Wednesday, October 5, 2016

வீரத்துறவி சுப்ரமணிய சிவா பிறந்தநாள் - அக்டோபர் 4

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பாலகங்காதர திலகர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மூவர் மறக்கமுடியாத தியாகசீலர்களாவர். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்பட காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. மற்ற இருவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை மற்றும் எட்டயபுரம் தந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோராவர்.

இவர் பிறந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு. இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள். இவருக்கு இரு சகோதரிகள் அவர்கள் ஞானாம்பாள், தைலாம்பாள். ஒரு சகோதரரி வைத்தியநாதன் என்று பெயர். இவர் கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் படித்தார். தூத்துக்குடியில் போலீஸ் ஆபீசில் அட்டெண்டராக வேலை பார்த்தார். வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார். வறுமைக்கு ஆட்பட்டு திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உண்டு வசித்தார். அங்கிருக்கும் நாளில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. தன் உள்ளத்தில் ஏற்பட்ட தேசபக்தியை இவர் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். 1906-ல் கர்சன் வங்கத்தை மதரீதியில் இரண்டாகப் பிளந்தான். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் 'வந்தேமாதரம்' எனும் சுதந்திர கோஷம் எழுந்தது. அப்போது தூத்துக்குடியில் வக்கீல் ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கினார். சிதம்பரம் எனும் காந்தம் சிவா எனும் இரும்பைத் தன்வசம் இழுத்துக் கொண்டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் 'சுதேச கீதங்களால்' பாரதியார் தூண்டிவிட்டார்.

சிதம்பரம் பிள்ளை பேசும் கூட்டங்களில் எல்லாம் இவரும் வீரவுரையாற்றினார். அவர் பேச்சில் அனல் வீசியது. அந்த சமயம் சென்னை கடற்கரையில் தேசபக்தர் விபின் சந்திரபால் வந்து தொடர்ந்து சொற்பொழிவாற்றினார். தெற்கில் இம்மூவரின் மேடைப்பேச்சு, சென்னையில் பாலரின் சொற்பொழிவு இவை சேர்ந்து சுதந்திர நாதம் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது. 1907-ல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு காங்கிரசில் திலகரின் கை ஓங்கியது. அப்போது தூத்துக்குடியில் சிவா தொடர்ந்து மேடைகளில் சுதந்திரம் கேட்டு முழங்கினார். அதோடு தூத்துக்குடி கோரல் மில் வேலை நிறுத்தம் வெற்றி பெறவும் பாடுபட்டார். தொழிலாளர் பிரச்சினையிலும் இவர் கவனம் சென்றது.

தெற்கே சுதந்திரக் கனல் பரவி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள், வ.உ.சி.,  சிவா உட்பட பலர் மீது வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் வ.உ.சி. தீவாந்தர தண்டனை பெற்றதும், அப்பீலில் அது குறைக்கப்பட்டதும் நமக்குத் தெரியும். சிவா சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் முதலில் ஆறாண்டு காலம் சிறை தண்டனை பெற்று ஜுலை 1908 முதல் நவம்பர் 1912 வரை சிறையிலிருந்தார். இவருடைய சிறை வாழ்க்கையில் இவர் அனுபவித்தத் துன்பம் சொல்லத் தரமன்று. சிறை இவருக்கு அளித்த சீதனம் பார்த்தவர் அஞ்சும் தொழுநோய் *(உள்ளத்தில் நல்ல உள்ளம் கொண்ட பரங்கி தாசிமகன்களால் அவருக்கு கொடுக்கப்பட்ட வியாதி இது. 😡 எப்படி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கொடுக்க முடியும் என்பதை நீங்களே இணையத்தில் தேடித் தெரிந்துகொள்ளவும்)*. இதனை அவர் "கொடியதோர் வியாதி கொல்லுது என்னை" என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். 1912-ல் இவர் சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். சென்னையில் இவர் இருந்த நாட்களில் இவர் தன்னுடன் ஒரு தொண்டரை அழைத்துக் கொண்டு ஒரு மேஜை, நாற்காலி இவற்றையும் அத்தோடு ஒரு பெட் ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்வார். அங்கு மக்கள் கூடும் ஒரு நல்ல இடத்தில் மேஜையைப் போட்டு அதன் மீது ஏறி நின்று உரத்த குரலில் மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடுவாராம். அப்போது அங்கு கூடும் கூட்டத்தில் இவர் சுதந்திரப் பிரச்சார்ம் செய்வாராம். இப்படித் தன்னலம் கருதாத தேசபக்தனாக இவர் கடமையே கருத்தாக இருந்தார். 

இரண்டாம் முறையாக இவர் இரண்டரை வருடங்கள் நவம்பர் 1921 முதல் சிறையில் இருந்தார். இவர் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர், நல்ல பத்திரிகை ஆசிரியர். "ஞானபானு" எனும் பெயரில் இவர் ஓர் பத்திரிகை நடத்தினார். மகாகவி பாரதியும், வ.வெ.சு.ஐயரும் இந்த பத்திரிகையில் எழுதி வந்தார்கள். அதன் பின்னர் "பிரபஞ்சமித்திரன்" எனும் பெயரிலும் இவர் ஒரு பத்திரிகை நடத்தினார். இரண்டாம் முறை இரண்டரை ஆண்டுகள் சிறை சென்று விடுதலையானபின் தொழுநோயின் கடுமை அதிகமாக இருந்ததாலும் இவர் மிகவும் வருந்தினார். சேலம் மாவட்டத்தில் அப்போது இருந்த #பாப்பாரப்பட்டி எனும் கிராமத்தில் பாரதமாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப இவர் பெரிதும் முயன்றார். அதற்காக சித்தரஞ்சன் தாசை கல்கத்தாவிலிருந்து அழைத்து வந்து 1923-ல் அடிக்கல்லும் நாட்டினார். 

மறுபடியும் சிவா மூன்றாம் முறை சிறை செல்ல நேர்ந்தது. இது ஒரு ஆண்டு சிறைவாசம். அது குறித்து இவர் ஒரு வழக்கு தொடர்ந்து அதிலிருந்து விடுதலையானார். இவர் மகாத்மா காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. தீவிரவாதமே இவரது எண்ணம். இவர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டதனால் இவரை அன்றைய பிரிட்டிஷ் அரசு ரயிலில் பயணம் செய்ய தடை செய்திருந்தது. எனவே இவர் மதுரையிலிருந்து தன் உடல் உபாதையையும் பொருட்படுத்தாமல் பாப்பாரப்பட்டிக்கு வந்துவிட வேண்டுமென்று கால்நடையாகவே வந்து சேர்ந்தார். இவருக்கு வயது அதிகம் ஆகவில்லையாயினும், தொல்லை தரும் கொடிய வியாதி, ஆங்கில அரசின் கெடுபிடி, கால்நடைப் பயணம் இவற்றால் ஓய்ந்து போனார்.

இவர் யாருக்காகப் போராடினாரோ அந்த மக்களும் சரி, சுதந்திரத்துக்காக முன்நின்று போராடிய காங்கிரசும் சரி, இவர் காந்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இவரை ஒதுக்கின. மனம் உடைந்த சிவா 23-7-1925-ல் இவ்வுலக வாழ்க்கையை நீத்து அமரரானார். 💐😑 காந்தி-நேரு மாயையினால் மறைக்கப்பட்ட பலருல் இவரும் ஒருவர்.

வாழ்க தீரர் சுப்பிரமணிய சிவாவின் புகழ்! 🚩🚩

(மூலம்: http://tamilnaduthyagigal.blogspot.com/2010/06/blog-post_25.html?m=1)

(மேலும் அறிய: http://tamilnation.co/hundredtamils/subramaniamsiva.htm)

No comments:

Post a Comment