Showing posts with label சத்திமுற்றம். Show all posts
Showing posts with label சத்திமுற்றம். Show all posts

Thursday, August 13, 2020

திருச்சத்திமுற்றம் - பெயர் விளக்கம்

(தினமலர் - ஆன்மீக மலர் - 17/07/2020)

#திருச்சத்திமுற்றம் என்ற தேவாரப்பாடல் பெற்ற திருத்தலத்தில், அன்பின் காரணமாக உமையன்னை பெருமானுக்கு முத்தம் கொடுத்தாராம்! இதனால் இத்தலம் "சக்தி முத்தம்" என்று அழைக்கப்பட்டதாம்!! பின்னர், மருவி, சத்திமுற்றம் என்றாயிற்றாம்!!! 😝

மெக்காலே கல்வியும் பகுத்தறிவும் அவற்றின் உச்சநிலையை அடைந்து விட்டதற்கு இந்த பெயர் விளக்கத்தை விட சிறந்த சான்று இருக்கமுடியாது. 😁

தில்லைக் கூத்தப்பெருமான் 🌺🙏🏽 ஆடும் மேடை எதைக் குறிக்கிறதோ, எந்த அரங்கத்திற்கு திருவரங்கம் பெருமாள் 🌺🙏🏽 நாதராக இருக்கிறாரோ அதையே தான் சக்தி முற்றமும் குறிக்கிறது. நாம் வாழும் அண்டமே அது!!

இப்போது நாம் அண்டத்திற்குள் இருப்பதாக உணர்கிறோம். ஆனால், இது உண்மையல்ல. அனைத்தும் நம்முள் இருக்கின்றன. சமாதியில் இதை உணர்வோம். எல்லாம் நமக்குள் நடப்பதைப் பார்ப்போம். இதை திரையில் தோன்றும் காட்சிகளாக, நீரில் தோன்றும் குமிழிகளாக, மேடையில்/அரங்கத்தில் அரங்கேறும் நடனமாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள் நம் பெருமான்கள். திருச்சத்திமுற்றத்தில் சமாதியாகியிருக்கும் பெருமானோ அல்லது அவருக்குப் பின் தோன்றிய பெரியவர்களோ, ஒரு பெரிய வீட்டின் முற்றத்தில் நடைபெறும் விழாவாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

#சத்திமுற்றம் = சக்தி முற்றம் = நாம் வாழும் அண்டம்

oOOo

பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப
மத்தார் தயிர்போன் மறுகுமென் சிந்தை மறுக்கொழிவி
அத்தா வடியே னடைக்கலங் கண்டா யமரர்கடம்
சித்தா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே

-- அப்பர் 🌺🙏🏽 தேவாரம் 4.96.3

பொழிப்புரை: மெய்யறிவில் நிலைபெற்றவர் உள்ளத்தில் இருப்பவராய் உள்ள திருச்சத்திமுற்றச் சிவக்கொழுந்துப் பெருமானே! 🌺🙏🏽 பல துளைகள் உள்ள கூடாகிய இவ்வுடம்பில் புகுந்து ஐம்பொறிகளும் நாள்தோறும் அடியேனுக்குப் பற்றுக்கோடான உன் திருவடிப்பற்றினை அழிக்க, மத்தால் குழப்பப்படும் தயிர்போலச் சுழலும் என் சிந்தையின் கலக்கத்தை ஒழியச் செய்வாயாக. தலைவனே! அடியேன் உன் அடைக்கலம் என்பதனை நோக்குக.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮