Showing posts with label மகாலட்சுமி. Show all posts
Showing posts with label மகாலட்சுமி. Show all posts

Thursday, August 26, 2021

நிருவாண பூசை என்றால் என்ன?

"நிருவாண பூசை நடத்தி இளம்பெண்ணை பலமுறை சீரழித்த சாமியார்! உடந்தையாக இருந்த கணவன்!!"

இந்நிகழ்வின் பின்னணியில் கணவனின் அறியாமை, இயலாமை & பொருளாசை மற்றும் சீரழித்தவனின் பெண்ணாசை & பொருளாசை ஆகிய காரணிகள் இருந்தாலும் இதற்கும் ஒரு மெய்யறிவியல் (ஆன்மிகம்) அடிப்படை உண்டு!

நிருவாணம் எனில் உடைகளைக் களைந்துவிட்டு பிறந்தமேனியாதல் அல்ல. "நான் இன்னார்" என்பதிலுள்ள இன்னாரைக் களைதலாகும். நான் ஆண்/பெண், இன்ன படித்தவன், இன்ன நிறுவனத்தில் இன்ன பதவி வகிக்கிறேன், எனது மதிப்பு இவ்வளவு ... இவற்றையெல்லாம் களைய வேண்டும்.

🔹இவற்றைக் களைய முற்படும் பணி தான் நிருவாண பூசை.

🔹அனைத்தையும் களைந்த பின்னர், மீதமிருக்கும் நான் எனும் தன்மையுணர்வாய் மட்டும் இருப்பதுதான் நிருவாண நிலை.

🔹இந்நிலையை அடைவதற்கு முன் (மேற்சொன்ன பூசையின் போது) நமக்கு கிடைக்கும் பலவிதமான துய்ப்புகள்தாம் செல்வம் (லட்சுமி) எனப்படும். இறுதியாக கிடைக்கும் மெய்யறிவு பெருஞ்செல்வமாகும் (மகாலட்சுமி).

பற்றுகளை விட விட மெய்யறிவு பெருகும். பெண்தெய்வ வழிபாட்டைப் பொறுத்தவரை சீவர்கள் அனைவருமே பெண்கள்தாம். எனவே, பெண்கள் (சீவர்கள்) நிருவாண பூசை செய்தால் (பற்றுகளை விட்டால்) செல்வம் (மெய்யறிவு) பெருகும்!!

முழுவதும் மெய்யறிவியலை அடிப்படையாகக் கொண்ட ஓர் உத்தியை எவ்வளவு தவறாக புரிந்து கொள்ள முடியுமோ அவ்வளவு தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அல்லது, எவ்வளவு தப்பாக பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தப்பாக பயன்படுத்துகின்றனர். என்ன செய்வது, ஈனவெங்காயங்கள் எல்லாத்துறைகளிலும் பிறக்கத்தானே செய்கின்றன! (ஈனவெங்காயம் - கோணல் புத்தியுடையவன்; சாக்கடை 👊🏽)

நாம் பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். இங்கு ஈனவெங்காயங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிறக்கின்றன. மறைந்து தொழில் செய்கின்றன. ஆனால், ஒரு மதமே இப்படியுள்ளது! அங்கு இந்த அநீதியை செய்பவர்கள் துணிவுடன், வெளிப்படையாக, நீதிமன்றங்களின் ஆதரவுடன் செய்கிறார்கள்!!

oOOo

ஒரு பெண்ணைக் கற்பழித்துவிட்டு, அவளது அழகுதான் தன்னை கற்பழிக்கத் தூண்டியது என அவள் மீதே பழியை போடுவான். புண்ணாக்கு நீதிபதியும் இந்த வாதத்தை ஏற்று, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனையளிப்பான்!

இதற்கும் அடிப்படை மெய்யறிவியல்தான்!!

உலகில் நடக்கும் யாவற்றிற்கும் காரணம் மனம். மனதை பெண்ணாகக் கருதுவது மரபு (நம் சமயத்தில், அன்னை மாயை/காளி) (வைணவம் மாயக்கண்ணன் என்றழைத்தாலும் அடிப்படை பெண்தன்மைதான்.) அழகாகவிருக்கும் ஒரு பெண்ணைத் துய்க்கவேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பது மனம் (பெண்) என்பதால் தனது செயலுக்கு பெண்தான் காரணம் என்று வாதிடுவான். உண்மையில் இவனுக்குள்ளிருக்கும் பெண்தான் (இவனது மனம்) தண்டிக்கப்படவேண்டும். மனம் சொன்னால் அப்படியே கேட்டுவிடுவதா? சீர்தூக்கிப் பார்த்து செயல்பட வேண்டிய புத்தி எங்கே போயிற்று?

கேட்டால், பெண் என்ற படைப்பே புணருவதற்குத்தான் என்பான். பெண்ணைக் கண்டதும் புணரும் எண்ணம் தோன்ற வேண்டும் என்பதற்காகத்தான் அவளுக்கு கருப்பு ஆடை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பான் (அம்மதத்தில், கருப்பு ஆடை போர்த்திக்கொண்டிருக்கும் பெண் பெண்குறிக்கு சமம்).

கருப்பு ஆடை போர்த்தியிருக்கும் பெண்ணைக் கண்டால் புணரும் எண்ணம் தோன்றவேண்டுமென்று ஈனவெங்காயம் கூட சொல்லியிருக்காது. எனில், உண்மையான பொருள்தான் என்ன?

கருப்பு என்பது அன்னை மாயையைக் குறிக்கும் (கருப்பாயி - கருப்பு + ஆயி - காளி). நம் மனதில் தோன்றும் எண்ணம் முதல் நம் கண் முன்னே விரியும் உலகக்காட்சிகள் யாவற்றுக்கும் இவர் தான் காரணம். நம் மனதில் ஓர் எண்ணம் தோன்றிவிட்டால் அதன் பின்னே சென்றுவிடக்கூடாது. நம் கண் முன்னே தோன்றும் உலகக் காட்சிகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது. இவை நடந்தால், உடனடியாக, நமது கவனத்தை நம் மீதே திருப்பிக்கொள்ளவேண்டும். இதற்குத்தான் ஓர்தல் / [தன்னைத்தான்] புணருதல் என்று பெயர்.

கருப்பைக் கண்டால் (எண்ணம் தோன்றினால், உலகத்திற்குள் கவனம் சென்றால்) ஓர்ந்துவிடவேண்டும் (கவனத்தை நம் மீது திருப்பவேண்டும்)!!

எளிமையான இவ்வறிவுரை தாெடக்கத்தில் கண்ட நிருவாண பூசையை விட மிகவும் திரிந்துபோய் / திரிக்கப்பட்டு பெண்ணடிமைத்தனத்தில் முடிந்துள்ளது. 😔

oOOo

இருப்பது ஒரு பொருள்தான். அதுவே யாவுமாகியுள்ளது. நிலைத்த பொருளும் அதுவே. நிலையில்லாத பொருளும் அதுவே. எப்போது ஒன்றை ஆண் என்றும், மற்றொன்றைப் பெண் என்றும் அழைக்கத் தொடங்கினார்களோ அப்போதே ஈனவெங்காயங்களுக்கும், காட்டுமிராண்டிகளுக்கும் வித்திட்டுவிட்டனர்! 😔

oOOo

நம் மண்ணும், நம் மண்ணின் மைந்தர்களும் எவ்வளவு தூரம் பண்பட்டவர்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு:

உலகக்காட்சி பற்றி பகவான் திரு ரமண மாமுனிவரிடம் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஓர் அன்பர் கேட்டார்: உலகக் காட்சி என்பது எதற்காக?

பகவானின் பதில்: [அதைக்] காண்பான் என்றொருவன் இருப்பதை உணருவதற்காக!!

👏🏽👏🏽👏🏽👌🏽🙏🏽😍

oOOo

தன்னை உபாதிவிட்டு ஓர்வது தான் ஈசன்
தன்னை உணர்வதாம் உந்தீபற
தானாய் ஒளிர்வதால் உந்தீபற

-- உபதேச உந்தியார் #25

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, August 30, 2020

"பசுவின் பின்புறத்தில் மலர்மகள் வசிக்கிறார்" என்பதின் பொருள்...

"பசுவின் பின்புறத்தில் மலர்மகள் வசிக்கிறார்" என்பதின் பொருள்:

🔸பசுவின் பின்புறம் சாணம் வெளிவரும்
🔸 இந்த சாணத்தை மக்க வைத்து நிலத்திற்கு உரமாக இட்டால் விளைச்சல் பெருகும்
🔸 விளைச்சல் பெருகினால் வருமானம் - செல்வம் - பெருகும்
🔸 செல்வம் என்பது மலர்மகள்
🔸 பின்னே சென்றால்: மலர்மகள் <- செல்வம் <- விளைச்சல் <- சாண உரம் <- பசுமாடு

எனவே, பசுமாட்டின் பின் பகுதி மலர்மகள் வசிக்குமிடம் என்றார்கள்!!

oOOo

"மலர்மகள் இப்பிறவியில் செல்வவளமும், பிறவி முடிந்த பின் விடுதலையும் தருபவர்" என்பதின் பொருள்:

முதலில், மலர்மகளின் தோற்றத்தைப் பார்ப்போம். பாற்கடலைக் கடையும் போது இறுதியாக வெளிவந்தவர் மலர்மகள் என்று படித்திருப்போம்.

🔸 பாற்கடல் - நமது உடல்
🔸 கடைதல் - கடும் வடக்கிருப்பு

வடக்கிருப்பின் தொடக்கத்தில் பல குப்பைகள் நம்முள்ளிருந்து வெளிவரும். சில புதிய ஆற்றல்கள் கூட நமக்கு கிடைக்கும். இவையனைத்தும் மூத்தவள் - மூத்தாயி - மூதேவி (ஆரியத்தில், ஜேஷ்டாதேவி) எனப்படும். இவற்றை ஒதுக்கி, மேலும் தொடர்ந்தால், இறுதியில் மெய்யறிவு கிடைக்கும். இம்மெய்யறிவே இளையவள் - சின்னாயி - நப்பின்னை (பின்னே வந்தவர் - நல்ல பின்னை) - மலர்மகள் (ஆரியத்தில், ஸ்ரீதேவி) - செல்வமகள் (ஆரியத்தில், லட்சுமி) எனப்படும்.

இந்த மெய்யறிவை விடாப்பிடியாக இறுகப் பற்றிக்கொண்டால் நிலைபேற்றில் முடியும். இடையில் படைப்பின் பல புதிர்கள் திறக்கப்படலாம். இவற்றைத்தான் "இப்பிறவியில் செல்வவளமும்" என்ற சொற்றொடர் குறிக்கிறது.

மெய்யறிவில் நிலைபெற்ற ஒருவர் பிறவிகளைப் பற்றி சிந்திக்கப்போவதில்லை. அவர் ஏற்கனவே விடுதலை அடைந்தவர் தான். இருந்தாலும், தற்போதைய பிறவி முடிந்த பின், இறுதித் தளையான உடலும் விலகுவதையே விடுதலை (ஆரியத்தில், மோட்சம்) என்றழைக்கின்றனர். இறப்பின் போது எல்லோருக்கும் தான் உடல் விலகுகிறது. மெய்யறிவில் நிலை பெறாதவர் அடுத்த பிறவியில் சிக்கிக் கொள்கிறார். நிலைபெற்றவர் விடுதலையடைகிறார். இதனால் தான் மெய்யறிவை (மலர்மகளை) "பிறவி முடிந்த பின் விடுதலையும் தருபவர்" என்று போற்றுகின்றனர்.

இறுதியாக, மெய்யறிவு என்றால் என்ன? நம்மைப் பற்றிய அறிவு. நாமே உள்ளபொருள் என்ற அறிவு. இதுவரை நாம் தேடியது நம்மையே என்ற அறிவு.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮