Showing posts with label ஆமை திருவிறக்கம். Show all posts
Showing posts with label ஆமை திருவிறக்கம். Show all posts

Thursday, May 21, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #24 - நீலகண்டன், தியாகராஜர், தாராதேவி - சிறு விளக்கம்



ஓலம்இடும் தேவர்குழாம் உய்யத் திருமிடற்றில் 
ஆலவிடம் தன்னை அடக்குமலை - நாலுமறை 
அந்தமலை நாயேனை ஆளக் குருவாகி 
வந்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #24

🔸நாலுமறை அந்தமலை - நான்கு மறைநூல்கள் முழுவதிலும் பலவிதமாக போற்றிப் பாதுகாக்கப்படும் பொருள் அந்த  சிவப்பரம்பொருளே.

🔸ஓலமிடும் ... அடக்குமலை - ஆமை திருவிறக்கக் (கூர்ம அவதாரக்) கதையில் வரும் நிகழ்வு. (இதை விளக்குவதற்கு தனி நூலே வேண்டும்! முதன் முதலில் படிப்பவர்களால் சிறிதும் நம்பமுடியாது!! கோபம் & வெறுப்பு கூடத் தோன்றலாம்!!!)

🔹ஆமை - புலனடக்கம்
🔹மந்தார மலை - மெய்யாசிரியர் காட்டிய வழி/உத்தி
🔹வாசுகி பாம்பு - நமது மூச்சுக்காற்று
🔹உள்ளே செல்லும் உயிர்வளி - தேவர்கள்
🔹வெளிவரும் கரியமிலம் - அசுரர்கள்
🔹கடையப்படும் கடல் - நமது உடல் 
🔹ஆலகால விடம் - நிர்விகற்ப சமாதி
🔹அன்னை பார்வதி - சமாதியிலிருந்து வெளிவரச் செய்யும் ஆற்றல்
🔹அன்னை தாரா - சமாதி துய்ப்பைத் திரும்ப திரும்ப நினைவு கூறச் செய்யும் ஆற்றல்

புலனடக்கத்துடன் ஆன்ம பயிற்சியில் ஈடுபடும் போது, அவரவர் முன்வினைப்படி, பல சித்திகள் முதலில் கைகூடும். இவையெல்லாம் வெறும் விடம் தான். தொடர்ந்து முன்னேறினால் நிர்விகற்ப சமாதி கைகூடும். இதுவே ஆலகாலம் எனப்படும் கொடிய விடமாகும்!! 

(தாகத்திற்காக தண்ணீர் கேட்டுவிட்டு, பல ஆண்டுகள் நிர்விகற்ப சமாதியில் இருந்து விட்டு, வெளிப்பட்டவுடன் ஒரு முனிவர் கேட்ட கேள்வி: தண்ணீர் எங்கே? ☺️ அதாவது, மனம் இறக்கவில்லை!! எனவே தான் இந்த சமாதி கொடிய விடம் எனப்பட்டது.)

நிர்விகற்ப சமாதியில் ஒருவர் (முனிவர் என்று கொள்க) இருக்கும் போது, அவரிடம் மீதமிருக்கும் பற்று ஏதேனும் ஒன்றை வைத்து, மாயை அவரை வெளியேத் தள்ள முயலும். இந்த மகாமாயையே பெருமானின் கழுத்தைப் பிடித்து, விடம் இறங்காமல் காத்த அன்னையாகிறார். மாயை முயன்றாலும், முனிவர் விரும்பினால் மட்டுமே வெளிவருவார். "சரி, விட்டுத்தான் கொடுப்போமே. இந்த பற்றையும் முடித்து விட்டு திரும்பவோமே." என்று விட்டுக் கொடுப்பார். உலக வாழ்க்கைக்கு திரும்புவார். "உலகம் காப்பாற்றப்பட்டது" என்பது இதுவே.

தனது பேரின்ப நிலையை விட்டுக் கொடுத்ததால் முனிவர் தியாகராஜர் ஆகிறார். ஆனால், இந்த துய்ப்பு அவரை விட்டகலாது. அதே சமயம், அவரது உடலின் இயக்கத்தைப் (உலக வாழ்க்கையை) பாதிக்காது. எனவேதான் விடம் கழுத்துடனே நின்றது என்றார்கள். இந்நிலையில் அவர் நீலகண்டன் எனப்படுகிறார். உலக வாழ்க்கைக்குத் திரும்பிய பிறகும் தனக்கு கிடைத்த துய்ப்பை அடிக்கடி நினைவில் கொள்வார். இந்த செயலை செய்யத் தூண்டும் ஆற்றலே அன்னை தாரா எனப்படுகிறார். 

பகவான் திரு ரமணரும் 🌺🙏🏽 திரும்ப திரும்பக் கூறும் அறிவுரைகளில் ஒன்று: உன் சொரூபத்தை நினைவில் கொள்!! 

பேயாரும் 🌺🙏🏽 இறைவனிடம் வைக்கும் இறுதி வேண்டுகோள்: உன்னை என்றும் மறவாதிருக்க வேண்டும்!!

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

Monday, September 30, 2019

🐢 ஆமை திருவிறக்கம் (கூர்ம அவதாரம்)



(ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் - ஐப்பசி 2019)

இது போன்றக் கதைகளில் ஒன்று, மெய்யறிவு கிடைக்கும் போது நடக்கும் நிகழ்வுகள் அல்லது மெய்யறிவுப் பெற செய்ய வேண்டிய பயிற்சி பற்றி பதிவு செய்திருப்பார்கள். இக்கதையில் இரண்டையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

🌸 கடல் - நம் உடல்

🏵️ கடைதல் - வடக்கிருத்தல் (தவமியற்றுதல்)

🌻 ஆமை - புலனடக்கம். இக்கதையில், முதலில் ஆமை இல்லாமல் கடைவார்கள். அப்போது மந்தார மலை புதைய ஆரம்பிக்கும். பின்னர் ஆமை வந்து மலையைத் தாங்கும். அதாவது, புலனடக்கம் இல்லாத வடக்கிருப்பு (தவம்) வீணாகிவிடும். எனவே, முதலில் புலனடக்கத்தைக் கற்றுக் கொண்டு, பின்னர் நிலைபேறு பெற வடக்கிருக்க வேண்டும்.

🌼 வாசுகி பாம்பு - நம் மூச்சு. உள்ளே போவது உயிர்வளி (தேவர்கள்). வெளியேறுவது கரியமில வளி (அசுரர்கள்).

💮 மந்தார மலை - மெய்யாசிரியரிடமிருந்து பெற்ற அறிவுரை. பகவான் திரு ரமணர் 🌺🙏🏼 அருளிய "நான் யார்?" (தன்னாட்டம்) என்ற அறிவுரை ஒரு தலை சிறந்த கடையுங்கருவியாகும்!! 👏🏽👌🏽😍

🌹 இலக்குமி தாயார் - புலனடக்கத்துடன், அந்நியங்களை நாடாமல், உறுதியுடன், விடாப்பிடியாக தன்னாட்டப் பயிற்சியை மேற்கொண்டால் (கடைந்தால்), இறுதியில், "இது வரை தேடியவனே தேடப்பட்டவனுமாகும்" என்ற தெளிவு பிறக்கும். இதுவே, மெய்யறிவு - அமிர்தம் - இளையவள் (இலக்குமி / #சின்னாயி / #நப்பின்னை) எனப்படும். இதற்கு முன்னர், அவரவர் முன்வினைகளுக்கேற்ப பல வித அறிவு வந்து சேரும். அவையெல்லாம் மீண்டும் நம்மை பிறவி சுழற்சியில் தள்ளிவிடும் என்பதால் அழுக்கு / நஞ்சு என்றும், முதலில் வெளிப்பட்டதால் மூத்தவள் (#மூதேவி / #மூத்தாயி) என்றும் அழைக்கப்படும்.

தேடியதே தேடப்பட்டதுமாகும் என்ற தெளிவு பிறந்தவுடன், தான் என்றுமே #உள்ளபொருள் (பரம்பொருள்) என்பதும் உணரப்படும். இந்த உள்ளபொருளே எங்கும் நிறைந்திருக்கும் (#பெருமாள்), யாவுமாகியிருக்கும் (#சக்தி),  அனைத்தும் தோன்றி நிலைபெற்று ஒடுங்க இடம் கொடுக்கும் (#சிவம்).

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏼

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

☀️☀️☀️☀️☀️

பார்ப்பானைப் பார்க்காமற் பார்க்கப் படுபொருளைப்
பார்ப்பதனா லென்றும் பரிதவிக்கும் - பார்ப்பரே
நுந்தம் புறமேநீர் நோக்காதே யுண்ணோக்கி
தொந்தம் மறுத்தல் சுகம்

(நுந்தம் - நும் தம் - உங்களுடைய; யுண்ணோக்கி - உள் நோக்கி - பார்ப்பவனைப் பார்த்து; தொந்தம் - துவந்தம் - இருமையுணர்வு)

-- திரு முருகனார் சுவாமிகள் 🌺🙏🏼, குருவாசகக் கோவை #186

பொருள்: பார்க்கின்ற அறிவைப் பார்க்க உள்ளே திரும்பாமல் பார்க்கப்படு பொருளையே பார்ப்பதனால் துன்பப்படும் பார்ப்பாரே (புற நோக்குடையோரே), நீங்கள் உங்களுக்கு அன்னியமானவற்றின் மேல் பார்வையைச் செலுத்தாமல், உள் நோக்கி (அகமுகமாகி) இரண்டற்று நிற்பதே சுகம்.

☀️☀️☀️☀️☀️

இந்த ஆமை திருவிறக்கக் கதையை பகவானது அறிவுரைகளைக் கொண்டு தான் விளக்கிக் கொள்ளமுடியும். வைணவத்தைக் கொண்டு விளக்க முற்பட்டால் அவென்ஜர்ஸ் எண்ட்கேம் படம் பார்த்தது போலாகிவிடும்!! 🥴