Showing posts with label நட்சத்திரம். Show all posts
Showing posts with label நட்சத்திரம். Show all posts

Monday, May 22, 2023

வாரம், திதி, நட்சத்திரம், யோகம் & கரணம் சொல்வதின் உட்பொருள்


🔸 வாரம் சொன்னால் வாழ்நாள் வளரும்
🔸 திதி சொன்னால் செல்வம் பெருகும்
🔸 நட்சத்திரம் சொன்னால் தீவினை போகும்
🔸 யோகம் சொன்னால் நோய் நீங்கும்
🔸 கரணம் சொன்னால் நினைத்தது நடக்கும்

சோதிடர்கள் மட்டுமல்லாது, பஞ்சாங்கம் புரட்டும் பழக்கமுள்ளவர்களும் அறிந்திருக்கும் இந்த வரிகளின் உட்பொருளை சற்று பார்ப்போம்.

🔸 வாரம் - வாழ்நாள்

வாரம் என்பது 7 நாட்களை குறிக்கும். 7 என்பது எலும்பு, தசை முதலான 7 பொருட்களை குறிக்கும். இந்த 7 பொருட்கள் நமதுடலை குறிக்கும்!

உடலை பேணினால் நோய் நொடி
இல்லாமல், நீண்ட நாட்கள் வாழலாம்!!

🔸 திதி - செல்வம்

திதி என்பது பகலவனுக்கும், நிலவுக்கும் இடையேயான இடைவெளியாகும்.

> பகலவன் - உள்ளபொருள் / பரம்பொருள்
> நிலவு - மனம்
> செல்வம் - மெய்யறிவு (ஆரியத்தில், ஞானம்)

மனதை எவ்வளவுதூரம் உள்ளபொருளுக்கு அருகில் கொண்டு செல்கிறோமோ, அவ்வளவு தூரம் நமது மெய்யறிவு பெருகும்.

(விளக்குவதற்காக இப்படி எழுதியிருக்கிறேன். உண்மையில், உள்ளபொருளை விட்டு எக்கணமும் விலகமுடியாது. நீரிலிருக்கும் மின் நீரைவிட்டு விலகமுடியுமா? அல்லது, நீருக்கு அருகில் செல்லமுடியுமா?)

🔸 நட்சத்திரம் - தீவினை

விண்மீன் (ஆரியத்தில், நட்சத்திரம்) தன்னொளி கொண்டதாகும். இதற்கு சமமாக நம்மிடமிருப்பது நமது தன்மையுணர்வாகும். நாம் இருக்கிறோம் என்பதை உணர இன்னொருவரின் / இன்னொன்றின் உதவி தேவையில்லை. இந்த நான் என்ற தன்மையுணர்வைப் பற்றி தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், நமது தீவினைகள் குறைந்து கொண்டே வரும். இறுதியில், நிலைபேறு / வீடுபேறு கிட்டும்.

நமது தன்மையுணர்வின் இன்னொரு பெயர் - உள்ளபொருள்!

🔸 யோகம் - நோய்

யோகம் எனில் இணைப்பு / இணைவது ஆகும்.

> தன்மையுணர்வு - உள்ளபொருள்
> மனம் - சீவன்
> "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம் - நோய்

மனதை தன்மையுணர்வில் தொடர்ந்து பொருத்திக் கொண்டிருந்தால், உடலல்லாத நம்மை உடலாக கருதும் நோயின் தாக்கம் குறைந்து கொண்டேவந்து, இறுதியில் நீங்கிவிடும்.

🔸 கரணம் - நினைத்தது நடக்கும்

கரணம் என்பது ஐம்பொறிகளையும் குறிக்கும்; அந்தக்கரணம் என்று ஆரியத்தில் அழைக்கப்படும் மனதையும் குறிக்கும். மனமென்றால் என்னவென்று தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், ஒரு சமயத்தில், மனம் அழிந்துபோய் நாம் நாமாக இருப்போம். இதன் பிறகே, "இவ்வளவு காலமும், நம் முன்னே நடந்த யாவும், முற்பிறவிகளில் நாம் நினைத்தவையே (விரும்பியவை / வெறுத்தவை)" என்பதை உணருவோம்!

சோதிடம் என்பதே ஒளியை பற்றிய ஆராய்ச்சிதான்! நம் கண் முன்னே விரியும் உலகம், ஏன் இவ்வாறு விரிகிறது என்று நம் முன்னோர் சிந்தித்ததின் விளைவே சோதிடமாகும்!!

oOo

இப்போது ஒரு கேள்வியெழலாம்: இந்த விளக்கமெல்லாம் சரி. மெய்யியலை கொண்டுபோய் சோதிடத்திற்குள் ஏன் நுழைத்தார்கள்?

சோதிடத்திலுள்ள ஒவ்வொரு சொல்லிற்கு பின்னும் நீண்ட வரலாறு இருக்கிறது. கணக்கிலடங்காத பல பெரியவர்களின் பன்நெடுங்கால உழைப்பே இன்றைய சோதிடத்தின் அடித்தளமாகும். MB, GB, TB, ZB என்று எவ்வளவு பெரிய தரவாக இருந்தாலும், இன்று பாதுகாப்பாக, பல வகைகளில், பல இடங்களில் சேமித்து வைக்கமுடியும். அன்று இத்தகைய சூழ்நிலையில்லை. எனவே, நம் முன்னோர்கள் மனிதர்களை சேமிப்பகமாக பயன்படுத்தியுள்ளனர்!

"அடேய், மனிதா, எதிர்கால தலைமுறையினருக்காக, இதை நினைவில் வைத்திரு" என்றால் யார் நினைவில் வைத்திருப்பார்கள்? 😏 எனவே, இதை சொன்னால் வாழ்நாள் வளரும், அதை சொன்னால் செல்வம் பெருகும் என்று கதைவிட்டுள்ளனர்! 😃

கனிந்த மரம் கல்லடி படும் என்ற பழமொழிக்கேற்ப, அழியாச் செல்வமும், அழியும் செல்வமும் நிறைந்திருந்த நம் பாரதம் கண்ட படையெடுப்புகள் எண்ணிலடங்காது. இவற்றுடன், அவ்வப்போது ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் வேறு! (முதலாம் நரசிம்ம பல்லவரின் காலத்தில், 12 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மழை பொய்த்துள்ளது!!) இப்படிப்பட்ட சூழ்நிலையில், "பெரியவர்கள் கண்டெடுத்த விலைமதிப்பில்லா முத்துகளை எவ்வாறு பாதுகாப்பது?" என்று நம் முன்னோர்கள் சிந்தத்தின் விளைவே "மக்களை சேமிப்பகமாக பயன்படுத்தலாம்" என்ற நுட்பம்!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼