🔸 புனைவுக்கதை:
அர்ஜூனனின் பேரனான மன்னர் பரிட்சித்து, தட்சகன் என்ற பாம்பு கடித்து இறந்துவிட, அவரது மகன் ஜனமேஜயன், 7 நாட்களுக்குள் அந்த பாம்பை கொல்ல உறுதி பூண்டு, "பாம்பு வேள்வி" நடத்துகிறார். பார் எங்குமிருக்கும் பாம்புகள் தாமாக வந்து வேள்வித்தீயில் விழுந்து மாண்டுபோகின்றன. மீதமிருப்பது தட்சகன் மட்டுமே. அப்பாம்பு இந்திரனின் அரியணையை இறுகப் பற்றிக்கொண்டுவிடுகிறது. இதையறிந்த வேள்வி நடத்துவோர், முன்னைவிட மிகுந்த முனைப்புடன் வேள்வியை நடத்துகின்றனர். ஒரு சமயத்தில், இந்திரனின் அரியணை ஆட்டம் காணத் தொடங்குகிறது. இது கண்ட இமையார் (ஆரியத்தில், தேவர்) மானசாதேவி என்ற பாம்புகளின் கடவுளை வேண்டுகிறார்கள். அவர் தனது மகனான ஆஸ்திக முனிவரை ஜனமேஜயனிடம் அனுப்பி, வேள்வியை நிறுத்தச் செய்கிறார்.
🔸 உட்பொருள்:
🌷 ஜனமேஜயன் - மெய்யறிவு தேடி, வடக்கிருப்பவர் (ஆரியத்தில், தவமிருப்பவர்)
🌷 வேள்விக்குழி - நமதுடல்
🌷 வேள்வித்தீ - நான் எனும் நமது தன்மையுணர்வு
🌷 வேள்வி செய்யும் முனிவர்கள் - மெய்யாசிரியர்களின் அறிவுரைகள். "மிகுந்த முனைப்புடன் வேள்வியை நடத்துதல்" எனில் அவ்வறிவுரைகளை முனைப்புடன், இடைவிடாது சிந்தித்தல் & கடைபிடித்தலாகும்.
🌷 தீயில் வந்துவிழும் பாம்புகள் - எண்ணங்கள், தளைகள், பற்றுகள். எண்ணங்கள் தாமாகத் தோன்றுகின்றன என்பதை குறிக்கவே, பாம்புகள் தாமாக வந்து தீயில் விழுந்தனவென்று உருவகப்படுத்தியுள்ளனர்.
🌷 தட்சகன் எனும் பாம்புகளின் தலைவன் - "நான் இவ்வுடல்" என்ற எண்ணம். இவ்வெண்ணமே மற்றெல்லா எண்ணங்களுக்கும், பற்றுகளுக்கும் அடிப்படையாவதால், இதை பாம்புகளின் தலைவனாக உருவகப்படுத்தியுள்ளனர்.
🌷 இறுதியாக வரும் ஆஸ்திக முனிவர் - "நீயே உள்ளபொருள்" என்ற வாலறிவு / மெய்யறிவு. இவ்வறிவு கிடைத்ததும் எல்லாம் நின்று போகும். இதையே ஆஸ்திக முனிவர் வேள்வியை தடுத்து நிறுத்தினார் என்று பதிவு செய்துள்ளனர்.
oOo
👎🏽 பாம்புகள் எனில் எண்ணங்கள், தளைகள் & பற்றுகள் என்று முன்னமே பார்த்தோம். எண்ணங்கள் எங்கிருந்து தோன்றுகின்றன? மனதிலிருந்து. எனில், பாம்புகளின் தலைவி = மானசாதேவி = மனம் = மாயை / பெருமாள்!
மானசாதேவியை வேண்ட, அதாவது, மனதை வேண்ட மெய்யறிவு (ஆஸ்திக முனிவர்) கிடைக்குமென்று உருவகப்படுத்தி இருக்கிறார்கள்!! இது முற்றிலும் தவறாகும். (சிங்கம் திரைப்படத்தில், லாரியை கடத்திக் கொண்டுவரும் கிட்நாப் சிங்கிடம், மோட்டார் வண்டியை கொடுத்துனுப்பிவிட்டு, அவர் கொண்டுபோய் சேர்த்துவிடுவார் என்று ஏட்டு எரிமலை நம்புவதற்கு சமமாகும். 😃)
அடைந்து கிடக்கும் ஓர் அறையில், இடத்தை உருவாக்க, அவ்விடத்தை அடைத்துக்கொண்டிருக்கும் பொருட்களை அகற்றினால் போதும். இங்ஙனமே, நம் மனதை அடைத்துக்கொண்டிருக்கும் பற்றுகளை, தளைகளை ஒழித்தால் போதும். நம்மை பற்றிய அறிவு - மெய்யறிவு - தானாக ஒளிரும். அதாவது, மானசாதேவியை (மனதை) விட்டொழிக்கவேண்டும்! அவரிடம் வேண்டக்கூடாது!!
👎🏽 "முன்னைவிட மிகுந்த முனைப்புடன் செய்யப்பட்ட வேள்வியால் இந்திரனின் அரியணையே ஆட்டங்கண்டது. அச்சமடைந்த இமையார் மானசாதேவியை வணங்கினர்."
இப்பகுதியை ஆராயத் தேவையேயில்லை. ஆரியப் பூசாரிகளையும், அவர்களது விருப்பத் தொழிலான வேள்வி செய்தலையும் உயர்த்திக் காட்டுவதற்காக எழுதப்பட்டப் பகுதியாகும்.
oOo
மொத்தத்தில், இந்த புனைவுக்கதையிலிருந்து நமக்கு கிடைக்கும் செய்தி: முனைப்புடன், நம்பிக்கையுடன் & இடைவிடாது வடக்கிருந்தால் மெய்யறிவு பெறலாம்!!
oOo
அடுத்து, ஜனமேஜயனின் தந்தையை பற்றி சற்று பார்ப்போம்.
ஜனமேஜயனின் தந்தை பரிட்சித்து மன்னர், பாம்புக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக, குறிப்பிட்ட காலம் கடக்கும்வரை, பாதுகாக்கப்பட்ட ஓர் உயரமான கட்டிடத்தில் உண்ணாநோன்பிருப்பார். ஆனால், காலம் கடப்பதற்குள், தான் ஆபத்திலிருந்து தப்பிவிட்டதாக எண்ணி, ஒரு பழத்தை உண்ணத் தொடங்குவார். அதற்குள்ளிருந்த தட்சகன் அவரை கடித்துவிட, மாண்டு போவார்.
🌷 உயரமான கட்டிடம் - நமதுடல்
🌷 பாதுகாக்கப்பட்ட கட்டிடத்திலிருந்தார் - புலன்களை வென்றிருந்தார்
🌷 உண்ணாநோன்பிருந்தார் - மனதில் தோன்றும் எண்ணங்களையும், கண் முன்னே விரியும் காட்சிகளையும் ஒதுக்கித் தள்ளினார்
🌷 பழத்தை உண்ணுதல் - ஆசைக்கு இடங்கொடுத்தல் / மனதின் எழுச்சிக்கு இடங்கொடுத்தல் / தன்மையுணர்விலிருந்து விலகுதல்
🌷 தட்சகன் கடித்தல் - உடல்-வையகச் சிறையின் தொடக்கமான "நான் இவ்வுடல்" என்ற தப்பெண்ணத்திற்கு இடங்கொடுத்தல்
மொத்தத்தில், இப்புனைவுக்கதை தரும் செய்தி: புலன்களை வென்று, எவ்வளவு கடுமையாக வடக்கிருந்து, மெய்யறிவு பெற்றிருந்தாலும் தன்மையுணர்விலிருந்து சற்றே விலகினாலும் அவ்வளவுதான்... கோவிந்தா!! உடல்-வையகச் சிறைக்குள் மீண்டும் சிக்கிக்கொள்வோம்.
oOo
🌷 நாக சதுர்த்தி - மனதை போற்றும் திருநாள்
🌷 கருட பஞ்சமி - அறிவை போற்றும் திருநாள்
oOOo
கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻