Monday, August 31, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #65 - பெருமானுக்கும் மேலான அன்னைத்தமிழ் & அவரது புலவர்கள்!!

பொருந்துதலைச் சங்கப் புலவர்தமைப் போலே
விரிந்தபுகழ்க் கூடலிலே மேவி - அரும்தமிழை
ஆய்ந்தமலை பார்மீதில் ஐந்துஎழுத்தன் ஆகிவந்து
வாய்ந்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #65

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

கடல்கொண்ட தென்மதுரையில் நடந்த முதல் தமிழ்சங்கத்தில் அன்னைத்தமிழை, தகுதியான புலவர்களோடு ஆராய்ந்த சிவபெருமானையும் 🌺🙏🏽, தனது மெய்யாசிரியரான திரு குகை நமச்சிவாயப் பெருமானையும் 🌺🙏🏽 போற்றுகிறார் ஆசிரியர்.

இங்கு சிவபெருமான் எனில் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 போன்ற மெய்யறிவாளர் என்று பொருள்.

அந்த மெய்யறிவாளர் எப்படி நம் நிறைமொழியை ஆராய்ந்தாராம்? தமிழ் சங்கத்திலே அங்கம் வகித்த தகுதியான புலவர்களைப் போன்று ஆராய்ந்தாராம்!! உலகின் வேறெந்த கலாச்சாரத்திலும் இப்படியொரு நடைமுறை இருந்திருக்குமா என்று தெரியவில்லை. புலவர்களை இறைவனுக்கும் மேலானவர்களாக சித்தரிக்கும் உரிமையை கொடுத்துள்ள இனம் எவ்வளவு பண்பட்டதாக இருந்திருக்கும்! அவ்வாறு மேலானவர்களாக சித்தரிக்கப்படும் புலவர்கள் எவ்வளவு "திரு" உடையவர்களாக இருந்திருப்பர்!! தனது மொழியை எல்லாவற்றிற்கும் மேலானதாக ஒரு இனம் கருதுகிறது என்றால் அந்த மொழி எவ்வளவு மேன்மையானதாக இருக்கும்!!!

நம் அன்னைத்தமிழ் நிறைமொழி மட்டுமல்ல. உண்மையான இறைமொழி. அவரை முறையாகக் கற்றால் அவரே நிலைபேற்றினை நமக்கு கொடுத்துவிடுவார்!

அந்நிய இனத்தின் ஊடுறுவல், இருள் மதங்களின் படையெடுப்பு (சமண, பௌத்த மற்றும் பௌத்தத்திலிருந்து தோன்றியவைகளும் சேர்த்து), தகுதியற்றவர்களின் கையில் ஆட்சி, அதிகாரம் & அனைத்திலும் முன்னுரிமை, பகுத்தறிவு என்னும் பெரும் தீநுண்மி ... இத்தனைக்குப் பிறகும் நமது மொழியும், அடையாளங்களும் இன்னமும் பெயரளவிலாவது இருக்கிறதென்றால் அது நம் முன்னோர் செய்த நல்வினைகளும், விட்டுச்சென்ற உறுதியான கட்டமைப்பும் தான் காரணம். 🙏🏽🙏🏽🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, August 30, 2020

"பசுவின் பின்புறத்தில் மலர்மகள் வசிக்கிறார்" என்பதின் பொருள்...

"பசுவின் பின்புறத்தில் மலர்மகள் வசிக்கிறார்" என்பதின் பொருள்:

🔸பசுவின் பின்புறம் சாணம் வெளிவரும்
🔸 இந்த சாணத்தை மக்க வைத்து நிலத்திற்கு உரமாக இட்டால் விளைச்சல் பெருகும்
🔸 விளைச்சல் பெருகினால் வருமானம் - செல்வம் - பெருகும்
🔸 செல்வம் என்பது மலர்மகள்
🔸 பின்னே சென்றால்: மலர்மகள் <- செல்வம் <- விளைச்சல் <- சாண உரம் <- பசுமாடு

எனவே, பசுமாட்டின் பின் பகுதி மலர்மகள் வசிக்குமிடம் என்றார்கள்!!

oOOo

"மலர்மகள் இப்பிறவியில் செல்வவளமும், பிறவி முடிந்த பின் விடுதலையும் தருபவர்" என்பதின் பொருள்:

முதலில், மலர்மகளின் தோற்றத்தைப் பார்ப்போம். பாற்கடலைக் கடையும் போது இறுதியாக வெளிவந்தவர் மலர்மகள் என்று படித்திருப்போம்.

🔸 பாற்கடல் - நமது உடல்
🔸 கடைதல் - கடும் வடக்கிருப்பு

வடக்கிருப்பின் தொடக்கத்தில் பல குப்பைகள் நம்முள்ளிருந்து வெளிவரும். சில புதிய ஆற்றல்கள் கூட நமக்கு கிடைக்கும். இவையனைத்தும் மூத்தவள் - மூத்தாயி - மூதேவி (ஆரியத்தில், ஜேஷ்டாதேவி) எனப்படும். இவற்றை ஒதுக்கி, மேலும் தொடர்ந்தால், இறுதியில் மெய்யறிவு கிடைக்கும். இம்மெய்யறிவே இளையவள் - சின்னாயி - நப்பின்னை (பின்னே வந்தவர் - நல்ல பின்னை) - மலர்மகள் (ஆரியத்தில், ஸ்ரீதேவி) - செல்வமகள் (ஆரியத்தில், லட்சுமி) எனப்படும்.

இந்த மெய்யறிவை விடாப்பிடியாக இறுகப் பற்றிக்கொண்டால் நிலைபேற்றில் முடியும். இடையில் படைப்பின் பல புதிர்கள் திறக்கப்படலாம். இவற்றைத்தான் "இப்பிறவியில் செல்வவளமும்" என்ற சொற்றொடர் குறிக்கிறது.

மெய்யறிவில் நிலைபெற்ற ஒருவர் பிறவிகளைப் பற்றி சிந்திக்கப்போவதில்லை. அவர் ஏற்கனவே விடுதலை அடைந்தவர் தான். இருந்தாலும், தற்போதைய பிறவி முடிந்த பின், இறுதித் தளையான உடலும் விலகுவதையே விடுதலை (ஆரியத்தில், மோட்சம்) என்றழைக்கின்றனர். இறப்பின் போது எல்லோருக்கும் தான் உடல் விலகுகிறது. மெய்யறிவில் நிலை பெறாதவர் அடுத்த பிறவியில் சிக்கிக் கொள்கிறார். நிலைபெற்றவர் விடுதலையடைகிறார். இதனால் தான் மெய்யறிவை (மலர்மகளை) "பிறவி முடிந்த பின் விடுதலையும் தருபவர்" என்று போற்றுகின்றனர்.

இறுதியாக, மெய்யறிவு என்றால் என்ன? நம்மைப் பற்றிய அறிவு. நாமே உள்ளபொருள் என்ற அறிவு. இதுவரை நாம் தேடியது நம்மையே என்ற அறிவு.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, August 29, 2020

கங்கை = வடக்கின் காவிரி, திரிவேணி சங்கமம் = உத்திரபிரதேசத்தின் கூடுதுறை!!

"பாரதத்தின் மான்செஸ்டர்", "பாரதத்தின் டெட்ராய்ட்" என்று அழைப்பதெல்லாம் எவ்வாறு அடிமைத்தனமாகுமோ அவ்வாறே "#தட்சிண #கங்கை", "#தமிழகத்தின் #திரிவேணி" என்று அழைப்பதுமாகும்.

💥 "உலகின் எந்த நதிக்கரையில் அதிக மாமுனிவா்கள் சமாதி கொண்டுள்ளனர்?" என்ற கேள்வியெழுந்தால் நமது #காவிரி அன்னையே முதலிடம் பெறுவார்! எண்ணற்ற மாமுனிவர்கள் அவரது பயண வழியில், அவரது கரைகளில் சமாதி கொண்டுள்ளனர். இந்த புனிதக் கணக்கின் அடிப்படையில் பார்த்தால் கங்கையன்னை தான் "வடக்கின் காவிரி" என்றழைக்கப்படவேண்டும்.

💥 #பவானி (#திருநணா) கூடுதுறையில் திரு அளகேசப் பெருமான் (திரு #சங்கமேஸ்வரர்) 🌺🙏🏽 குடி கொண்டுள்ளார். திருஞானசம்பந்தப் பெருமானின் 🌺🙏🏽 தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம். (#அளகேசர் எனும் சிவ அடையாளத்தின் கீழ் சமாதி கொண்டுள்ள மாமுனிவர் யாரென்று தெரியாவிட்டாலும், இத்திருத்தலம் ஒரு மாமுனிவரின் சமாதி என்பதில் எந்த ஐயமும் இல்லை) இது போன்று எந்த மாமுனிவரும் #பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் குடி கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. எனவே, மீண்டும் புனிதக் கணக்கின் படி, திரிவேணி சங்கமம் தான் "உத்திரபிரதேசத்தின் கூடுதுறை" என்றழைக்கப்படவேண்டும்!

💥 கங்கையன்னை பனிப்பாறையிலிருந்து வருகிறார். காவிரியன்னையோ ஊற்றிலிருந்து வெளிவருகிறார். எப்போதுமே ஊற்று நீருக்கு தான் மதிப்பு அதிகம்!

oOOo

கங்கையன்னையை மட்டம் தட்டுவது எனது நோக்கமல்ல. "நமது அடையாளங்கள் யாருக்கும் எதற்கும் இரண்டாவதல்ல" என்று உரக்கச் சொல்வதே எனது நோக்கம். 🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #64

கூனல் சிறுபிறையைக் கோள்அரவுக்கு அஞ்சாமல்
வான்அப்பு அணிசடைமேல் வைத்தமலை - ஞானச்
சரதமலை ஆனந்தத் தாண்டவத்துக்கு ஏற்ற
வரதமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #64

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸கூனல் சிறுபிறையைக் ... வைத்தமலை

சிவபெருமானின் திருவுருவைப் பற்றி பாடுகிறார் ஆசிரியர். பெருமான் என்பது நிலைபேற்றை அடைந்த ஒரு மெய்யறிவாளருக்கு சமம். எனில், அவரது திருவுருவத்தில் இருக்கும் பொருள்கள் மெய்யறிவாளரின் உள்ளநிலை மற்றும் அவரிடம் காணப்படும் பண்புகள், இயல்புகள் & தன்மைகளைக் குறிப்பவையாகும்.

🔸ஞானச் சரதமலை - மெய்யறிவில் உறுதியாய் உள்ள மலை அல்லது மெய்யறிவை உடலாகக் கொண்ட மலை

🔸ஆனந்தத் தாண்டவத்துக்கு ஏற்ற வரதமலை

ஆனந்த - ஆ+நந்த - எல்லையில்லா / முடிவற்ற.

ஆனந்த தாண்டவம் - எல்லையில்லா / மரணமில்லாப் பெருவாழ்வு - நிலைபேறு.

வடக்கிருந்து நிலைபேற்றினை அடைவதற்கு ஏற்ற இடம் திருவண்ணாமலை என்கிறார் ஆசிரியர்!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

Friday, August 28, 2020

"பசுவுக்கு அகத்திக்கீரை, பழம் கொடுங்கள்" என்பதின் பொருள்

🐂 பசு - மெய்யறிவு பெறாதவர்கள். உலக வாழ்க்கையில் சிக்கிக்கொண்டிருக்கும் மனிதர்கள்.

🌿 அகத்தி - அகம் + தீ - மெய்யறிவு. பல பிறவிகளாக, பன்நெடுங்காலமாக உடலையும், உலகையும் உண்மை என்று கருதிக் கொண்டிருப்பவர்களை மாற்றுவது எளிதல்ல. அவர்களுக்கு சிறிது சிறிதாக, ஆனால், தொடர்ந்து மெய்யறிவைப் பற்றி எடுத்துக்கூறவேண்டும். இதனால் தான், "தினம் ஒரு கட்டு வாங்கிக் குடுங்க" என்றார்கள். "ஒரு செமை" என்று சொல்லவில்லை.

🥭 பழம் - நாம் கேள்விப்படுவதை எல்லாம், நமக்கு தோன்றுவதையெல்லாம் மற்றவர்களிடம் தெரிவிக்கும் முன், அவற்றைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு, சோதித்துப் பார்த்துவிட்டு, துய்த்தும் பார்த்து விட்டு மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

"பசுவுக்கு அகத்திக்கீரை..." என்ற சொற்றொடரின் உட்பொருளைப் புரிந்து கொள்ளாமல், அகத்திக்கீரை சாகுபடியை வளர்த்துவிட்டார்கள்! பல மாடுகளை, தினமும் அதிகாலையில், கீரை கொடுக்கப்படும் இடங்களில் வடக்கிருக்க வைத்துவிட்டார்கள்!! 😁

oOOo

Thursday, August 27, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #63 - அடி முடி காணா அண்ணாமலையார் - சிறு விளக்கம்

அண்டமுழு தும்பறந்தே அன்னஉரு வாய்த்தேடி
மண்டலம்எ லாம்கோல மாய்த்தேடிப் - புண்டரிகன்
சீர்க்கமலை கோன்அறியாத் தெய்வச் சிவஞான
மார்க்கமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #63

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

மீண்டும் ஒரு முறை திருவண்ணாமலை தலவரலாற்றில் வரும் "அடி முடி காணா அண்ணாமலையார்" படலத்தைப் பற்றி பாடுகிறார் ஆசிரியர். (அன்னம் - நான்முகன், கோலம் - பன்றி - பெருமாள்)

"நான்முகனாலும் மாயோனாலும் இறைவனைக் காணமுடியவில்லை" எனும் உவமையைக் கொண்டு 2 பொருள்களைப் பெறுவர்:

1. கல்வியாலும் (குறிப்பாக, மெக்காலே கல்வியால் 😊) செல்வத்தாலும் மெய்யறிவைப் பெறமுடியாது

2. புத்தியாலும் ஆணவத்தாலும் இறைவனை உணரமுடியாது

உவமையில் வரும் மேல் - கீழ் என்பதை வெளி - உள் என்று மாற்றிக்கொண்டால் இன்னொரு பொருளும் கிடைக்கும்.

பூமி என்பது மண். மண் என்பது நம் உடல். "பெருமாள் பூமிக்குள் சென்று தேடினார்" என்பது நாம் நமக்குள் இறைவனைத் தேடுவதற்கு சமம். நான்முகன், பெருமாள் சென்ற திசைக்கு எதிரில் சென்றிருப்பார். எனில், உடலுக்கு வெளிப்புறம் என்று பொருள். இது, நாம் உலகிற்குள் இறைவனைத் தேடுவதற்கு சமம். இருவரும் தோற்றார்கள். அதாவது, இறைவன் உடலினுள்ளும் இல்லை. வெளியேயும் இல்லை. பிறகு, எவ்வாறு இறைவனை அடைவது?

உவமையில் மீதமிருக்கும் கதாபாத்திரமான சிவபெருமான் வழிகாட்டுகிறார். தொடக்கமும் முடிவும் இல்லாத ஒரு நெருப்புத் தூணாக நின்றிருப்பார். இறைவனை அடைய நாம் செய்யவேண்டியது தேடுவதல்ல. இருத்தல்!! நாமாக - தன்மையுணர்வாக - இருக்கவேண்டும். "தானாய் இருத்தலே தன்னையறிதலாம்" என்பது பகவான் திரு ரமணரின் 🌺🙏🏽 வாக்கு.

உவமை உணர்த்தும் மூன்றாவது பொருள்: இறைவன் உடலினுள்ளும் இல்லை. வெளியேயும் இல்லை. இறைநிலையை அடைய நாம் செய்ய வேண்டியதெல்லாம் நாமாக இருத்தலே!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

Sunday, August 23, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #62 - பிட்டுக்கு மண் சுமந்த படலம், கூத்தப்பெருமான் - சிறு விளக்கம்

பண்அடுத்த கூடல் பழம்பதியில் பிட்டமுதை
உண்ணடுத்து வைகை உடையாமல் - மண்எடுத்துப்
போடுமலை சந்ததமும் பொன்னம் பலத்தில்நடம்
ஆடுமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #62

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

சிவப்பரம்பொருள், பழமையான மதுரை மாநகரில் சொக்கநாதப் பெருமானாக பிட்டுக்கு மண் சுமந்த படலத்தையும், தில்லையில் கூத்தப்பெருமானாக திருநடனம் புரிவதையும் போற்றிப் பாடுகிறார் ஆசிரியர்.

🔸#பிட்டுக்கு #மண் #சுமந்த #படலம்

🔹பிட்டு - இவ்வுலகில் நமக்கு கிடைக்கும் அனைத்து துய்ப்புகள்

🔹சுமக்கும் மண் - நமது உடல். "மண்ணினாய விகாரமும் மண்ணே" என்பது கண்ணபிரானின் 🌺🙏🏽 வாக்கு. உடல் எப்படி உருவானது? உணவிலிருந்து. உணவு எங்கிருந்து கிடைத்தது? தாவரங்களிடமிருந்து (அசைவம் எனில் தாவரம் -> விலங்கு -> மனித உடல்). தாவரம் எங்கிருந்து உருவானது? மண்ணிலிருந்து. ஆக, உடல் = மண்.

மண்ணை (உடலை) சுமந்து என்ன பெறுகிறோம்? வாழ்க்கை எனும் ஒரு சொல்லில் அடங்கும் பலவிதமான துய்ப்புகள். இந்த துய்ப்புகள் எனும் பிட்டுக்காக மண்ணைச் சுமக்கிறோம். எப்போது "இனி, பிட்டு வேண்டாம்" என முடிவெடுத்து அசைவற்று நிற்கிறோமோ (தன்மையுணர்வில் நிலை பெறுகிறோமோ) அதன் பிறகு மண்ணைச் சுமக்க வேண்டியிருக்காது.

🔹பெருமானின் மீது பட்ட பிரம்படி அனைத்துயிர்களின் மீதும் படுவது - எல்லோருக்குள்ளும் இருப்பது ஓர் இறைவன் தான் என்பதைக் குறிக்கிறது. படைப்பு என்பது நீரில் தோன்றும் குமிழிகள் போன்றது. குமிழிகள் பலவாக இருந்தாலும், எல்லாம் நீர் தான்.

#பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽 அருளுகிறார்: ... பொருட்களை, அவற்றின் உருவங்களையும், பெயர்களையும் கொண்டு வேறுபடுத்தி அறியலாம். ஆனால், மனிதர்களைப் பொறுத்தவரையில், எல்லோரும் தங்களை ஒரே பெயரில் தான் அறிகிறார்கள். அப்பெயர்... "நான்"! யாரை வேண்டுமானாலும் கேட்கலாம். ஒவ்வொருவரும் தன்னை "நான்" என்றே உணர்கிறார். சிவபெருமானேயானாலும் அவரும் தன்னை "நான்" என்றே உணர்கிறார். ... (பகவத் வசனாம்ருதம் - #582)

🔸#கூத்தப்பெருமான் திருநடனம் புரியும் தில்லை பொன்னம்பலம்

🔹பொன்னம்பலம் என்பது திருமூலர் 🌺🙏🏽 மற்றும் அவரது வழிச்சென்ற சிலரது 🌺🙏🏽 சமாதித் தொகுப்பாகும்.

🔹கூத்தப்பெருமான் என்பது நம்மைப் பற்றிய மெய்யறிவைக் கொடுக்கும் மெய்யாசிரியர், அவ்வறிவில் நிலைபெற உதவும் நல்ல துணைவன், நிலைபெற்ற பின் இவ்வுலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் நல்வழிகாட்டி!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮