Tuesday, September 26, 2023

அட்டமங்கலம் = 8 உகந்த பொருட்கள் = எண்பொருட்கள்: உட்பொருள்


அட்டமங்கலம் என்பது பின்வரும் 8 உகந்த பொருட்களை குறிக்கும்:


கண்ணாடி

நிறைகுடம்

கொடி

விசிறி

தோட்டி

முரசு

விளக்கு

இரு மீன்கள் - இணைக்கயல்


இவற்றை தனித்தனி பொருட்களாகவோ, அல்லது, அனைத்தையும் ஒன்றாக ஒரு தாமிரத்தகட்டில் அச்சடித்தோ, சிலர் தங்களது வழிபாட்டு அறையில் வைத்திருப்பதை காணலாம்.


oOo


முதற்கண் தெரிந்துகொள்ளவேண்டியது மங்களம் & மங்கலம் ஆகிய இரு ஆரியச் சொற்களுக்கு இடையேயுள்ள வேறுபாடு:


மங்களம் - நிறைவு

மங்கலம் - உகந்தது / நற்குறி


அட்டமங்கலம் = 8 உகந்த பொருட்கள் = எண்பொருட்கள்.


1. கண்ணாடி


இது எதற்கு உதவுகிறது? முகம் பார்க்க. முகம் பார்த்து என்ன செய்யப்போகிறோம்? நம்மை சீர் செய்து கொள்ளப்போகிறோம். இவ்வாறே நமக்கு அமைந்திருக்கும் உடல், நம் கண் முன்னே விரியும் வையகம், நமக்கு தோன்றும் எண்ணங்கள் என யாவும் நமக்கு கண்ணாடி போன்றவையாகும். இவற்றினால் நாம் சீராகவேண்டும் / மேம்படவேண்டும் என்பது உட்பொருளாகும்.


2. நிறைகுடம்


முழுமையான அறிவு - எதையறிந்தால் நமது மனம் நிறைவடையுமோ அதைப் பற்றிய அறிவு. அதாவது, மெய்யறிவு.


3. கொடி


தரையில் படராமல், மேலெழும்பும் கொடிவகைகளைக் குறிக்கும். அவற்றை போன்று, மேலான குறிக்கோளை நோக்கி செல்லவேண்டும். எது மேலான குறிக்கோள்? உள்ளபொருள் / பரம்பொருள்!


4. விசிறி


அ. இளைப்பாறுதல். மொத்தப் பிறவியே இளைப்பு-ஆறுவதற்காகத்தானே! எனவே, எதையும் பொறுமையாக அணுகவேண்டும்.


ஆ. விசிறியை வீசிக்கொண்டிருந்தால் ஈ, கொசு முதலான பூச்சிகள் நம்மை அண்டாது. இதுபோன்று, "தீய எண்ணங்களை / தீய நபர்களை அண்டவிடாதே" என்றும் பொருள் கொள்ளலாம்.


5. தோட்டி


தோட்டி எனில் அங்குசமாகும். வெறி பிடிக்காமல் இருப்பதற்காக. யானைக்கு மதம் பிடித்தால், பாகன் தோட்டியை பயன்படுத்துவதை பார்த்திருக்கலாம். அதுபோன்று, ஒரு வேளை, நமக்கு வெறி பிடித்தால் நமது தோட்டியை பயன்படுத்தி வெறியை அடக்கவேண்டும். யானைக்கு தோட்டியென்பது ஒரு பொருளாகும். நமக்கு தோட்டியென்பது நமது மெய்யாசிரியர், நமது அறநூல்கள், நமது நலம்-விரும்பிகள், நம் வாழ்வில் என்றோ நடந்த நிகழ்வுகள் என யார் / எது வேண்டுமானாலும் இருக்கலாம்.


தோட்டிக்கு பதிலாக மழு இருக்கலாம். அப்படி மழுவை வைத்தால் நமக்கு கிடைக்கும் பொருள்: பற்றுகளை அறுத்தெறி. அல்லது, பற்றுகளை சேர்த்துக்கொள்ளாமல் இரு.


6. முரசு


போர்முரசு. ஒலித்தவுடன், எல்லாவற்றையும் விட்டுவிட்டு போருக்கு புறப்படுதல். இவ்வாறே, செயல் / கடமை என்று வந்தவுடன், உடனடியாக, முனைப்புடன் ஈடுபடவேண்டும்.


7. விளக்கு


விளக்கு எரிவதால் மற்றவர்களுக்கே பயன் கிட்டும். விளக்கிற்கு பயனில்லை. இது போன்று, தந்நலம் கருதாது மற்றவர்களுக்கு உதவிடவேண்டும்.


8. இணைக்கயல்


அன்னை அங்கையர்கண்ணியின் இரு விழிகளைக் குறிக்கும்: விழித்திரு!


வள்ளற்பெருமான் அறிவுருத்திய 3 சொற்களில் ஒன்றாகும். நமது தன்மையுணர்விலிருந்து ஒரு நொடி தவறினாலும், மாயையின் பிடிக்குள் சிக்கிக் கொள்வோம். எனவே, எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.


(ஒரு சாரர், இக்குறியீடு பிறவிகளின் தொடர்ச்சியை, அதாவது, மறுபிறவியை விரும்புதலைக் குறிக்கும் என்று எடுத்துக் கொள்கின்றனர். இது தவறாகும். இப்படி பொருள் கொண்டால், நம் முன்னோர்கள் வகுத்த அறம், பொருள், இன்பம் & வீடு என்ற 4 வழிகளில், வீடு என்ற மேலான வழி தவறானது / தேவையற்றது என்றாகிவிடும். மனிதப்பிறவியின் குறிக்கோள் பிறப்பறுப்பதாகும்.)


oOOo


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

Saturday, September 23, 2023

பிள்ளையாரை நீர்நிலையில் கரைத்தல் - உட்பொருள்


பிள்ளையாரின் பிறந்தநாள் எவ்வளவு சிறப்பு பெறுகிறதோ அவ்வளவு சிறப்பு அவரது திருவுருவை கரைக்கும் வினைமுறைக்கும் (ஆரியத்தில், சடங்கு) உண்டு. இது வேறெந்த திருவுருவுக்கும் கிடைக்காத சிறப்பாகும்.

பிள்ளையாரை தனிக்கடவுளாக காணும்போது, அவரது திருவுருவம் உள்ளபொருளை (பரம்பொருளை) குறிக்கும். சிவ குடும்பத்தில் ஒருவராக காணும்போது நமது அறிவை குறிக்கும். இங்கும் நமது அறிவை மட்டும் குறிக்கும்.

🌷 கரைக்கப்படும் நீர்நிலை - நாம் வாழும் இவ்வையகம்.

🌷 கரைக்கப்படும் பிள்ளையார் - பிறப்பு முதல் இறப்பு வரை நாம் சேர்த்து வைத்திருக்கும் யாவும்.

எதையெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறோம்?

நான் மனிதன்.
நான் ஆண் / பெண்.
இன்ன குடும்பத்தைச் சேர்ந்தவன்.
இன்ன படித்திருக்கிறேன்.
இன்ன வேலை / தொழில் செய்கிறேன்.
இன்ன சொத்துகள் சேர்த்திருக்கிறேன்.
இன்ன பதவிகள் வகித்திருக்கிறேன்.
இவர்கள் எனது குடும்பத்தினர்.
இன்ன ஊர்களுக்கு / நாடுகளுக்கு / கோயில்களுக்கு சென்று வந்திருக்கிறேன்.
இன்ன திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளேன்.
இன்ன கடவுளை வணங்குகிறேன்.
இவர் எனது மெய்யாசிரியர்.
நான் அருள் பெற்றவன் / தீமையாளன்பிள்ளையார் நான்மை, விநாயகர் சதுர்த்தி, பிள்ளையாரை கரைத்தல்.
...
...

மொத்தத்தில் இவையனைத்தையும் சேர்த்து இரண்டு சொற்களில் அடக்க முடியும்: நான் இன்னார்!

பிறவியின் இறுதியில், அல்லது, பிறவி முடிந்தவுடன் இந்த "இன்னாரை" அப்படியே விட்டுவிடவேண்டும் என்பதே பிள்ளையாரை நீர்நிலையில் கரைக்கும் வினைமுறையின் உட்பொருளாகும்.

ஏன் விடவேண்டும்?

"இன்னார்" என்பதை விட்டாலும், நான் எனும் நமது தன்மையுணர்வை விடமுடியாது. அதுதான் நாம். அதுதான் உள்ளபொருள். அந்நிலையில் அப்படியேயிருத்தலே நிலைபேறு / வீடுபேறு ஆகும். வினைப்பயன்கள் முழுவதும் தீர்ந்திருந்தால் மட்டுமே இந்நிலையில் நீடித்திருக்க முடியும். இல்லையெனில்... கோவிந்தா! மீதமிருக்கும் ஏதாவதொரு பற்றை வைத்து அன்னை மாயை /மாயக்கண்ணன் தனது தில்லாலங்கடி வேலையை செய்து, நம்மை மீண்டும் இந்த ஜிஎஸ்டி-சூழ் வையகத்திற்குள் தள்ளிவிடுவார்.

அப்படி மீண்டும் பிறக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இப்போது நாமிருக்கும் சூழலைவிட மேலான சூழல் கிடைத்தால் மகிழ்ச்சியடைவோம். ஒரு வேளை, கீழான சூழலமைந்தால்... தாவரம், புழு, பூச்சி, விலங்கு, பறவை என அஃறிணையாக பிறந்தால், அல்லது, பிச்சையெடுக்கும் பெற்றோருக்கு பிறந்தால், கொடுமையான பெற்றோர் / உடன்பிறந்தோருடன் பிறந்தால், விலைமகளுக்கு பிறந்தால், போக்கற்றவனாக (ஆரியத்தில், திக்கற்றவனாக - அநாதையாக) பிறந்தால், உடல் / மன ஊனத்துடன் பிறந்தால்... மிகவும் வருந்துவோம், துன்பப்படுவோம்.

மறுபிறவி கிடைத்தவுடன் முற்பிறவியின் நினைவுகள் அப்படியே நீங்கிவிடாது. மெல்ல மெல்லவே நீங்கும். ஒரு வேளை, முற்பிறவியில் மனிதனாக பிறந்து, சற்று நல்ல சூழலில் வாழ்ந்துவிட்டு, இப்போது, அதே பகுதியில் குப்பைத்தொட்டியை கிளறும் ஒரு நாய்க்கு மகவாக பிறந்து, முற்பிறவியில் தான் வாழ்ந்த வீட்டை, தன்னுடனிருந்த மக்களை காணும் நிலை ஏற்பட்டால் எப்படியிருக்கும்? 😔

எனவேதான், பிறவி முடியும் தருவாயில், அல்லது, பிறவி முடிந்தவுடன் நமது "பிள்ளையாரை" (நாம் சேர்த்தவற்றை) முழுவதுமாக கரைக்கச் சொல்லி நம் பெரியவர்கள் அறிவுருத்தியுள்ளனர்.

கரைத்தால் மட்டும் போதாது; நிலைபெறவும் தெரிந்திருக்கவேண்டும். இது முடியாதெனில், குறைந்தது, அடுத்த பிறவியில் எப்படிப்பட்ட சூழல் கிடைத்தாலும், அழுது அரற்றாது, அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனமுதிர்ச்சியையாவது வளர்த்துக் கொள்ளவேண்டும். அதாவது, பழைய பிள்ளையாரை கரைத்துவிட்டு, புதிய பிள்ளையாரை, அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், அப்படியே வரவேற்க அணியமாகவேண்டும்! (தயார் - தமிழல்ல)

oOo

... குருவடிவாகி குவலையந்தன்னில்
திருவடி வைத்து திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக்கருளி 
கோடாயுதத்தால் கொடுவினை களைந்த ...

அருமையான இவ்வரிகள் "விநாயகர் அகவலில்" இடம் பெற்றுள்ளன. பிள்ளையாரை போற்றிப் பாடுவது போன்று வரிகள் அமைத்து, உண்மையில், தனது மெய்யாசிரியரை போற்றிப் பாடியுள்ளார் ஒளவைப் பாட்டி! 😍

🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, September 18, 2023

பிள்ளையார் பிறந்தநாள் / பிள்ளையார் நான்மை / பிள்ளையார் சதுர்த்தி


இன்று பிள்ளையாரின் பிறந்தநாள் - அதாவது, பிள்ளையார் என்ற இறையுருவத்தை உருவாக்கலாம் என்ற எண்ணம் நம் பெரியவர்களுக்கு தோன்றிய நாள்; அல்லது, அப்படியோர் உருவத்தை உருவாக்கி, அவர்கள் வெளியிட்ட திருநாள்.

🌷 யானைத் திருமேனி - நினைவுகளின் தொகுப்பே நீ!

🌷 பாசம் - பற்றுகளை சேர்த்துக்கொள்வதும் நீயே!

🌷 மழு - பற்றுகளை அறுத்தெறிவதும் நீயே!

🌷 ஒடித்த தந்தம் - உன்னுள்ளிருந்து வெளிப்படும் எண்ணங்களையும் காட்சிகளையும் கொண்டு, உனது மகாபாரதத்தை (உனது வாழ்வை) எழுதுபவனும் நீயே!

🌷 சிவலிங்கம் / இனிப்பு - வீடுபேறும் / மெய்யறிவும் உன்னிடமேயுள்ளது.

🌷 வசதியாக அமர்ந்திருத்தல் - நீ அசையாத பொருள் (காட்சிகள்தாம் அசைகின்றன).

🌷 மடக்கிய இடதுகால் - புறமுகமாக செல்லும் உன் கண்ணோக்கத்தை, அகமுகமாக உன் மீதே (உனது தன்மையுணர்வின் மீது) திருப்பிக்கொண்டிரு.

🌷 மூஞ்சூறு - பிள்ளையார் ஒளியெனில் மூஞ்சூறு இருளாகும். பிள்ளையார் அறிவெனில் மூஞ்சூறு அறியாமையாகும். எச்சரிக்கையாக இல்லாவிடில், அறியாமை மெய்யறிவை தின்றுவிடும் (மூஞ்சூறு இனிப்பை கொறிப்பது போன்று).

மொத்தத்தில் பிள்ளையாரின் திருவுருவம் தெரிவிப்பது: உன் வாழ்க்கை உன் கையில்!!

வணங்குதல் எனில் இணங்குதலாகும். பிள்ளையாரை வணங்குதல் எனில் அவரது உருவம் உணர்த்தும் கருத்துகளோடு இணங்குதலாகும். அவ்வாறு இணங்கி அமைதியடைதலே பிள்ளையார் வழிபாட்டின் உட்பொருளாகும்!!

oOOo

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

-- ஒளவையார் 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, September 10, 2023

செப் 5 - ஆசிரியர் தினம் - சில சிந்தனைகள் ...


🔸 குரு (ஆரியம்) - தான் கற்றதைக் கொண்டு, நமது அறியாமை இருளை அகற்றுபவர்.

🔸 ஆச்சாரியார் (ஆரியம்) - குருவிற்கு மேலானவர். கற்றுக் கொடுப்பதோடு நிற்காமல், அதன் படி வாழ்ந்தும் காட்டுபவர். இச்சொல்லின் தமிழாக்கமே ஆசிரியர் ஆகும்!

🔸 ஆசிரியரைக் குறிக்கும் சில தூய தமிழ் சொற்கள்:

அண்ணாவி
ஆயன்
ஈவோன் (தொல்காப்பியம்)
நுவல்வோன் (நன்னூல்)
ஐயன்
ஓதுவான்
பணிக்கன் (மலையாளச் சொல்லல்ல)
புலவன்

🔸 தினம் என்பதும் ஆரியச் சொல்லாகும். தமிழில் "நாள்" என்றழைக்கலாம்.

🔸 ஆசிரியர் தினத்தை "ஆயர் திருநாள்" என்று தமிழில் அழைக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

🔸 ஆயர் என்பவர்...

- நுணுக்கமாக ஆராய்பவர்
- உள்ளதை விட்டுவிட்டு அல்லாததை பிரித்தெடுப்பவர்
- கூட்டத்தை பராமரித்து, வழிநடத்துபவர்

🔸 "ஆயர் என்பவர் மனித உருவில்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒரு சொல்லாக, பொருளாக, குறியீடாக, நிகழ்வாகக்கூட இருக்கலாம்." என்பது பகவான் திரு இரமண மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ வாக்காகும். நம்மை மேம்படுத்தும் யாவும் நமது ஆயர்களே!

🔸 இத்திருநாளை செப் 5 அன்று கொண்டாடுவதைவிட (இராதாகிருஷ்ணனை பற்றிய உண்மைகள் இன்று வெளிவந்துவிட்டன), தமிழர்களாகிய நாம் திருவள்ளுவர் திருநாளன்று கொண்டாடுவது பொருத்தமாகவிருக்கும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻