கடகம்
(ஆடி) - விளக்கு
(சுவாதி)
திரு சுந்தரமூர்த்தி நாயனார், திரு சேரமான் பெருமாள் நாயனார் & திரு ஒளவையார் திருநாள்
🌷 தம்பிரான் தோழராகிய திரு சுந்தரமூர்த்தி நாயனாரைப் பற்றி எழுதுவதற்கு ஓர் இடுகை போதாது. ஒரு நூலே எழுதவேண்டும். அவ்வளவு செய்திகள் உள்ளடங்கியது அவரது வரலாறு!
🌷 விநாயகர் அகவல் பாடிய திரு ஒளவைப் பாட்டியின் பெயர் அறம் என்ற சொல் உள்ளவரை நிலைத்திருக்கும்! "எந்த நூல் அழிந்தாலும் தமிழன்னைக்கு குறையில்லை. ஆனால், பாட்டியின் நூல்கள் அழிந்தால் அது பெருங்குறையே!" என்ற மகாகவிஞரின் புகழுரை போதும் பாட்டியின் சிறப்பையும், அன்னைத் தமிழுக்கு அவரது பங்களிப்பையும் உணர!
🌷 திரு சேரமான் பெருமாள் நாயனார் பற்றி சற்று பார்ப்போம்:
🔸 சுந்திரமூர்த்தி நாயனாரின் சம காலத்தவர் (8ஆம் நூற்றாண்டு) மற்றும் அவரது சிறந்த நண்பர்
🔸 மகோதை எனும் கேரளாவை ஆண்டவர் (பேரரசர் இராஜேந்திர சோழரின் மகனான பேரரசர் இராஜாதிராஜ சோழர் சோழப்பேரரசின் மேற்கு எல்லையாக மகோதையைக் குறிப்பிடுகிறார்)
🔸 தில்லை கூத்தப் பெருமானின் சலங்கை ஒலியைக் கேட்கும் பேறு பெற்றிருந்தார்
🔸 ஓரறிவு முதல் ஆறறிவு பெற்ற உயிரிகள் வரை அனைவரின் குறைகளை அறியும் திறன் பெற்றிருந்தார்
🔸 பெரும் கொடை வள்ளல்
🔸 கழறிற்றறிவார் என்பது சிறப்பு பெயர்
🌷 அது என்ன கழறிற்றறிவார்?
கழல் இற்று அறிவார். இறைவனது திருப்பாதம் (கழல்) இத்தகையது (இற்று) என்று தெள்ளத்தெளிவாக அறிந்தவர் (அறிவார்). அதாவது, என்றுமே அழியாத, மாறாத, தன்னொளி பொருந்திய, இடைவிடாது இருக்கின்ற, மாசற்ற தனது தன்மையுணர்வைப் (திருப்பாதம் - கழல்) தெளிவாக அறிந்தவர். சுருக்கமாக, தன்மையுணர்வில் இருப்பவர் - மெய்யறிவு பெற்றவர்!!
🌷 நாயனார்களின் இறுதிக்காலம்:
மரபுவழிச் செய்தி:
திருவஞ்சைக்களம் திருக்கோவிலிலிருந்து சுந்திரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை மீதேறி கயிலாயம் சென்றார். இதையறிந்த சேரமான் பெருமாள் நாயனார் வெள்ளைக் குதிரை மீதேறி கயிலாயம் சென்றார். இந்நிகழ்வுகளை உணர்ந்த ஒளவையார், தான் செய்துகொண்டிருந்த பிள்ளையார் வழிபாட்டை விரைவாக்கினார். அதைக்கண்ட பிள்ளையார், அவரை தடுத்து நிறுத்தி, வழிபாட்டை செவ்வனே முடிக்க அறிவுருத்தினார். வழிபாட்டிற்குப் பின்னர், நாயன்மார்களுக்கு முன்னதாக, பாட்டியை தாமே திருக்கயிலாயத்திற்கு கொண்டுசேர்ப்பதாக உறுதியளித்தார். வழிபாட்டிற்குப் பின்னர் அவ்வாறே கொண்டுசேர்த்தார்.
இதன் பொருள்:
🔸 நாயன்மார்கள் இருவரும் திருவஞ்சைக்களம் திருத்தலத்தில் திருநீற்று நிலையடைந்துள்ளனர்
🔸 தம்பிரான் தோழர் அறிவைக் கொண்டும் (வெள்ளை யானை - மூளை), கழறிற்றறிவார் யோக வழியிலும் (குதிரை - மூச்சுக்காற்று) நிலைபேறு அடைந்துள்ளனர்
🔸 ஒளவைப் பாட்டியைப் பற்றிய உருவகம்:
- ஒருவர் வாழும் வாழ்க்கையே வழிபாட்டிற்கு சமம்
- ஒளவையார் அறிவைப் போற்றி, சந்தித்தோரின் அறிவுப்பசி நீக்கி வாழ்ந்தவர்
- சிவ குடும்பத்திலுள்ள பிள்ளையார் அறிவைக் குறிப்பவர்
- எனில், அறிவைப் போற்றிய அவரது வாழ்க்கை = பிள்ளையார் (அறிவு) வழிபாடு (வாழ்க்கை)!!
- "வழிபாட்டை செவ்வனே செய்" என்பது அன்றாட வாழ்வை சரியாக வாழ்வது; கடமைகளை சரிவர செய்வது என்பதாகும்.
- "வழிபாட்டிற்குப் பின்னர் பாட்டியை பிள்ளையார் கயிலாயத்திற்கு கொண்டுசேர்த்தது" என்பது செவ்வனே வாழ்ந்து முடித்த பிறகு, உடல் உலக காட்சிகள் நீங்கி, தன்மையுணர்வில் (கயிலாயத்தில்) நிலைபெறுவதாகும் (கொண்டுசேர்த்தது)
- "நாயன்மார்களுக்கு முன்னதாக கயிலாயம் சேர்ந்தது" - நாயன்மார்கள் இருவரும் சற்றேனும் முயற்சி செய்து நிலைபேற்றினை அடைந்துள்ளனர். பாட்டியோ, எந்த வகை முயற்சியுமின்றி அடைந்துள்ளார். நாயன்மார்களின் முயற்சி 1 மணித்துளியெனில், பாட்டியின் முயற்சி 0 மணித்துளியாகும்.
"முன்னதாக" என்பதற்கு "நாயன்மார்கள் கயிலாயம் சென்றுசேர்வதற்கு முன்னர்" என்று தவறாக பொருள் கொள்வதற்கு அடிப்படை "கயிலாயம் என்ற இடம் எங்கோ இமயத்தில் / வானத்தில் இருப்பதாக" கருதும் அறியாமையாகும்!
நமது தன்மையுணர்வே திருக்கயிலாயம்.
இதை உணர்வதே மெய்யறிவு.
இவ்வறிவில் நிலைபெறுவதே விடுதலை.
oOOo
சிவாய நம என்று சிந்தித்திருந்த அம்மை அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன் 🌺🙏🏽🙇🏽♂️
வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகெலாம் 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌸🌸🌸🌸