Wednesday, July 14, 2021

ஆனி மகம் (13/07/21) - திரு மணிவாசகப் பெருமானின் திருநாள்!


ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!! 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo


திருவாதவூர் - பெருமான் பிறந்த ஊர். மதுரையம்பதிக்கு அருகிலுள்ளது.


மதுரையம்பதி - இத்திருத்தலத்தில், பெருமானுக்காக, இறைவன் (திரு சுந்தரானந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️) பிட்டுக்கு மண் சுமந்தார், நரிகளை பரிகளாக்கினார்.


ஆவுடையார்கோயில் எனும் திருபெருந்துறை - பெருமான் தனது மெய்யாசிரியரை 🌺🙏🏽🙇🏽‍♂️ சந்தித்த திருத்தலம். ஆசிரியரது பார்வை பட்டதுமே "தானேத் தானாய்" சமைந்து மெய்யறிவு பெற்ற திருத்தலம்.


பெருமான் வரும் போது, ஆசிரியர் ஒரு கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார்.  அம்மரம் இருந்தவிடத்தில் இப்போது ஒரு கற்சிலையை வைத்துள்ளனர்.

(இத்திருத்தலம் ஒரு சிற்ப கலைக்களஞ்சியமாகும். அசுவினி முதலான 27 விண்மீன் கூட்டங்களின் உருவ அமைப்பை, என்றோ உள்ளுணர்வில் உணர்ந்து, இங்கே சிற்பமாக செதுக்கி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்! இங்குள்ள சிற்பங்களைப் பற்றி எழுதவேண்டுமானால் தனி நூலே எழுதவேண்டும்.)


திரு உத்திரகோசமங்கை - பெருமானது முற்பிறவி நிகழ்ந்த திருத்தலம்.  பேரரசர் இராவணன் மற்றும் மாமுனி மயனின் மகள் மண்டோதரியின் திருமணம் நிகழ்ந்த தலம். (மாமுனி மயனின் வேறு பெயர்கள் மாயாசுரன் & விஸ்வகர்மா. உலகின் முதல் அறிவியல் நூலான ஐந்திரத்தை எழுதியவர்.)


திருக்கழுக்குன்றம் - இங்குள்ள மூலவரை பெருமான் காணும் போது, திருப்பெருந்துறையில் தான் சந்தித்த தனது மெய்யாசிரியரையே மூலவராகக் கண்டார்.


திருக்கழுக்குன்றம் திருத்தலத்தில், பெருமான் வடக்கிருந்து நிருவிகற்ப சமாதித் துய்ப்பு பெற்றவிடம். இன்றும் நல்ல முறையில்  பாதுகாக்கப்பட்டுவருகிறது.


திருவண்ணாமலை - அடி அண்ணாமலை திருத்தலத்திற்கு அருகிலுள்ள இக்கோயில் அமைந்துள்ள இடத்தில் குடில் அமைத்து, சில காலம் தங்கி, பெருமான் திருவெம்பாவை இயற்றினார். 

(இது போன்றொரு திருத்தலம் மஞ்சள் அல்லது வெள்ளை இனத்தவரின் நாட்டில் இருந்தால், அவர்கள் அதைப் போற்றி, பாதுகாக்கும் விதமே வேறு. ஆனாலும், அவர்களால் நம்மைப் போன்று சமூகநீதியைக் காக்கமுடியாது! 😏)


தில்லை - பெருமானின் இறுதிக்காலம் கழிந்த திருத்தலம். இவ்வூருக்கருகில் உள்ள ஒரு கிராமத்தில் பெளத்தர்களை வாதில் வென்றார். உடன், பிறவி ஊமையான ஒர் இலங்கை இளவரசியை பேச வைத்தார். 

திருவாசகம் முழுவதையும் பெருமானை பாட வைத்து, கூத்தபிரானே (திருமூலர் 🌺🙏🏽🙇🏽‍♂️) அவற்றை தொகுத்தருளினார் என்பது தொன்நம்பிக்கை.


திருவாசகத்தின் முதலிரண்டு அடிகள்:

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க


திருவாசகத்தின் கடைசிப் பதிகத்தின் முதல் பாடல்:

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட
அத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே

oOOo

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

No comments:

Post a Comment