இம்மாதத்தில், பெருமான் அன்னைக்குள் அடங்கிவிடுவதாக தொன்நம்பிக்கையாம்!!! 🤣

மெக்காலே/பகுத்தறிவுக் கல்வி படுத்தும் பாடு இருக்கிறதே...

எல்லாத்துறைகளிலும் பணியாளர்களின் தரம் குறைந்து கொண்டே போகும் போது இத்துறை மட்டும் விதிவிலக்காகுமா?

oOOo

ஆடி மாதத்தில் பெண்தெய்வங்களைப் போற்றுவதற்கான காரணங்கள்:

🌷 மாதங்களின் வரிசையில் ஆடி மாதம் நான்காவதாகும். சோதிடத்தில் நான்காமிடம் அன்னை மற்றும் நிலம் & வீடு போன்ற அசையா சொத்துக்களைக் குறிக்கும் (இன்னும் பலவற்றையும் குறிக்கும்). நிலத்தைப் பெண்ணாக, பெண்தெய்வமாக கருதுவது மரபு. எனவே, இம்மாதத்தில் பெண்தெய்வங்களைப் போற்றியுள்ளனர்.

🌷 "ஆடிப்பட்டம் தேடி விதை" என்ற பழமொழி இம்மாதத்திற்கும் உழவுக்கும் இருக்கும் தொடர்பைக் காட்டும். அக்காலத்தில், உழவுப் பணிகளைத் தொடங்கும் முன் ஊர் காவல்தெய்வங்களுக்கு, குறிப்பாக மாரியம்மன் போன்ற பெண்தெய்வங்களுக்கு, விழா எடுத்துவிட்டுப் பணிகளைத் தொடங்கியிருக்கலாம். (மாரியம்மன் - மாரி + அம்மன். மாரி = மழை. மாரியம்மன் = மழையம்மன்.)

🌷 தை மாதம் அறுவடை காலம். சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பணப்புழக்கம் இருக்கும் காலம். ஆடி மாதம் வறட்சிக்குப் பின் வரும். கையிருப்பு தீர்ந்து/குறைந்து போயிருக்கும் காலம். இதனால், மக்கள் மனதில் பயம், கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகள் அதிகரிக்கும். இந்த விளைவுகளைத் தடுக்கவும், இருக்கும் கையிருப்பைச் சுற்றி வர வைக்கவும் இம்மாதத்தை திருவிழா மாதமாக மாற்றியுள்ளனர்.

வயிறு பசித்துக்கொண்டிருக்கும் போது மெய்யறிவைப் பற்றி எடுத்துக்கூறமுடியாது. எனவேதான் அன்னையைப் போற்ற வைத்துள்ளனர் (சிவம் - உயிர், அன்னை - உடல்/பொருள்).

🌷 இம்மாதத்தில் கணவனும் மனைவியும் இணைந்தால் அடுத்து வரும் கோடை காலத்தில் மகப்பேறு அமைய வாய்ப்புள்ளது. இது எல்லோருக்கும் தொல்லையாக அமையும். அவர்களை இணையவிடாமல் தடுத்து, மனதை இறைவழிபாட்டின் பக்கம் திருப்பிவிடவும் இந்த திருவிழாக்களைப் பயன்படுத்துகின்றனர்.

oOOo

உள்ளபொருள் (பரம்பொருள் / மெய்பொருள்) என்பது ஒன்று தான். இதுவே அனைத்துமாகியிருக்கிறது. இறைநம்பிக்கை இவ்வாறு இருந்த வரை எந்த சச்சரவும் இருந்திருக்காது. பின்னர், பல படையெடுப்புகளால் நம்மவர்களின் தரம் குறையத் தொடங்கியது. பிரிவுகளின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது.

🌷 சிவம் என்பது திரைக்கு சமம். அன்னை என்பது அத்திரையில் தோன்றும் காட்சிகளுக்கு சமம்.

🌷 சிவம் என்பது நீருக்கு சமம். அன்னை என்பது அந்நீரில் தோன்றும் காட்சிகளுக்கு சமம்.

🌷 சிவம் - அசைவற்றது. அன்னை - அசைவது.

சிவத்தின் ஆற்றலாக அன்னையைக் காணவேண்டுமே தவிர "சிவத்தின் ஆற்றலைவிட அன்னையின் ஆற்றல் சிறந்திருக்கும்" என்பதெல்லாம் பொருந்தாது. இது போன்றே, சிவத்திற்குள் தான் அன்னையே அன்றி அன்னைக்குள் சிவம் என்பதும் பொருந்தாது.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment