பிள்ளை அறுத்துஉதவும் பேரா ளனைஉவந்து
கொள்ள வயிரவமெய்க் கோலமாய் - மெள்ள
நடந்தமலை சிம்புளாய் நாரசிங்க ரூபை
அடர்ந்தமலை அண்ணா மலை
-- #அண்ணாமலை #வெண்பா - #42
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽
🔸பிள்ளை அறுத்து...மெள்ள நடந்தமலை
(இதன் விளக்கம் சற்று நீண்டுவிட்டது. தயவு செய்து பொறுமையாக படிக்கவும். நன்றி.)
#சிறுத்தொண்ட #நாயனாரின் 🌺🙏🏽 கதை. அனைத்து நாயன்மார்கள் கதையும் உண்மையல்ல. சில கதைகள் உருவகக்கதைகள். இக்கதையும் அப்படிப்பட்ட ஒன்று தான்.
முதலில் இப்பாடலில் வரும் வயிரவமெய் கோலம்.
#வயிரவர், #வைரவர், #பைரவர், #வைராகி, #பைராகி எல்லாம் வைராக்கியம் நிறைந்தவர் என்பதைக் குறிக்கும். எனில், "தன்னை விடாதிருத்தவர்" என்று பொருள். தன்மையுணர்வை விடாது இறுகப்பற்றுபவர். இவ்வுணர்வுக்கு அந்நியமான எதையும் நாடாதவர். "தன்னை விடாதிருத்தல் மெய்யறிவு. அந்நியத்தை நாடாதிருத்தல் நிராசை. உண்மையில் இரண்டும் ஒன்றே." என்பது பகவானின் 🌺🙏🏽 வாக்கு. அதாவது, வைரவர் எனில் மெய்யறிவாளர்!!
இவருக்கு ஊர்தியாக நாயைக் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்கள். ஏன் நாயை ஊர்தியாக வைத்தனர் என்பதை ஆராயும் முன்னர் புலியைப் பற்றி பார்ப்போம்.
சிவபெருமான் இடையில் புலித்தோலை உடுத்தியிருப்பது போன்று சித்தரித்திருப்பர். மாமுனிவா்கள், ஆதீனங்கள், ஆச்சார்யார்கள், மடாதிபதிகள் புலித்தோலின் மீது அமர்ந்திருப்பது போன்று ஓவியம் வரைந்திருப்பார்கள்; படம் எடுத்திருப்பார்கள். தில்லை தலவரலாற்றோடுத் தொடர்புடைய #புலிக்கால் #முனிவரை (#வியாக்ரபாதர்) 🌺🙏🏽 புலியின் கால்களை உடையவராகவே சித்தரித்திருப்பர். இவையெல்லாம் ஒரு பொருளையேக் குறிக்கின்றன: சித்தரிக்கப்பட்டவர் தனது தன்மையுணர்வில் நிலைபெற்றவர். அந்நிலையை சிறிதும் விடாது இறுகப்பற்றிக் கொண்டிருப்பவர். புலிவாயிற்பட்டது எவ்வாறு திரும்பாதோ அவ்வாறே தன்மையுணர்வில் நிலைபெற்ற இவர்கள் உலக வாழ்க்கைக்கு திரும்பமாட்டார்கள்.
(அரசர்கள் வீற்றிருந்த அரியணைகளின் கால்களையும், நமது வீடுகளின் வரவேற்பறைகளில் அன்றிருந்த மரநாற்காலிகளின் முன்னங்கால்களையும் புலிக்கால்கள் போன்று செதுக்கியிருப்பார்கள். இதன் பொருள், இவற்றில் வீற்றிருப்போர் தமது நிலைப்பாட்டில் உறுதியாயிருப்பர் என்பதாகும்.)
இனி, வைரவரின் ஊர்திக்கு திரும்புவோம். மேற்கண்ட புலிக்கால், புலித்தோல் போன்ற அடையாளங்களுக்கு சமமான அடையாளம் தான் நாய். நாய் என்றதும் நம் நினைவுக்கு வருவது அதன் மோப்ப ஆற்றல் மற்றும் அதன் நன்றியுணர்ச்சி. நாயானது, எவ்வளவு பெரிய கூட்டத்திலும் தனது உரிமையாளரை சரியாக மோப்பம் பிடித்துக் கண்டுபிடித்து விடும். இவ்வாறே, ஒவ்வொரு விநாடியும் வெளிப்படும் பல பல வாசனைகளுக்கு (எண்ணங்களுக்கு) இடையில் தன்மையுணர்வு எனும் இறையுணர்வை மோப்பம் பிடித்தவர்கள் வைரவர்கள். கொடூர "ஊனவினைக்காடு" எனப்படும் உலகிலிருந்து தப்பிக்க வழி காட்டிய தனது மெய்யாசிரியரை என்றும் மறவாதவர்கள்.
(மெய்யாசிரியர் என்பவர் மனித உரு கொண்டு தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. சொல், சொற்றொடர், பொருள், நினைவு, காட்சி, விலங்கு, மனிதன் என்று எது/யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.)
இப்படி, வைரவர் என்பதற்கு மேலான விளக்கமிருந்தும், எங்கேயோ தவறு நடந்து, அவர்களை பயங்கரமானவர்கள் என்று சித்தரித்து விட்டனர். விளைவு, ஒரு பயங்கரமான கூட்டமே காசி மாநகரில் உருவாகிவிட்டது!! மேலும், இக்கதை வடநாட்டுக்கு ஏற்றுமதியாகி, பின்னர், அங்கிருந்து வைணவத்திற்கு இறக்குமதியும் ஆகிவிட்டது! கதையின் தாக்கம் அத்தகையது. இந்நேரம் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் பரங்கி மதத்தவரால் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கும் என்று உறுதியாக நம்பலாம். 😊
(வைணவர்களின் #பன்றி #திருவிறக்கமும் (#வராக #அவதாரம்) மோப்ப ஆற்றலை அடிப்படையாகக் கொண்டதுதான். பன்றியானது மோப்பம் பிடித்து, மண்ணைப் பறித்து புதைந்திருக்கும் கிழங்கை வெளிக்கொணரும். இவ்வாறே பன்றிப்பெருமாள் கடலுக்குள் புதைந்து போயிருக்கும் நிலமகளை மோப்பம் பிடித்து வெளிக்கொணருவார். இங்கு கடல் என்பது நமது உடல், வெளிவரும் நிலமகள் என்பது நமது தன்மையுணர்வு. எனில், பன்றிப்பெருமாள்... நாமே #பன்றிப்பெருமாள்!! 😊 மோப்ப ஆற்றலைப் பொறுத்த வரை நாய்க்கு தான் முதலிடம். பின்னர் தான் பன்றி வரும். சைவர்கள் நாயை முதலில் பயன்படுத்திக் கொண்டதால், வைணவர்கள் பன்றியை எடுத்துக்கொண்டனர்.)
இனி, நாயனாரின் கதைக்கு திரும்புவோம்.
வைரவர் எனும் மெய்யறிவாளர் பிள்ளைகறி கேட்டிருக்க முடியுமா? திருஞானசம்பந்தரின் திருச்செங்காட்டங்குடி திருப்பதிகத்தில் இடம் பெறும் பேறுபெற்ற சிறுத்தொண்ட நாயனார் தான் மூடராக இருக்க முடியுமா?
இங்கு பிள்ளையெனில் மனது! "சுத்த அறிவிலிருந்து அகந்தையும், அதனின்று மனதும், மனதிலிருந்து எண்ணங்களும், அவற்றிலிருந்து பேச்சும் பிறக்கின்றன. ஆகவே, பேச்சென்பது ஆதிமூலத்தின் கொள்ளுப்பேரனாகும்." என்பது பகவானது வாக்கு. ஆக, அகந்தையாகிய நாமெல்லோரும் இறையின் பிள்ளைகள். நமது மனம் நமது பிள்ளை.
ஆன்மிக கதைகளில் வரும் "உனது மகனை பலியிடு", "குழந்தையை பலியிடு", "கன்னியை எனக்கு கொடு" போன்ற சொற்றொடர்கள் எல்லாம் மனதை அழிப்பதையேக் குறிக்கின்றன. இது போன்ற உவமைகள் ஏடாகூடமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைத்த சில பெரியோர்கள், இதற்கு மாற்றாக சொன்னது தான்: #கிடா #வெட்டு!!
ஆம், கிடா முருகப்பெருமானின் ஊர்திகளில் ஒன்று. மனதைக் குறிப்பது. நம்மூர் திருவிழாக்களில் "கிடா வெட்டினேன்"என்று மட்டும் சொல்ல மாட்டார்கள். "கிடா வெட்டி, பொங்கல் வெச்சு, எல்லாருமா சாப்பிட்டோம்", "கிடா வெட்டி, படையல் செஞ்சு, எல்லாருக்கும் குடுத்தோம்" என்றே கூறுவார்கள். கிடா வெட்டுதல் மனதை அழிப்பதைக் குறிக்கும். மனம் அழிந்த பின் மீதமிருப்பது என்ன? மெய்யறிவு. இதனுடன் வெளிப்படுவது - பேரமைதி, எல்லையில்லா பெருமகிழ்ச்சி மற்றும் குளுமை. இவற்றைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதே பொங்கலையும் படையலையும் பகிர்ந்து உண்ணுதல். 👏🏽👏🏽👏🏽👌🏽😍
நமது திருவிழாக்கள் எவ்வளவு பொருள் பொதிந்தனவாக இருந்திருக்கின்றன!! நமது சமூகங்கள் எவ்வளவு ஆன்ம தாகம் கொண்டவையாக, பண்பட்டவையாக இருந்திருக்கின்றன!! 😍 நாம் பழங்குடிகள் என்பதற்கும் இந்த திருவிழாக்கள் ஒரு எடுத்துக்காட்டாகும்.
மீண்டும் ஒரு முறை... நாயனார் கதையில் வரும் வைரவர் என்பவர் மெய்யறிவாளர். இவர் கேட்ட பிள்ளைகறி என்பது நாயனாரின் மனது. நாயனாரின் அறியாமையை அகற்றி, அவரை நிலைபேற்றில் நிற்கச் செய்ய வந்தவர். 🌺🙏🏽 "பேராளனை (நாயனாரை) உவந்து கொள்ள வந்தவர்" (இந்த வெண்பாவில் வரும் சொற்றொடர்).
🔸சிம்புளாய் நாரசிங்க ரூபை அடர்ந்தமலை
இறைவன் சிம்புள் (#சரபேசுவர) வடிவம் தாங்கி வந்து சிங்கப்பெருமாளை அடக்கிய கதை. இரணியனை (ஆணவத்தை) அழிக்க சிங்கப் பெருமாள் (நம்மைப் பற்றிய தெளிவு) தோன்றுவது வரை நிர்விகற்ப சமாதி எனில், அதன் பிறகு உலக வாழ்க்கை திரும்புவது #சிம்புள் #பெருமான் தோன்றுவதாகும். சிம்புள் பெருமானின் 8 கால்கள் - 8 திசைகள் மற்றும் அவரது 2 தலைகள் - நமது அகம் & நமது புறம். அதாவது, இயல்பு வாழ்க்கை. காண்பதும், கேட்பதும் பொய்யென்றாலும், அவற்றை நம்மால் தோற்றுவிக்க முடியுமா? முடியாது. இறையாற்றலால் தான் முடியும். அவ்வாற்றலே இங்கு சிம்புள் பெருமானாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽